Sunday, 20 April 2014

3. பல துறைகளில் தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குஜராத்துடன் ஒப்பிடும் படியாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளதே..
தில்லி, ஹரியானா, கோவா போன்றவை மிகச் சிறிய மாநிலங்கள். அவற்றை குஜராத்துடன் ஒப்பிட முடியாது. மற்ற பெரிய மாநிலங்களைத் தான் ஒப்பிட முடியும்.
உதாரணமாக, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டை விடவும் வேட் (VAT – Value Added Tax) வரி வருமானம் குஜராத்தில் குறைவாக உள்ளது என்கிறார்கள். ஆனால் அது மேம்போக்கான ஒப்பீடு. இந்த மூன்று மாநிலங்களின் மக்கள் தொகையையும் கணக்கில் எடுத்துக்  கொண்டு,  மதுக் கடைகளினால் வரும் வரி வருமானத்தை கழித்து விட்டுப் பாருங்கள். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் முன்னணியில் இருக்கிறது. எனவே அதிக வரி வருமானம் என்ற பெயரில் தமிழக அரசு காட்டும் கணக்கு என்பது டாஸ்மாக் கடைகளால் சீரழிந்த எத்தனையோ குடும்பங்களின் கண்ணீராலும், இழந்த உயிர்களாலும், சீரழிந்த எதிர்காலங்களாலும் நிரம்பியுள்ளது.
TH-TASMAC_SHOP_1_1621736g
கிராம சுகாதாரம், கிராமக் குடிநீர் விநியோகம் இரண்டிலும் தமிழ்நாடு குஜராத்தை விட நல்ல நிலையில் உள்ளது என்பது உண்மையே. இவற்றை  துரித கதியில் குஜராத் அரசு இப்போது மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்களின் செயல்திறன், எண்ணிக்கை இரண்டிலும் இப்போது தமிழ்நாடு குஜராத்தை விட நல்லநிலையில் உள்ளது தான். ஆனால், மோதியின் அரசு சும்மா இருக்கவில்லை. இந்தப் பிரசினைக்கு முதன்மை அளித்து வேலை செய்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இன்னும் சில வருடங்களிலேயே இவற்றில் தமிழ்நாட்டை குஜராத் மிஞ்சி விடலாம்.
மாநில அரசின் ஒட்டுமொத்த செயல்திறன், அரசாட்சியில் தொழில் நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றில் கட்டாயம் இந்த இரு மாநிலங்களை விடவும் குஜராத் மிகச் சிறப்பாக உள்ளது.
4. குஜராத் எப்போதுமே தொழில் வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் முன்னேறிய மாநிலமாகத் தான் உள்ளது. மோதி பெரிதாக என்ன செய்தார்?
எப்போதுமே என்பது தவறு. 1980களின் நடுப்பகுதி வரை குஜராத்தில் ஓரளவு நல்ல மாநில அரசாட்சி இருந்த்து. பிறகு சீரழிவுக் காலம் தொடங்கியது. 1960ல் தனி மாநிலமாக ஆன குஜராத், 1991ல் முதன்முறையாக நிதிப் பற்றாக்குறை மாநிலம் என்று தன்னை அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. வளர்ச்சி குன்றிய தேக்க நிலை 1998 வரை நீடித்தது. பாஜக ஆட்சியைப் பிடித்து கேசுபாய் படேல் முதல்வரான உடன் தான் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. 2001ல் மோதி முதல்வராகப் பதவியேற்கும் போதும் குஜராத்தின் நிலைமை படுமோசமாகத் தான் இருந்தது. மிகப் பெரும் அழிவையும் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்திய கட்ச் பூகம்பமும் அதனுடன் சேர்ந்து கொண்டது.
ஆனால் மோதியின் அயராத உழைப்பினாலும், சிறந்த அரசாட்சி செயல்பாடுகளாலும், 1991க்குப் பிறகு 2006ல் தான் குஜராத் நிதி மிகை மாநிலமாக ஆகியது. 2007 முதல் 2012 வரையிலான காலத்தில் வருடந்தோறும் சராசரியாக 12 சதவீதம் குஜராத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. எந்த அளவீட்டை வைத்துப் பார்த்தாலும், இது ஒரு அசாதாரணமான சாதனை. மின்சக்தி, எரிசக்தி, விவசாயம், தொழில் உற்பத்தி என்று எல்லாத் துறைகளையும் தழுவியதாக இந்த வளர்ச்சி உள்ளது.
இது முழுக்க முழுக்க மோதியின் அரசியல் தலைமை மற்றும் உழைப்பால் விளைந்தது தான். அப்படி இல்லை என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.
5. மோதி ஆட்சிக்கு என்று தனிச்சிறப்பு ஏதாவது இருக்கிறதா என்ன?  மோதியின் மாடலுக்கும்,  தமிழ்நாடு மாடல், மகாராஷ்டிரா மாடல் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அரசாட்சியின் தரம், அரசின் தொலைநோக்குப் பார்வை, அரசு செயல்படும் முறை இந்த மூன்றிலும் மோதியின் குஜராத் மாடல், மற்ற மாநிலங்களில் இருந்து தனித்து நிற்கிறது.  சொல்லப் போனால், மற்ற மாநிலங்களின் விஷயத்தில் “மாடல்” என்று சொல்லத் தக்க வகையில் அந்த மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்கிறதா, ஏதேனும் புதிய சிந்தனை இருக்கிறதா என்பதே சந்தேகம்.
ஒரு உதாரணத்திற்காக, மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம்.
மகாரஷ்டிரத்திலும் தமிழ்நாட்டிலும் மின்சாரத் துறை என்பதே அரசியல் தரகு வேலைகளுக்கும், வாக்கு வங்கிகளை குஷிப் படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மோதியின் குஜராத்தில், அது நல்லாட்சிக்கான ஒரு உதாரணமாக விளங்குகிறது.  குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகம் லிமிடட் (GUVNL) என்று புதிய பெயர் சூட்டப் பட்டுள்ள குஜராத் மின் வாரியம், இவ்வளவு காலமாக சேர்த்து வைத்திருந்த 2500 கோடி ரூபாய்கள் (2003ம் ஆண்டுக் கணக்குப் படி) நஷ்டத்தை துடைத்தெறிந்து விட்டு, கடந்த சில வருடங்களாக 500 கோடி ரூபாய்களுக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறி இருக்கிறது.
மின்சாரத் திருட்டை  முற்றிலுமாக ஒழித்ததும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கிக் கெடுக்காமல் உரிய கட்டணத்தைச் செலுத்த வைத்துக் காட்டியதுமல்லாமல் அதற்கு அடுத்த தேர்தலில் வெல்லவும் செய்தார் மோதி.  ஆனால், மகாராஷ்டிர, தமிழ்நாடு மாநில ஆட்சியாளர்களுக்கு இதில்  கால் பங்கு நடவடிக்கைகளைக் கூட எடுக்கும் முனைப்பும், வாக்கு வங்கி அரசியலுக்கு சவால் விடும் துணிவும் கிடையாது.
மாநில பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை வேண்டியவர்களை பதவியில் அமர்த்தவும் சலுகைகள் காட்டவும் மட்டுமே உருவாகியுள்ள சீழ் பிடித்த அமைப்புகளாகத் தான் மற்ற மாநிலங்களில் உள்ளன. ஆனால் மோதியின் குஜராத்தில், பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள், அரசியல் குறுக்கீடு இல்லாமல், தொழில் நேர்த்தியுடன் மிளிரும் புரஃபஷனல் நிறுவனங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன.
சத்துணவுத் திட்டம் என்ற ஒரு விஷயத்திற்காக எம்.ஜி.ஆர் என்ற மாநில ஆட்சியாளர் வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப் படுவார். இப்படி ஒன்றிரண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்திய ஆட்சியாளர்கள் எல்லா மாநிலங்களிலும் உண்டு. ஆனால் மோதியின் நல்லாட்சி குஜராத்தில் புரிந்துள்ள சாதனைகள் எண்ணிக்கையிலும் சரி, அளவிலும் சரி, இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரியவை. அதனால் தான் ஒரு “மாடல்” என்ற அடைமொழிக்கு அவை தகுதியுடையவை ஆகின்றன.
6. ரதன் டாடா, கௌதம் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வாரி வழங்கினார் மோதி. கார்ப்பரேட்டுகளை அளவுக்கு மீறி ஊக்குவித்தார். அது தானே உண்மை?
ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது – மோதியின் அரசு அடிப்படையில் ஒரு கொள்கை சார்ந்த அரசு (Policy driven government). சலுகைகளும், அதற்கு இசைந்த அதிகார அடுக்குகளும் வலைப்பின்னல்களும்  அதில் ஊக்குவிக்கப் படுவதில்லை என்பதை மோதி எதிர்ப்பாளர்களே கூட பதிவு செய்திருக்கிறார்கள்.
பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று  உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார்.  இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.
டாடா நேனோ தொழிற்சாலை மட்டும் குஜராத்துக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து ஃபோர்ட், மாருதி மற்றும் பல வாகன உற்பத்தியாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்ட தொழில் வளர்ச்சிக் கொள்கை தான் இதை சாத்தியமாக்குகிறது.  அதே போலத் தான் அதானி குழுமத்தின் “முந்த்ரா (Mundra)  தொழில் வளாகமும். கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை இத்தகைய தொழில் மையங்கள் குஜராத்தில் உருவாக்கியுள்ளன.
tata_nano_factory_sanand
இவ்வளவு கார்பரேட் நிதி குவியும் இடத்தில்  சிறிது கூட ஊழல் நடக்காமல் இருக்குமா என்று கேட்கலாம்.. ஆங்காங்கு சிறு சிறு ஊழல்கள் நடந்திருக்கலாம்.  ஆனால், வளர்ச்சியையும் மக்கள் நலனையும் பாதிக்கும் அளவிலான பெரிய ஊழல்களோ விதி மீறல்களோ கட்டாயம் நடக்கவே இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். நடந்திருந்தால் காங்கிரஸ் கடுவாய்களும், ஊடக ஓநாய்களும் சும்மா இருந்திருப்பார்களா என்ன, கடித்துக் குதறியிருப்பார்களே.. குறிப்பாக, கூரை இடிந்து விழும் நிலையில் ஜீவனை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு மழை நாளிலும் ஒழுகிக் கொண்டிருக்கும், “தரமற்ற கட்டுமானங்கள்” வரிசையில் உலகப்புகழ் பெற்று விட்ட சென்னை விமான நிலையம் போல முற்றிப் போன ஊழல் எல்லாம் மோதியின் குஜராத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. நர்மதை நதியின் நீர்ப்படுகை முழுவதும் சோலார் தகடுகளைப் பதித்தது மூதல், நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் மாநில நெடுஞ்சாலைகள் போட்டது வரை மோதியின் குஜராத் அரசு மாபெரும் திட்டங்களை செய்து முடித்து, கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது. எந்தத் திட்டம்  குறித்தும் இதுவரை  குறைந்த தரம் கொண்டது, அக்கிரமமாக செய்யப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்ற புகார்கள்  இல்லை. இது ஒன்றே போதும், கார்பரேட்டுகளும், முதலாளிகளும்  அநியாயமாக மக்களுக்கு தீங்கிழைப்பதற்கு ஒரு போதும்  அனுமதிக்கப் படவில்லை என்பதற்கு.
7. மோதியின் குஜராத் மாடல் பணக்காரர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு மட்டுமே நன்மை செய்யும். கீழ்நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் அதில் ஒன்றுமே கிடையாது என்று கூறப் படுகிறதே..
இது சிறிதும் ஆதாரமற்ற கூற்று. கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின் சராசரி தனி நபர் வருமானம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.  மாநில மக்கள் தொகையில் வேலைவாய்ப்பின்மை ஒரு சதவீத அளவிலேயே உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் இந்த மற்ற எல்லா மாநிலங்களையும் விட மோதியின் குஜராத் முன்னணியில் உள்ளது என்பது மத்திய அரசின் கணக்கீட்டு நிறுவனங்கள் உட்பட அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம்.
முக்கியமாக, வளர்ச்சி செலவினங்கள் (development expenditure) , வளர்ச்சிக்குத் தொடர்பில்லாத செலவினங்கள் (non development expenditure ) இடையேயான விகிதம் மிக ஆரோக்கியமாக உயர்ந்துள்ளது. சமூக நலத் திட்டங்களுக்காக செலவழிக்கப் படும் அரசுப் பணம், மற்ற பணிகளுக்காக செலவிடப் படுவதை விட அதிகம் என்பதையே இது காட்டுகிறது.  பொதுவாக மோதியை எதிர்ப்பதாகக் கூறப் படும் பல என்.ஜி.ஓ அமைப்புகள் கூட, குஜராத் அரசின் “வனபந்து” பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தைப் புகழ்ந்து, இந்தியா முழுவதும் அந்த திட்டம் விஸ்தரிக்கப் படவேண்டும் என்று  பரிந்துரைக்கிறார்கள்.
இவை தான் மோதியின் குஜராத் மாடல் பற்றிய உண்மைகள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கௌஹாத்தி வரை உள்ள வாக்காளர்கள்,  மோதி என்ற உன்னதத் தலைவரை, பாரத அன்னையின் தவப் புதல்வரை நேசிக்கிறார்கள். அவர் பிரதமராகி இதே போன்ற நல்லாட்சி நாடு முழுவதும் மலர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தமிழக வாக்காளர்களே, நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
வரும் ஏப்ரல்-24 அந்த நினைவுடன் தான் நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்.
வரும் மே-16 அந்த நம்பிக்கையைக் கட்டாயம் நிரூபிக்கவும் போகிறது.
 (முற்றும்)

 மேலும் படிக்க-http://othisaivu.wordpress.com/

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93-2/

மேலும் படிக்க-

0 comments:

Post a Comment