வீர சாவர்கர் |
வீர சாவர்க்கர் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், நவீன மராத்தி இலக்கிய முன்னோடி, அரசியல் தலைவர் என்று பல பரிமாணங்கள் கொண்ட ஒரு மாபெரும் பன்முக ஆளுமை ஆவார். அவரது படைப்புகளின் கணிசமான பகுதிகள் மராத்தி மொழியிலேயே உள்ளன. அவை இன்னும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் படவில்லை என்பதால் இந்தப் பரிமாணங்கள் குறித்து அதிகம் பேசப் படுவதில்லை. சமூக சீர்திருத்தங்களில் அவரது மகத்தான பங்களிப்பு குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.
1910ல் லண்டனில் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசு வீர சாவர்க்கரைக் கைது செய்து அந்தமானுக்குக் கப்பலில் கொண்டு சென்றது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே மிக அதிகமான 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை அவருக்கு வழங்கப் பட்டது. அந்தமான் இருட்சிறையில் சொல்லொணாக் கொடுமைகளை அவர் சகிக்க நேர்ந்தது. மக்கள் போராட்டங்கள் தந்த அழுத்தத்தால் 1921ல் அந்தமான் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டு 1924 வரை அலிப்பூர், ரத்னாகிரி, எரவாடா சிறைகளில் அடைக்கப் பட்டார். பின்னர் விடுவிக்கப் பட்டு, நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற உத்தரவாதத்துடன் ரத்னாகிரிக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை என்ற நிலையில் 13 ஆண்டுகள் காவலில் வைக்கப் பட்டார். வாழ்நாள் முழுவதுமே சமுதாய சமத்துவத்திற்காப் போராடியவர் தான் அவர். ஆயினும் குறிப்பாக 1924 முதல் 1937 வரையிலான இந்தக் காலகட்டத்தில் அவரது பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருந்தது. சமூக சமத்துவம் குறித்த சிந்தனைகளை தொடர்ந்து தன் எழுத்துக்களில் வடித்தார். நேரடியாக களப்பணிகளிலும் ஈடுபட்டார்.
அக்கால கட்டத்தில் இந்திய தேசபக்த அரசியல் தலைவர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் இரு தனித்தனி பிரிவுகளாக இயங்கினார்கள். தேச விடுதலையே முதல் இலக்கு என்று பால கங்காதர திலகரும், சமூக விடுதலையே அதைவிட முக்கியமானது என்று கணேஷ் கோபால் அகர்கரும் முழங்கினர். இந்த இரு இழைகளையும் இணைப்பதாக சாவர்கரின் சிந்தனை அமைந்திருந்தது.
ஜாதி ஒழிப்பு கட்டுரைகள் (Jatyuchchedak Nibandh), அறிவியல் நோக்குக் கட்டுரைகள் (Vignan-nishtha Nibandh), எஸ்க் ரே கதிர்கள் (Ksha kirane), சமூக சித்திர சிறுகதைகள் (Samaj Chitre), ஹிந்துத்துவத்தின் உயிர்மூச்சுகள் (Hindutvache panchapran) ஆகிய நூல்களை அவர் எழுதினார். தீண்டாமை, பெண்கள் மீதான வன்முறை, ஆசாரவாதிகளின் போலித் தனம், தாய்மதம் திரும்புதல் ஆகிய களங்களை முன்வைத்து “சாபத்திற்கு மாற்று” (Ushaap) என்ற அற்புதமான நாடகத்தையும் படைத்தார். அறிவுஜீவியாக மட்டும் நின்றுவிடவில்லை அவர். “என் தெய்வத்தை இந்தக் கண்களால் தரிசிப்பேன், நெஞ்சாரக் கண்டு களிப்பேன்” – மகாராஷ்டிரம் முழுவதும் ஆலய பிரவேச இயக்கங்களில் பிரபலமாக பாடப் பட்ட இது போன்ற எளிய, உணர்ச்சியூட்டும் பாடல்களையும் எழுதினார்.
அம்பேத்கருக்கும் முன்பே, சாதி அமைப்பு குறித்து அறிவியல் பூர்வமான தேடல்களை தனது நூல்களில் முன்வைத்தவர் சாவர்க்கர். தாழ்த்தப் பட்ட மக்களைக் குறிக்க ஹரிஜன், தலித் ஆகிய சொற்களை விடவும், முன்னாள் தீண்டத்தகாதவர் (பூர்வ-அஸ்ப்ருஷ்ய) என்பதே பொருத்தமானது எனக் கருதி, அவ்வாறே தன் எழுத்துக்களில் அவர் பயன்படுத்தினார். “ஸ்மிருதிகள் உருவாக்கிய சாதியம் என்பது சமூக மேல் அடுக்கிலுள்ள பிராமணர், க்ஷத்தியர் ஆகியோரிடம் மட்டுமல்ல, எல்லா சமூக நிலைகளிலும் இருக்கிறது. “பங்கி” (தோட்டி) சமூகத்துக் காரன் “டோம்” (மற்றொரு தாழ்த்தப் பட்ட சாதி) சமூகத்தவனிடம் தனது மேட்டிமையை நிறுவுகிறான். எல்லா சமூகங்களும் மோசமான இந்த சமூக அடுக்கு முறையைப் பாதுகாத்து வந்துள்ளன. இதை சீர்திருத்துவதற்கான பொறுப்பும் எல்லா சமூகங்களின் தோள்கள் மீதும் உள்ளது” என்று 1935ம் ஆண்டே அவர் எழுதுகிறார் [1].
“புனித நூல்களின் அடிப்படையிலான சாதியம் என்பது ஒரு மனநோய். நமது மனம் அதை ஏற்க மறுத்துவிட்டால், அடுத்த கணமே அந்த நோயிலிருந்து விடுபட்டு விடுவோம்” என்று அறைகூவுகிறார் [2]
1935ம் ஆண்டு அனைத்து இந்துக்களையும் நோக்கி, அவர் விடுக்கும் கோரிக்கை –
“எழுங்கள். மற்றவர்கள் செய்கிறார்களோ
இல்லையோ, இன்றிலிருந்து நீங்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.
நாய்களையும் பூனைகளையும் தொட்டு உறவாடும் அந்தக் கைகளால், எனது தர்ம
சகோதரராக உள்ள அந்தத் தீண்டாதாரையும் தொடுவேன்; இன்று அப்படி செய்ய
முடியவில்லை என்றால் பட்டினி கிடப்பேன் என்று விரதம் பூணுங்கள். பொது
இடத்தில் ஒரு தீண்டத்தகாத சகோதரனைத் தொட்டு அணைப்பதன் மூலம், இந்து
சமுதாயத்தை தீண்டாமை என்னும் பெரிய சாபத்திலிருந்து விடுவிப்பதற்கான
வரத்தின் ஒரு துளியை நீங்கள் பெறுகிறீர்கள்! மற்ற எல்லாருக்கும் போல
அவர்களுக்கும் உங்கள் வீடுகளையும், கிணறுகளையும் திறந்து வையுங்கள்.
பொதுவில் ஒரு தீண்டாத சகோதரனுடன் இப்படி ஒட்டி உறவாடாமல் உங்களது ஒரு நாள்
கூட கழியக் கூடாது”. [3]
தங்களது உரிமைகளைக் கோரியும், தங்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளைத்
தட்டிக் கேட்டும் தாழ்த்தப் பட்டவர்கள் நடத்தும் அனைத்து சிவில்
போராட்டங்களும் முற்றிலும் நியாயமானவையே என்று தனது நூல்களில் தொடர்ந்து
வலியுறுத்தி வந்தவர் சாவர்க்கர்.இந்துத்துவ அரசியலுக்கு ஆள் சேர்ப்பதற்காகவே இந்த சமுதாய சமத்துவ கருத்துக்களை சாவர்க்கர் முன்வைத்தார் என்ற விமர்சனம் அர்த்தமற்றது. அவரது சிந்தனையின் பின் நின்றது அறிவார்ந்த மானுட நேயம் மட்டுமே.
“நமது மதத்தைச் சார்ந்த 7 கோடி மக்களை
மிருகங்களுக்கும் கீழாக நடத்துவது மானுடத்தின் மீதான களங்கம் மட்டுமல்ல.
நமது ஆத்மாவின் மீது படிந்துள்ள களங்கமாகும். அதனால் தான் தீண்டாமையும்
சாதியமும் வேரோடு அழிக்கப் படவேண்டும் என நான் நம்புகிறேன். ஆம், இந்து
சமுதாயத்தின் நலனுக்காக அது ஒழிய வேண்டும் தான். ஆனால், இந்தப்
பழக்கத்தினால் இந்து சமுதாயத்திற்கு ஏதேனும் கொஞ்சம் பலன் உண்டு என்று
இருந்தாலும் கூட, இதே தீவிரத்துடன் அதை நான் எதிர்த்திருப்பேன். ஏனென்றால்
மற்றொரு மனிதனை அவனது பிறப்பைக் காரணம் காட்டி அவமதிப்பது என்பது மனித
குலத்துக்கே எதிரான குற்றம்.. அந்தக் குற்றத்தை ஒழிப்பதே தர்மத்திக்கும்,
நீதிக்கும், மனிதப் பண்புக்கும் உகந்த செயலாகும்”
என்று உறுதிபடக் கூறுகிறார் [4].இனமேன்மை, பிறப்பு அடிப்படையிலாத சாதி மேன்மை போன்ற கருத்தாங்களை அறிவியல், மதம் என்று பல்வேறு புனிதப் பூச்சுகளுடன் நியாயப் படுத்துபவர்களை நோக்கி, சாட்டையடி போல கீழ்க்கண்ட வாசகங்களை சாவர்க்கர் எழுதுகிறார் -
“மொத்தத்தில், உலகம் முழுவதும் ஒரே இனம்
தான் உள்ளது. மனித இனம். மனித ரத்தம் என்ற ஒரே பொது ரத்தப் பிணைப்பால் அது
வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்குப் புறம்பான மற்ற வாதங்கள் அனைத்தும்,
தற்காலிகமானவை. அவை முழுமையான உண்மைகள் அல்ல. ஒரு இனத்திற்கும் மற்றொரு
இனத்திற்கும் நடுவில் நீங்கள் போடும் செயற்கையான தடைகளை எல்லாம் இயற்கை
உடைத்து எறிந்து கொண்டே இருக்கிறது. ரத்தக் கலப்பு ஏற்படுவதைத் தடுப்பது
என்பது மணலில் கோட்டை கட்டுவது போன்றது. பாலியல் ஈர்ப்பு என்பது எல்லா
தீர்க்கதரிசிகளின் புனித ஆணைகளையும் விட வலிமையானது என்பதை காலம் தொடர்ந்து
நிரூபித்து வந்திருக்கிறது… ஒவ்வொரு மனிதரின் நரம்புகளிலும் மனிதகுலத்தின்
ரத்தம் முழுவதும் உள்ளது என்பதை மட்டுமே நாம் சந்தேகத்திற்கு இடமின்றி
சொல்ல முடியும். வடதுருவம் முதல் தென் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை
ஒற்றுமை என்பதே சத்தியம். மற்றவை அனைத்தும் சார்பு நிலைகள் மட்டுமே” [5]
ரத்னாகிரியில் காவலில் வைக்கப் பட்டிருந்த காலத்தில் அரசியல்
நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பதால் தான் சமூக சீர்திருத்த்த்தில்
சாவர்க்கர் கவனம் செலுத்தினார் என்று சொல்லப் படும் விமர்சனமும்
ஆதாரமற்றது. “ஹிந்துஸ்தானத்தின் மீது படர்ந்திருக்கும் அன்னிய ஆட்சியைக்
கண்டு கொதித்து எப்படி அதற்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டேனோ, அதே போல,
சாதிப் பாகுபாடுகளையும் தீண்டாமையையும் எதிர்த்தும் நான் புரட்சி செய்ய
வேண்டும்” என்று 1920ல் அந்தமான் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில்
சாவர்க்கர் குறிப்பிடுகிறார்.
சிறையில் சாவர்கர் |
வீர சாவர்க்கரின் கீழ்க்கண்ட பிரகடனம் எப்படி அவரது உள்ளத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் இந்து ஒற்றுமையும் சமுதாய சமத்துவமும் நிறைந்திருந்தன என்று காட்டுகிறது.
“எனது வாழ்நாளில் இந்து சமுதாயத்திலிருந்து
தீண்டாமை என்ற இந்தக் கொடும்பாவம் முற்றாக ஒழிந்து போவதைக் காண்பேன் என்ற
நம்பிக்கை இருக்கிறது.. நான் இறக்கும் போது, எனது சடலத்தை தேண்ட்களும்,
டோம்களும் (தாழ்த்தப் பட்ட சமூகத்தினர்), பிராமணர்களும் பனியாக்களும்
சேர்ந்து சுமந்து வந்து, ஒன்றாக இணைந்து எரியூட்ட வேண்டும். அப்போது தான்
என் ஆத்மா சாந்தியடையும்” [6]
இந்த சீரிய சிந்தனைகளுக்கு சற்றும் குறையாமல் இருந்தன சாவர்க்கரின் அதிரடியான களப்பணிகள். அவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.(தொடரும்)
இந்தக் கட்டுரைக்கான அனைத்து தகவல்களையும் தந்து உதவிய http://www.savarkar.org/ இணையதளத்திற்கு நன்றி.
சான்றுகள்:
[1] 1935, Ksha kirane or X-rays, Samagra Savarkar vangmaya (SSV) 3:178
[2] 1935, SSV 3:497-499
[3] 1935, Hindutvache panchapran or The Spirit of Hindutva, SSV 3: 81
[4] 1927, SSV 3: 483
[5] Essentials of Hindutva, p.30
“After all, there is throughout this world so far as man is concerned but a single race, the human race, kept alive by one common blood, the human blood. All other talk is at best provisional, a makeshift and only relatively true. Nature is constantly trying to overthrow the artificial barriers you raise between race and race. To try to prevent the commingling of blood is to build on sand. Sexual attraction has proved more powerful than all the commands of all the prophets put together… Truly speaking all that one can claim is that one has the blood of all mankind in one’s veins. The fundamental unity of man from pole to pole is true, all else only relatively so.”
[6] Balarao Savarkar; Hindu Samaj Sanrakshak Savarkar, Veer Savarkar Prakashan; Mumbai; 1972, p.67
நன்றி- http://www.tamilhindu.com
0 comments:
Post a Comment