Friday, 3 January 2014



மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                    எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்  பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2008க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.  மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.
மேலும் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு 50.000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ/மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.
மனுதாரர்கள் தங்களின்  அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வருகை தந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக  பூர்த்தி செய்து  படிவங்கள் 28.02.2014க்குள் அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கலாம்.   இந்த வாய்ப்பை தகுதியுடையோர் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

0 comments:

Post a Comment