பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இந்த முடிவின்படி அரசு மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் எல்லாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டு இருப்பதும் இந்த கொள்கையின் அடிப்படையில் தான். இது தவிர ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்ததற்கு ஏற்ப தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை அப்போது இருந்த தி.மு.க. அரசு வெளியிட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க வேலைகளும் நடந்தன. 2011-ம் ஆண்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தான் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் பொறுப்பு டீன் ஆக நியமிக்கப்பட்டார். ஆனால் காலச்சுழற்சியினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே துறையூர் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 70 டாக்டர்கள், 100 செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக(பொறுப்பு) உள்ள அனிதா தான் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அமைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த சமயத்தில் விபத்தின் போது தலையில் படுகாயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எந்திரம் மருத்துவமனையில் இல்லை. மேலும் தீக்காயத்துடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்கவும், மூளைநரம்பியல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றுக்கும் நவீன வசதிகள் இல்லை. புற்றுநோய் பாதிப்பு குறித்து டாக்டர்கள் கண்டறிந்தாலும், நோயாளிகளின் சதைக்கூறு செல்லினை ஆய்வு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிமுறைகளை கூறி சிகிச்சைக்காக பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி கட்டு வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகளை தொடங்கி அதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கவேண்டும். கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி தொடங்குமா? என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு தமிழக அரசு சரியான பதில் அளிக்க வேண்டும்.
RSS Feed
Twitter
Tuesday, July 25, 2017
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment