கடந்த 2013 ஜனவரி மாதம்
ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம் என்பது விஷம்
என்று நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் என் தாய் என்னிடம்
வருத்தப்பட்டு தெரிவித்தார்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியிருந்தார்
ராகுல் காந்தி. அதை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு மகிழ்ந்தன 24 மணி
நேர செய்தி அலைவரிசைகளும் ஆங்கில ஊடகங்களும்.
அதுகுறித்து மேலும் விளக்கிய அவர், “பதவி
அதிகாரம் என்பது விஷம் தான். பதவி அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும்
ஆபத்துக்ளை கையாளத் தெரியாமல் போகும் போது அது விஷமாகிறது. மேலும்,
அதிகாரத்தை பொதுநலத்திற்காக பயன்படுத்தாமல் சுயநலத்துக்காகப்
பயன்படுத்தினால் அது விஷமாகும் என்றார். இதைப் போன்ற தன்னிலை விளக்கத்தை
வேறு எவராலும் அளிக்க முடியாதுமாறியதேனோ?
மேடையின் பின்புறம் யோகேந்திர யாதவ்
(இப்போது இவரும் ஆ.ஆ.க.க்கு மாறிவிட்டார் போன்ற அறிவுக்கொழுந்துகள் எழுதிக்
கொடுத்ததை ஆராயாமல் பேசிய ராகுலுக்கு, இப்போது உண்மை விளங்கியிருக்கும்.
இத்தனைக் காலம், காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச அதிகார மையமாக இருந்தும்,
அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துகளை கையாளத் தெரியாமல் பரிதவித்த
தனது இயலாமையை எண்ணி இப்போது அவர் உள்ளூற கண்ணீர் சிந்தக்கூடும்.
சொந்தச் சகோதரியின் கணவர் ராபர்ட் வதேரா
ஹரியானாவில் நிலபேர ஊழலில் பலகோடி கபளீகரம் செய்ததைத் தடுக்க முடியாத
ராகுலுக்கு, அப்பாவி வேடம் கூடப் பொருந்தாது. இப்போது ராகுலுக்கு உதவியாக
பிரியங்காவும் (பாட்டி இந்திரா காந்தி போலவே இருப்பதாக நெக்குருகுகிறார்கள்
சில மீடியா வேங்கைகள்) களம் இறங்குகிறாராம்; விளங்கிவிடும். காங்கிரஸ்
கட்சிக்கு கிடைக்கும் முதல் வாக்கு, அசோக் கெம்கா (இவர் தான் வதேரா ஊழலை
வெளிப்படுத்தியவர்) அளிக்கும் வாக்காகத் தான் இருக்கும்!
போஃபர்ஸ் ஊழலில் தொடர்புடைய ஒட்டாவியா
குவாத்ரோச்சி ரகசியமாக இத்தாலி தப்பிச்செல்ல உதவிய காங்கிரஸ் அரசை
காங்கிரஸ் இளவரசரால் – அன்னையை மீறி- எப்படிக் கண்டிக்க முடியும்? 2 ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டின் கஜானா ரூ. 1.76 லட்சம் கோடி இழப்புக்கு
உள்ளானதை இன்னமும் ஏற்க மறுக்கும் அதி தீவிர கொள்கைப் பிடிப்பாளர் ராகுல்.
இவரால், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் நேரிட்ட ரூ. 1.86 லட்சம் கோடி
இழப்பை மட்டும் ஏற்க முடியுமா என்ன?
ஆனாலும், காங்கிரஸ் மட்டுமே ஊழலுக்கு
எதிரான நடவடிக்கைகளை எடுப்பதாக எந்தக் கூச்சமும் இல்லாமல் ராகுலால்
மேடையில் முழங்க முடிகிறது. அதையும் எந்தக் கேள்வியும் இன்றி
பத்திரிகைகளில் வெளியிட்டு மகிழ்கிறார்கள் நமது காகிதப்புலிகள். ஊழலை
ஒழிக்கவும் வெளிப்படையான ஆட்சி நடத்தவும் காங்கிரஸுக்கு மீண்டும் ஒரு
வாய்ப்பு அளிக்குமாறு கோருகிறார் ராகுல்.
ஆனால், அடுத்து காங்கிரஸ் வென்றால் யார்
பிரதமர் என்பதை இப்போதே அறிவிக்க மாட்டோம் என்று தெளிவாக
அறிவித்திருக்கிறார் சோனியா அம்மையார். பாஜக நமது அரசியல் அமைப்பு முறைக்கு
மாறாக நரேந்திர மோடியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பது ஜனநாயக
விரோதமென்றும் விமர்சிக்கிறாகள் காங்கிரஸ் எடுபிடிகளான திக்கி ராஜா
வகையறாக்கள். தோற்கப்போகும் தேர்தலில் தனது மகனை பிரதமர் வேட்பாளராக
நிறுத்தி மூக்குடைபட எந்தத் தாய் தான் துணிவார்? என்ற மோடியின் எள்ளலில்
நியாயம் இல்லாமல் இல்லை.
மோடிக்கு நாடு நெடுகிலும் கிடைத்துவரும் பிரமாண்டமான ஆதரவு அலையைக் கண்டு
நடுங்கிப் போயிருக்கும் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள், காங்கிரஸுக்கு
வால்பிடிக்கும் ஐக்கிய ஜனதாதளம், ஆர்.ஜே.டி. போன்ற கட்சிகள், இடதுசாரிகள்,
மூன்றாவது அணிக் கனவில் மிதக்கும் சில்லறைக் கட்சிகள் உள்ளிட்ட பாஜக
எதிரிகள் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறார் மோடி. இப்போது
இந்தியா டுடே- சி வோட்டர் நிறுவனமும், சி.என்.என்.-ஐ.பி.என், சிஎஸ்டிஎஸ்
நிறுவனமும் தனித்தனியே ஏபிபி நியூஸ்- நீல்ஸன் நிறுவனமும் நடத்திய
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக-வின் வெற்றி பவனி (230/
272) உறுதியாகி இருக்கிறது. இதையும் காசு கொடுத்து வாங்கப்பட்ட விளம்பரச்
செய்தி என்று விமர்சித்திருக்கிறது காங்கிரஸ். அவரவர்களின் எண்ணப்படித்
தானே அடுத்தவர்களையும் எடைபோட முடியும்?
இப்போதைய நிலையில் மோடிக்கு நாடு முழுவதும்
பெருகிவரும் ஆதரவு வரும் மாதங்களில் மேலும் பல மடங்காகும். இப்போதே
நிர்கதியாக ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மதிப்பு
வரும் நாட்களில் மேலும் குலையும். காங்கிரஸ் கட்சியின் இடத்தை ஆம் ஆத்மி
கட்சி கைப்பற்றக்கூடும். (பஸ்மாசூரன் கதை நினைவிருக்கிறதா?)
நிலைமை இவ்வாறிருக்கையில், பிரதமர்
வேட்பாளரை காங்கிரஸும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் எப்படி அறிவிக்க
முடியும்? எனவே தான் மழுப்பல்.
இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரத் தலைவராக
ராகுல் காந்தி இருப்பாராம். ஆனால், அவர் பிரதமர் வேட்பாளர் இல்லையாம்.
இப்போதைய பிரதமர் மன்மோகன் (இவரைப் போன்ற நன்றியுள்ள ஜீவனைக் காண்பது
மிகவும் அரிது) ‘அடுத்து தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும் பிரதமர்
பொறுப்பேற்கப் போவதில்லை’ என்கிறார். காங்கிரஸ் பெயரைச் சொல்லி
கொள்ளையடிக்கும் ப.சி.யோ, ‘தேர்தலில் வென்றால் ராகுல் தான் எங்கள்
பிரதமர்’ என்கிறார். ஜால்ராக்கள் அனைவரின் சத்தமும் இதுவே. ஆனால்,
காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்காதாம். நாட்டு மக்களை எந்த
அளவிற்கு முட்டாள்களாக காங்கிரஸ் கருதுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத்
தெரிகிறது!
மக்களிடையே சிம்மம் போல வலம்
வந்துகொண்டிருக்கும் குஜராத் முதல்வருடன் ராகுலை ஒப்பிட முடியாது என்பது
காங்கிரஸுக்கே தெரிந்திருக்கிறது. எனவே தான் பல்டி. அதற்கு ஜனநாயக சாயம்
வேறு பூசுகிறது. ‘ஸ்வயமேவ மிருகேந்திரதா’- என்ற சமஸ்கிருதப் பொன்மொழி
உண்டு. இதன் பொருள்- சிங்கம் வனத்தின் ராஜாவாக தானே- தன்னுடைய
குணத்தினாலேயே ஆகிறது என்பது தான். மோடி என்ற சிம்ம்ம் எங்கே? ராகுல் என்ற
எலி எங்கே? இடையே மூக்கை நுழைக்கும் கேஜ்ரிவால் நரி எங்கே?
இப்போது ஜனநாயகம் பேசுகிறாரே, சோனியா
அம்மையார். அவருக்கு ஒரு கேள்வி- ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும்
ராஜீவ் காந்தியும் எந்த அடிப்படையில் தொடர்ந்து இந்நாட்டில் பிரதமர்களாக
இருந்தார்கள்? இந்திரா கொல்லப்பட்டவுடன் யாரைக் கேட்டு ராஜீவை பிரதமர்
ஆக்கியது காங்கிரஸ்? அதை எதிர்த்து வெளியேறி தனிக்கட்சி துவங்கியவர் தானே
இப்போது காங்கிரஸ் கட்சியால் ஜனாதிபதி ஆக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி? உங்களை
(சோனியா) முன்னிறுத்தி 2004-ல் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸ் ஏன்
மன்மோகனை பிரதமர் ஆக்கியது? அப்போதைய ஜனாதிபதி கலாம் உங்களுக்குக் கூறிய
‘தனிப்பட்ட’ அறிவுரையாலா?
ஊழல் மலை மீது அமர்ந்துகொண்டு ‘எங்கே
ஊழல்?’ என்று குலைப்பது போலவே, ஜனநாயக விரோதச் செயல்பாடுகளிலேயே ஊறித்
திளைத்த காங்கிரஸ் இப்போது ஜனநாயகம் பேசுகிறது. நாட்டு மக்கள் ஞாபக சக்தி
குறைந்தவர்கள் என்று எண்ணிவிட்டது போல. நமது மக்கள் அப்பாவிகள் தான்,
இந்திரா கொல்லப்பட்டபோதும் ராஜீவ் கொல்லப்பட்டபோதும் காங்கிரஸுக்கு அனுதாப
அலையில் வெற்றிமகுடத்தைச் சூட்டியவர்கள் தான் அவர்கள். ஆனால், அவர்கள்
மாக்கள் அல்ல. மோடி இதுவரை நடத்தியுள்ள 80-க்கு மேற்பட்ட மாபெரும்
மாநாடுகளில் திரளும் மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி.
இப்போது, ‘காங்கிரஸ் எந்தப் பொறுப்பைக்
கொடுத்தாலும் ஏற்கத் தயார்!’ என்று அறிவித்திருக்கிறார் ராகுல். கழக
செயற்குழுவும் பொதுக்குழுவும் கூடி முடிவு செய்யும் என்று அவ்வப்போது
உள்கட்சி ஜனநாயகக் கொடி பிடிப்பாரே, தமிழக செம்மொழி வேந்தர் ஒருவர்- அதேபோல
இருக்கிறது ராகுல் பேச்சு. மக்களால் மக்களுக்காக, மக்களை மக்களே ஆள்வதே
மக்களாட்சி. இதை ராகுலும் கருணாநிதியும் வேறுவகையில் புரிந்து
வைத்திருக்கிறார்கள். இந்த நாடகத்தை நாட்டு மக்களும் புரிந்துகொண்டு
விட்டார்கள்!
“மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் அதன்பின்னர் எம்.பி.க்கள் என்னைப்
பிரதமராக தேர்வு செய்ய நினைத்தால் அதுபற்றி நிச்சயம் கவனமெடுப்பேன்” என்று
ஜனவரி 23-ம் தேதி நிலவரப்படி கூறி இருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர்
ராகுல் காந்தி. இதை அவர் சொன்ன இடம் அமேதி தொகுதி. அந்த ஒரு
தொகுதியிலேனும் ஜெயித்தாக வேண்டுமே? ஆ.ஆ.க.யின் குமார் விஸ்வாஸ் வேறு அங்கு
வந்து ஒரு கலக்கு கலக்கிச் சென்றிருக்கிறார். இப்போதைய நிலவரப்படி
காங்கிரஸ் பெறும் வெற்றியின் எண்ணிக்கை 60-ஐத் தாண்டினால் அபூர்வம். அதில்
அமேதியும் ரேபரேலியும் இருந்தாக வேண்டுமல்லவா?
இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த வாக்குகளுக்காக
என்னென்னவோ சர்க்கஸ் செய்தும் கடைசி நேரத்தில் ஆ.ஆ.க. அவர்களின் ஆதரவை
திருடிச் சென்றுவிட்டதை தில்லியில் கண்ட காங்கிரஸுக்கு எத்தைத் தின்றால்
பித்தம் தெளியும் என்று தெரியவில்லை. மோடியை சிறுமைப்படுத்த மத்திய அரசு
நியமித்த கமிஷனில் (இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட்தாகக் கூறப்படும்
விவகாரம்) பணியாற்ற எந்த ஒரு நீதிபதியும் தயாராக இல்லை என்ற தகவல் வேறு
காங்கிரஸ் கட்சியைக் கடுப்பேற்றுகிறது.
பேனுக்குப் பயந்து கொள்ளிக்கட்டையை எடுத்து
சொறிந்துகொண்டது போலாகிவிட்டது தில்லியில் ஆ.ஆ.க- க்கு காங்கிரஸ் அளித்த
ஆதரவு. இப்போது குதிரை குப்புறத் தள்ளி குழியும் பறிக்கிறது.
மணிமேகலை என்றெல்லாம் தன்னைப் புகழ்ந்த
கலாகார் பாஜக-வுக்கு விடுத்த தூதுகளை உளவுத் தகவல்களால் அறிந்து
நொந்துபோயிருக்கிறார் இத்தாலிய மணிமேகலை. உடனிருக்கும் கூட்டணித் தோழர்களோ,
லாபம் வரும் வரை அறுவடை செய்துவிட்டு மூன்றாவது அணிக்குத் தாவத் தயாராக
இருக்கிறார்கள். மொத்தத்தில், திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட
சிறுகுழந்தை போல தத்தளிக்கிறார் ராகுல்.
காங்கிரஸ் கட்சிக்கு இது கஷ்ட காலம் தான்.
ஆனால், நாட்டிற்கு ராகு(ல்) காலம் முடிந்து நல்லகாலம் பிறந்துவிட்டது. அதன்
அடையாளமாகவே காங்கிரஸின் வீழ்ச்சி தென்படுகிறது.
0 comments:
Post a Comment