பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 26, ஆக. 2-ம் தேதிகளில் நடைபெற உள்ள கல்விக்கடன் வழங்கும் முகாம்களில், 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் பங்கேற்க உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கியாளர்களும் தங்களது சேவைப்பகுதிக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 26-ம் தேதி நடைபெறும் முகாமில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், ஆக. 2-ம் தேதி நடைபெறும் முகாமில் வேப்பூர், ஆலத்தூர் வட்டங்கள் மற்றும் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் பங்கேற்போர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற்கல்வி, உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். வேறு மாவட்டத்திலும் கல்வி பயிலலாம். வங்கியாளர்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை மாணவ, மாணவிகள் கொண்டு வந்தால், உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிவரும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக்கடன் முகாமில் தேவைப்படும் இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்கும் சிறப்பு பகுதி அமைக்கப்பட உள்ளது.
கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள், பெற்றோரின் ஊதியச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவம், பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் அல்லது
ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97885 32233 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-தினமணி.
0 comments:
Post a Comment