பெரம்பலூர் எசனை கிராமம் அருகே உள்ள கீழக்கரைஏரி பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய கிணறு உள்ளது. அந்த கிணற்றுக்குள் நேற்று காலை அழகான புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் பாறையில் மோதியதில் அந்த மான் பலத்த காயம் அடைந்தது. மேலும் கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் செந்தில்குமார் உள்பட தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மீட்பு
பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த மானை லாவகமாக பிடித்து வலையில் கட்டி கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த மான் மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வனச்சரகர் ரவீந்திரன் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மானை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது அது 2½ வயதுடைய பெண் மான் என்பது தெரியவந்தது.
மேலும் நாய்கள் துரத்தியதால் அந்த மான் தவறி கிணற்றுக்குள் விழுந்ததா? அல்லது தண்ணீர் தேடி வந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காயமடைந்த அந்த புள்ளிமானுக்கு எசனை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மான் பேறையூர் வனப்பகுதியில் விடப்பட்டது. கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment