Saturday, 25 January 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில் நியாயவிலை கடை பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவுபடி, பொது விநியோகத் திட்டம் மற்றும் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டில் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில், நியாய விலைக் கடைகளின் பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உள்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் செயல்படும் நியாய விலை கடைகளின் கணக்குகள் 121 ஊரட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன் வைக்கப்படும். எனவே, கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இதேபோல, 121 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், ஏற்கெனவே நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் அளிக்ககப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். 
கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஊராட்சி) பற்றாளர்களாகவும், வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்காளர்களாக சார்ந்துள்ள ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும்.
எனவே, மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பங்கேற்று ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment