Friday, 15 August 2014


திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கடந்த ஜூன் மாதம் 18–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடலூரைச் சேர்ந்த காஜாமொய்தீன்(வயது 45) கைது செய்யப்பட்டான்.
அவனது தூண்டுதலின் பேரில் கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத், மூகாம்பிகைமணி ஆகியோரை தீர்த்துக்கட்ட சதிதிட்டம் அரங்கேறுவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் வந்தது.
சதிதிட்டத்தில் ஈடுபடுவோரை உடனே கைது செய்ய கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கோவையைச் சேர்ந்த நவுசாத்(25), அசாருதீன்(36), ரகமத்துல்லா(34), அப்துல்ரசீது(29), சதாம் உசேன்(26), அப்துல் ரகுமான் உமரி(39) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:–
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் காஜாமொய்தீன் மூளையாக செயல்பட்டார். கொலை சம்பவத்துக்குப் பின்னர் காஜாமொய்தீன் திருப்பூர் வந்தார். அங்கு அசாஉல்லா என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் கோவை வந்த அவர் செல்வபுரத்தில் தங்கினார். அங்கு அவரை நாங்கள் சந்தித்தோம்.
அப்போது அவர் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவோரை தீர்த்துக்கட்டுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். நாங்கள் திட்டமிட்ட சுரேஷ்குமாரை தீர்த்துக்கட்டி விட்டோம். நீங்கள் கோவையில் நமக்கு எதிராக உள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மூகாம்பிகை மணி ஆகியோரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்றார்.
அவரது வேண்டுகோளை ஏற்று நாங்களும் அதற்கான நடவடிக்கையில் இறங்கினோம். அதற்குள் எங்களை போலீசார் கைது செய்து விட்டனர்.காஜா மொய்தீன் முஸ்லிம் இளைஞர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றி விளக்கம் அளிப்பதில் திறமையானவர். அவரது பேச்சை கேட்க வரும் இளைஞர்களிடம் ‘உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள். நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்பார்.
அப்போது வேலை இல்லாத வாலிபர்கள் வேலை வேண்டும் என்பார்கள். சிலர் பண உதவி வேண்டும் என்பார்கள். அவற்றை எல்லாம் காஜாமொய்தீன் உடனே செய்து கொடுப்பார். பின்னர் அவர்களிடம் ‘நீங்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று கூறி மூளைச்சலவை செய்வார்.
நக்சலைட்டுகளை பாருங்கள். அவர்கள் சிறிய இயக்கமாக இருந்து கொண்டு எப்படி அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள். அதேபோல் நாமும் நமக்கு எதிரானவர்களை அழிக்க வேண்டும். மற்றவர்கள் நம்மைப்பார்த்து பயப்பட வேண்டும் என்பார். அப்படி சொல்லிச்சொல்லியே மூளைச்சலவை செய்வார்.
அப்படி மூளைச் சலவை செய்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரை தீர்த்துக்கட்டினார்கள். அடுத்தகட்டமாகத்தான் எங்கள் 6 பேரை தேர்வு செய்தார். எங்களிடம் அர்ஜுன்சம்பத், மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார்.
காஜாமொய்தீன் தான் தேர்ந்தெடுக்கும் நபர்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளவர்களை சிரியா நாட்டுக்கு தீவிரவாத பயிற்சிபெற அனுப்பி வைப்பார். அதன்படி சுரேஷ்குமாரை கொன்றவர்களில் ஒருவரையும், எங்களில் அசாருதீனையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.
மேலும் கோவை, சென்னை, குமரி பகுதியிலும் சிலரை தேர்வு செய்திருந்தார். அவர்களை சிரியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் மும்முரமாக இருந்தார். இதற்கு முன்னர் காஜாமொய்தீன் சிரியாவுக்கு யாரையாவது தீவிரவாத பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளாரா? என்று தெரியவில்லை.
மேற்கண்ட அதிர்ச்சி தகவலை அவர்கள் கூறியுள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னர் அவர்கள் 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஜாமொய்தீனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் மேலும் பல விவரங்கள் தெரியவரும். அதற்காக கோவை போலீசார் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

-thinathanthi.

0 comments:

Post a Comment