Tuesday, 24 May 2016


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆட்சியர் க. நந்தகுமாரிடம் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துள்ளது. மேலும், பல ஏரி, குளங்களில் சீமைக்கருவேல மரங்களும், நாட்டுக் கருவேல மரங்களும் வளர்ந்து அடர்ந்துள்ளது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்துவிட்டது. நீர்நிலைகளுக்கு மழைநீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர்நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாக்க வேண்டும்.
ஏரி, குளங்களின் உண்மையான பரப்பளவு, நீர் வழித்தடங்கள் ஆகியவை அளவிடப்பட்டு, அதன் முழுமையான பரப்பளவை மீட்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஏரி, குளங்களின் பரப்பளவுடன் கூடிய தகவல் பலகையை அப்பகுதியில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி, வேளாண்மையை வளப்படுத்தி, விளைச்சலை அதிகரிக்கவும், செயற்கை உரங்களின் நச்சுப் பிடியிலிருந்து விடுபடவும், ஏரி, குளங்களின் வண்டல் வீழ்படிவினை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவும், வண்டல் மண் எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நந்தகுமார், ஏரி, குளங்களில் எந்தெந்த வாகனத்தின் மூலம் மண் அள்ளப்படுகிறது என்பதை முன்கூட்டியே மாவட்ட நிர்வாத்திடம் தகவல் அளித்துவிட்டு, விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்றார் அவர்.

-தினமணி.

0 comments:

Post a Comment