Tuesday, 25 March 2014

சேலம் அருகே, வாகன சோதனையில் பறிமுதல் செய்த பணத்தில் ரூ.8.25 லட்சத்தை திருடிய 2எஸ்எஸ்ஐக்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம் குப்பனூர் சோதனை சாவடி அருகே வீராணம் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ.க்கள் கோவிந்தன்(50), சுப்பிரமணி(50) தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை சோதனையிட்டனர்.

அதில், வந்த ஏற்காடு அதிமுக பிரமுகர் குப்புசாமியிடம் 2 பேக்குகளில் ரூ.35 லட்சம் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டதை வீடியோ எடுப்பதற்காக தேர்தல் அதிகாரிகளுடன், குப்புசாமியும், டிரைவர் பாலகிருஷ்ணனும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, ரூ.26.75 லட்சத்தை மட்டுமே உதவி தேர்தல் அலுவலரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மீதி பணம் ரூ.8.25 லட்சம் எங்கே என்று குப்புசாமி கேட்டார். அதை கேட்டு தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் தேர்தல் நடத்திய விசாரணையில், எஸ்.எஸ்.ஐ.க்கள் ரூ.8.25 லட்சத்தை பதுக்கியது தெரிந்தது. போலீஸ் ஸ்டேசனில் உள்ள ஒரு அறையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம்  மீட்கப்பட்டது. இது தொடர்பாக பறக்கும் படை தேர்தல் அதிகாரி மணிவண்ணன்  வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு எஸ்ஐக்கள் கோவிந்தன், சுப்பிரமணி ஆகியோர் மீது திருட்டு, நம்பிக்கை மோசடி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் 4வது நீதித்துறை நடுவர் விஜயலட்சுமி முன் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

இதற்கிடையே, கைதான போலீசாரிடம் இருந்து ரூ.4 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 4.25 லட்சம் எங்கே போனது என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து போலீசார், வேன் டிரைவர் பாலகிருஷ்ணன், குப்புசாமியிடம் விசாரித்து வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்கவே போலீசாரை கொண்டு சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் பறிமுதல் பணத்தை அபகரித்தது தொடர்பாக இரு போலீஸ் அதிகாரிகள் சிக்கியது தேர்தல் வரலாற்றில் முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். வாகன சோதனையில் பறிமுதல் செய்த பணத்தை மோசடி செய்த எஸ்எஸ்ஐக்கள் இருவரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து டிஐஜி அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment