Saturday, 22 November 2014


வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளருக்கு அபராதம் விதிப்பதற்கு முன்பு, அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து, போதுமான இருப்பு தொகை செலுத்தும் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.
வங்கி கணக்கில் வாடிக்கையாளர் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகை அந்தந்த வங்கிக்கு ஏற்ப மாறுபடும். வங்கிகளில் கணக்கு துவக்கும்போதே, குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பதை வாடிக்கையாளருக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கூறியிருந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையில், வாடிக்கையாளரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில கொள்கைகள் வகுக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தது.
இதன்படி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. இதன்படி, கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் பிடித்தம் செய்வதற்கு முன்பாக, கணக்கில் இன்னும் ஒரு மாதத்தில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பதை அவர்களுக்கு எஸ்எம்எஸ், இ&மெயில் அல்லது கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு கீழ் குறையும்போது, நிலுவை தொகைக்கு ஏற்ப அபராதம் விதிப்பது பற்றி வங்கி இயக்குனர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்ய வேண்டும். கணக்கு துவங்கியபோது ஒப்புக்கொண்ட விதிமுறைகளின்படி இது இருக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்படும் அபராத தொகை, வங்கி சேவைகளுக்கு வசூலிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருக்க கூடாது. இந்த விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகின்றன. அதுவரை, வாடிக்கையாளரின் மொபைல் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்களை வங்கி சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. தாமோதரன் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ரிசர்வ் வங்கி குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவையை போதுமான இருப்பு தொகை சேரும் வரை நிறுத்தி வைக்கலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


-தினகரன்.

0 comments:

Post a Comment