பெரம்பலூர்-:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நெடுஞ்சாலை ஓர உணவகங்களில் உணவு தரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று நடத்தியது. பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது :நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புரிதல் நம்மிடையே இருக்க வேண்டும். இதன்மூலம் தரமான உணவுப் பொருட் களைத்தான் பயன்படுத்துகிறோமா என்ற விழிப்புணர்வு நம்மிடையே உருவாக வேண்டும். மேலும், கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே வளர வேண்டும்.
எனவே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர் அனைவரும் தங்கள் பள்ளி களில் பயிலும் சக மாணவ,மாணவிகளும் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுப் பொருட்களை உண்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். வெளியூர் செல்லும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் தங்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளும் சுகாதாரமான உணவகங்கள் மூலமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) துரை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்ட மைப்பின் நிர்வாக செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment