Thursday, 23 January 2014



ரியாத்: சவுதியில் விசா முடிந்த பிறகும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக தங்கி பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். மேலும், போலி பாஸ்போர்ட்டில் பலர் வந்து தங்கிவிடுகின்றனர். போலி ஏஜென்சிகளால் ஏமாற்றப்பட்டு சவுதிக்கு வருபவர்களும் வேறு வழியின்றி கட்டுமான கம்பெனிகளின் பிடியில் சிக்கி பரிதவிக்கின்றனர். வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சவுதியில் தொடர்ந்து தங்க ஆவணங்களை சரி செய்து கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் 2.5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறிவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

சவுதி உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், Ôதொழிலாளர் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கி இருந்தனர். அவர்களில் 2.5 லட்சம் பேரை வெளியேற்றி இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சவுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏமன் வழியாக சவுதிக்குள் ஊடுருவியவர்கள் என்று தெரிய வந்ததால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

சவுதியில் 90 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment