ஒழுங்குமுறை
விற்பனைக்கூடத்தில் 20.12.2013 முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்
பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறும் - மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வருகிற 20 ம் தேதி
வெள்ளிக்கிழமை முதல் வாரந்தோறும் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஏலம்
நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்திக்குறிப்பில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.
பெரம்பலூர்
மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 31,100 எக்டர் பரப்பில் பருத்தி சாகுபடி
செய்யப்பட்டு தற்சமயம் முதிர்ச்சி மற்றும் அறுவடை நிலையில் உள்ளது.
விவசாயிகள் தங்களது பருத்தி மகசூலை வெளி வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால்
எடை குறைவு, குறைவான விலை போன்றவற்றால் அவர்களின் வருவாய் குறைகிறது.
எனவே
விவசாயிகள் பருத்தி மகசூலுக்கு நல்ல விலை பெற வேண்டும் இதன்மூலம் அதிக
வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில்
காந்தி நகரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டு
செயல்பட்டுவருகிறது. இங்கு நடப்பாண்டில் வருகிற வெள்ளிக்கிழமை (20.12.2013)
முதல் ஏலமுறையில் பருத்தி விற்பனை துவங்கப்பட உள்ளது. இந்த விற்பனை
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.
இங்கு
ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 2000 மெ.டன் கொள்ளளவு உள்ள சேமிப்பு
கிடங்கு மற்றும் ரூ.31 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 25 மெ.டன் கொள்ளளவு
கொண்ட குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்கு ஆகிய வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு இலவச தராசு வசதி, சரியான எடைமற்றும் மறைமுக ஏலம் மூலம்
பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் இதன்மூலம் விவசாயிகள் அதிக வருவாய்
பெறமுடியும். மேலும் விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூல்
செய்யப்படுவதில்லை. தரகு, கமிஷன் கிடையாது. பிற சந்தைகளில் நிலவும் விலை
விபரங்களை இங்குள்ள டிக்கர் போர்டு கருவி மூலம் அறிந்து கொள்ளும வசதி
உள்ளது. விலை குறைவாக இருக்கும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை
கிடங்கில் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம்.
விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டுக்கடன் ரூ. 2 லட்சம் வரை
பெறலாம். இவ்வாறு பெறப்படும் கடனுக்கு முதல் 15 நாட்களுக்கு வட்டி இல்லை.
16ம் நாள் முதல் 6 மாதம் வரை மிக குறைந்ந வட்டி (5%) மட்டுமே
பெற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு ஆண்டில் குறைந்தது ஒரு மெ.டன் அளவு
விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விற்பனை செய்யும்
விவசாயிகளுக்கு உழவர் நலத்திட்டத்தின் மூலம் இலவச காப்பீடு
செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விபத்து காலங்களில் ரூ.50,000
முதல் ரூ.1 இலட்சம் வரை காப்பீட்டுத்தொகை பெற முடியும். மக்காச்சோளம் கதிர்
அடிக்கும் கருவி 1மணி நேரத்திற்கு ரூ.96க்கும், ரோட்டவேட்டர் கருவி 1 மணி
நேரத்திற்கு ரூ.23க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
எனவே
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் போன்ற
விளைபொருட்களை வெள்ளிக்கிழமை தோறும் பெரம்பலூர் ஒழுங்குமுறை
விற்பனைக்கூடத்திற்கு கொண்டுவந்து விற்று நல்ல விலையும் அதிக வருவாயும்
பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
0 comments:
Post a Comment