ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பழைய
நோட்டுகளை மாற்றுவோரின் கை விரலில் எளிதில் அழிக்கமுடியாத மை வைக்கப்படும்
என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
கைவிரலில் அடையாள மை வைக்கும் முறை இன்றுமுதல் பெருநகரங்களில் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ரொக்க கையிருப்பு பணம் போதுமான அளவு இருப்பதால் மக்கள் நாட்டில்
பணப் புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம் என்று
வலியுறுத்தியுள்ளார்.
ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி
அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம்
அலைமோதுகிறது. பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி
வருகின்றனர்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை
நடத்தப் பட்டது.
இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு
விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த
வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்
கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.
வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும்,
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20
ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை
மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம்
வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
மக்களின் சிரமம் கருதி சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில கெடுபிடிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி:
1. பழைய ரூ.1000, 500 மாற்றுவோரின் கை விரலில் அடையாள மை வைக்கப்படும்
2. இதன் மூலம் ஒரே நபர் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று கூட்ட நெரிசலை ஏற்படுத்துவதை தடுக்கப்படும்.
3. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஆட்களை அனுப்பி பணத்தை மாற்றுவது தடுக்கப்படும்.
4. கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
5. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து
கவனித்து வருகிறது. நியாயமான முறையில் அந்த கணக்குகளில் பணம்
செலுத்துபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
6. கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் தங்களது உண்டியலில் பெறப்படும்
ரூ.100, 50, 20, 10 சில்லறை பணத்தை உடனடியாக வங்கிகளில் டெபாசிட்
செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சில்லறை புழக்கத்தில்
தட்டுப்பாடு ஏற்படாது.
7. கிளை தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.
8. ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அதனை அச்சிட
பயன்படுத்தப்படும் மை. சாயம் போனால் அது நல்ல நோட்டு. போகாவிட்டால் அது
கள்ள நோட்டு. புதிய ரூ.100 நோட்டுகளைக்கூட ஈரமாக்கப்பட்ட பஞ்சு கொண்டு
தேய்த்தால் லேசாக சாயம் ஒட்டும்.
இவ்வாறு சக்திகாந்த் தெரிவித்தார்.v.kalathur vkalathur
- தமிழ் இந்து.