Wednesday, 9 July 2014

.
அன்னமிடும் கை?
அன்னமிடும் அம்மா…

மக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குடன் இயங்கும் அரசுகள், மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் அரசுகள், மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுகள் என பொதுவாகச் சொல்லலாம்.
தமிழகத்தில் இன்றும் காமராஜர் ஆட்சி பற்றிய முழக்கங்கள் எழுந்துவரக் காரணம், அவரது அரசு, இதில் முதன்மை வகையைச் சேர்ந்திருந்ததே.
அதேபோல, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கவர்ச்சி அரசியலுக்கு மாறான வளர்ச்சித் திட்டங்களிலேயே கவனம் செலுத்தினார். பாஜகவின் ஆதரவு அமைப்பான பாரதீய கிசான் சங்கம் போராடியபோதும் கூட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தர அவர் மறுத்தார். அதேசமயம், தரமான மும்முனை மின்சாரத்தை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணிநேரமும் அவர் உறுதிப்படுத்தினார். எனவே தான் குஜராத் இன்று முன்னுதாரண மாநிலம் ஆகியிருக்கிறது. இன்று நாட்டிற்கு ஒரு செயலூக்கம் மிகுந்த பிரதமரை அளித்தது, இந்த தொலைநோக்குப் பார்வையே.
மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுக்கு உத்தரப்பிரதேசத்தில் ஆண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முந்தைய ஆட்சியைச் சொல்லலாம். அதனால் தான் மக்களிடையே செல்வாக்கிழந்து இன்று தனிமரமாகி இருக்கிறார் அக்கட்சியின் தலைவி மாயாவதி.
.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:
தமிழகத்தில் ஆளும் ஜெயலலிதாவின் ஆட்சியை இரண்டாம் வகைக்குள் தான் கொண்டுவர வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இங்கு வழங்கப்படுகிறது. ஆனால், மின்வெட்டுப் பிரச்னை இங்குதான் அதிகமாக உள்ளது.
தமிழக மின்வாரியத்தின் தற்போதைய நிலைமை?
தமிழக மின்வாரியத்தின் தற்போதைய நிலைமை?

விவசாயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் மின்சாரம் கிடைக்காதபோது அது இலவசமாயினும் என்ன பயன்? ஆனால், இந்த இலவச மின்சாரத்தால் மின்வாரியம் கிட்டத்தட்ட தரைதட்டி நிற்கும் கப்பலின் நிலையை அடைந்திருக்கிறது.
உதாரணமாக, 2011- 2012 நிதியாண்டில், விவசாயிகளின் மின்சார உபயோகம் 1,090.30 கோடி யூனிட் என்று கணக்கிடப்பட்டது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகம் செய்ய, ரூ. 5.98 செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தக் கணக்குப்படி,  விவசாயப் பயன்பாட்டுக்கு,  ரூ. 6,520 கோடி செலவாகும். ஆனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி,  தமிழக அரசிடம் வெறும்  ரூ. 290 கோடி மட்டுமே,  தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்  மட்டும், ரூ. 6,230  கோடி.
நிதிநிலைமை மோசமாக இருப்பதால் சுமார் 25,000 பணியிடங்களை நிரப்பாமல் விட்டுவைத்திருக்கிறது மின்வாரியம். போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாதபோது அத்துறை எவ்வாறு சிறப்பாக இயங்க முடியும்?
மக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டிய அரசு, மின்வாரியம் போன்ற பொதுத்துறை அமைப்புகளை சீரழியாமல் காப்பதும் அவசியம். அதற்கு அரசிடம் கவர்ச்சி அரசியலை மீறும் தொலைநோக்குப் பார்வை இருந்தாக வேண்டும். ஆனால், இலவச அரசியலே பிரதானமாகிவிட்ட தமிழகத்தில், மாநில மக்களும் சிறிது தரம் உயர வேண்டும். மக்கள் இலவசங்களை எதிர்பார்க்கும் வரை, அவர்களுக்கான உடனடி லாபம் தராத தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது.
இந்நிலையில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சில திட்டங்களை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
.
இலவச பேருந்துப் பயணம்:
இலவச பேருந்து பயண அட்டை வழங்கல்
இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கல்

தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச பேருந்துப் பயண அட்டைகள் பல்லாண்டுகளாக வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் 28.5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; இதற்காக அரசு ரூ. 310 கோடி செலவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன் பெறவும் இலவச பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இவற்றை வெறும் கவர்ச்சி அரசியலாகக் கருத முடியாது. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், மாற்றுத்திறனாளிகள் நலம் பெறவும் இத்திட்டங்கள் அவசியமானவையே. அதேசமயம், இதனால் ஏற்படும் செலவினம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களின் நலிவில் நலத்திட்டங்களை நீண்டகாலத்திற்குச் செயல்படுத்த முடியாது. இத்தகைய திட்டத்தை அரசு அறிவிக்கும்போது தெரிவிக்கப்படும் செலவினம் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படாவிட்டால், தரமான சேவையை அவற்றால் எவ்வாறு வழங்க முடியும்?
.
‘அம்மா’ திட்ட முகாம்:
அடுத்து ‘மக்களைத் தேடி வருவாய்த் துறை’ என்ற திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதனை சுருக்கமாக ‘அம்மா’ திட்டம் (Assured Maximum service to Marginal people in All Village- AMMA) என்கிறார்கள்.
’அம்மா’ திட்ட முகாம் அறிவிப்பு
’அம்மா’ திட்ட முகாம் அறிவிப்பு

பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் திருத்தங்கள்,   வருமானம்/  ஜாதி/ குடியுரிமை/ இருப்பிடச் சான்றிதழ்கள், பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள், வாரிசுச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்,  இரு பெண்குழந்தைகள் பிறந்ததற்கான சான்று, முதியோர் ஓய்வூதியம், விவசாயிகளுக்கான சான்று போன்ற தேவைகளுக்காக  மக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்துக் காத்திருப்பதற்கு இத்திட்டம் முற்றுப்புள்ளி வைக்கிறது.
இதன்படி வருவாய்த் துறை அதிகாரிகளே ஒவ்வொரு ஒன்றியத்திலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் சென்று மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை மனுவாகப் பெற்று, அங்கேயே அவற்றுக்கு நிவர்த்தி காண்கிறார்கள். உடனடி நிவர்த்தி காண இயலாத மனுக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிவு காணவும் உறுதி அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் ஓரளவிற்கு நல்ல முறையிலேயே இதுவரை இயங்கிவருகிறது. இத்திட்டம் துவங்கிய 24.02.2013 முதல் 19.06.2014 வரையிலான காலகட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 33.14 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவற்றுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. மக்கள் பிரதிநிதிகளும் ஆளும் கட்சிப் பிரமுகர்களும் இதனை தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் காண முடிகிறது. இலவசத் திட்டங்களை வழங்கும் நிகழ்வாகவும் அம்மா முகாம்கள் மாறி வருவதைக் காண முடிகிறது.
இத்திட்டம் அரசு நிர்வாகம் மக்களைத் தேடிச் செல்லும் நல்ல திட்டம். இதனை பிற மாநிலங்களும் இப்போது கண்காணித்து தாங்களும் நடைமுறைப்படுத்த விழைவதாக தகவல்கள் கூறுகின்றன. இத்திட்டம் எந்த அதிகாரியின் மூளையில் உதித்திருந்தாலும், அவர் பாராட்டுக்குரியவர். அதிலும், திட்டத்தின் பெயரிலேயே ‘அம்மா’ என்று வருவதாக அமைத்த அதிகாரியின் மூளையை தனியே பாராட்ட வேண்டும்.
.
அம்மா உணவகங்கள்:
கடும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் உணவுக்குத் திண்டாடுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மலிவுவிலை உணவகத் திட்டம்  ‘அம்மா உணவகம்’ என்ற நாமகரணம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் சோதனை முயற்சியாக 19.02.2013-இல் துவக்கிவைக்கப்பட்ட இத்திட்டம், அதன் வெற்றியால் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகத்தில் அறிவிப்புப் பலகை
அம்மா உணவகத்தில் விலைப்பட்டியல்

இத்திட்டத்தின் படி, காலை 7 மணிமுதல் 10 மணிவரை, அம்மா உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மாலை தலா 2 ரூபாய் விலையில் 3 சப்பாத்திகள் கிடைக்கின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள அம்மா உணவகங்களில் நீண்டு நிற்கும் மக்கள் கூட்டமே இத்திட்டத்தின் வெற்றிக்கு அத்தாட்சி.
முதலில் சென்னையில் 15 இடங்களில் துவங்கிய அம்மா உணவகம், பிற்பாடு அங்குள்ள 200 வார்டுகளிலும் விஸ்தரிக்கப்பட்டது. அடுத்து, பிற மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. தற்போது மாவட்டத் தலைநகரங்களிலுள்ள 27 அரசு மருத்துவமனைகளிலும் 124 நகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, தமிழகம் முழுவதும் 654 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.
இத்திட்டத்தின் நிதி ஆதாரம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே. உதாரணமாக, கோவை மாநகராட்சியில் இயங்கும் 10 அம்மா உணவகங்களால் ஏற்படும் செலவாக ரூ. 2.70 கோடி மதிப்பிடப்பட்டு, பொது நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கு நேரடி நிதிச்சுமை குறைவு; அதேசமயம், அரசுக்கு நல்ல பெயரும் கூட. இதனால் தினசரி லட்சக் கணக்கானோர் பயனடைகின்றனர். இத்திட்டத்தை விரைவில் ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்த தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளது.
தனியார் உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை அதீதமாக உயர்வதை அம்மா உணவகம் குறிப்பிட்ட அளவிற்கு தடுத்துள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதால் மகளிர் மேம்பாடும் சாத்தியமாகிறது. எனினும், இதில் உள்ள ஆளுங்கட்சியினரின் தலையீடும், ஆங்காங்கே துவங்கியுள்ள உணவுப்பொருள் கொள்முதல் ஊழலும் எதிர்காலத்தில் பிரச்னையாகலாம்.
.
அம்மா குடிநீர்:
தாகத்திற்கு நீர் கேட்டால் ஓடோடி வந்து தருவது தான் தமிழ் மரபு. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் குடிநீர் வர்த்தகம் தான் தமிழகத்தில் அதிகபட்ச லாபம் தரும் தொழிலாகி இருக்கிறது. சுத்தமான குடிநீர் என்பது அரசால் உறுதிப்படுத்தப்படாதபோது, சுகாதாரம் காக்க தனியார் நிறுவனங்களை மக்கள் நாடுவது தவிர்க்க இயலாதது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மழைக்காலக் காளான்கள் போலப் பெருகின. ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புட்டி ரூ. 20-க்கு மேல் விற்பனையாகிறது. பயணங்களின்போது தூய்மையான நீர் தேவை என்பதால் மக்களும் இந்த விலையைப் பொருட்படுத்துவதில்லை.
அம்மா குடிநீர்
அம்மா குடிநீர்

இதன் அடுத்தகட்டமாக வீடுகளுக்கும் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலைக்கு வந்தது. தற்போது 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பிளாஸ்டிக் கேனில் ரூ. 30-க்கு விற்பனையாகிறது. ஆனால், இந்தக் குடிநீர், சுத்திகரிப்பு விதிகளின்படி முழுமையாகவும் சுகாதாரமாகவும், தர அளவுகோல்களின்படியும் சுத்திகரிக்கப்பட்டதா என்பதை நுகர்வோர் அறிய முடியாது. தரச் சான்றிதழ் பெறாத பல நிறுவனங்கள் கூட நிலத்தடி நீரை சுத்திகரித்து விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில், இதிலும் அரசு களத்தில் குதித்தது. 15.09.2013-இல் துவங்கிய அம்மா குடிநீர் திட்டம், காண்பதற்கு மலிவுவிலை திட்டம் போலத் தெரிந்தாலும், இதில் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. உண்மையில் அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் டாஸ்மாக் போல இதுவும் ஒரு பொன்முட்டையிடும் வாத்தாக மாறக்கூடும்.
பேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட ‘அம்மா குடிநீர்’ ரூ. 10-க்கு விற்பனையாகிறது. தினசரி மாநிலம் முழுவதும் 3 லட்சம் குடிநீர் புட்டிகள் விநியோகம் ஆவதாகத் தகவல். மேலும் பல இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவக்க அரசு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
அடிப்படைத் தேவையான குடிநீரை விற்பனைக்கு அரசே கொண்டுவரலாமா என்ற கேள்விகள் எழுந்தாலும், பயணங்களில் செல்வோருக்கு உதவும் இத்திட்டம் தேவையானதே. இதனுடன் ஒப்பிடுகையில் ஐஆர்சிடிசி-யால் விநியோகிக்கப்படும் ரயில் குடிநீரின் விலை அதிகமே.
அம்மா குடிநீர்த் திட்டம் மற்றொரு உண்மையையும் அம்பலப்படுத்துகிறது. கேன்களில் விற்கப்படும் குடிநீரின் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ. 1.20 மட்டுமே. அதையே புட்டிகளில் அடைத்து முத்திரைப் பெயருடன் விற்பனை செய்கையில் தனியார் ரூ. 20 வரை விற்கின்றனர். இதையே அரசு ரூ. 10-க்கு விற்கிறது. அதாவது குடிநீர் வ்ர்த்தகத்தில் நியமம் ஏதும் இல்லை என்பதும், தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் வெளிப்படை. அரசே கூட குடிநீரை ரூ. 5-க்கு தர முடியும். தனியார் நிறுவனங்கள் மீது நிர்பந்தம் செலுத்தி, அவர்களது தயாரிப்பின் விலையையும் அரசால் ரூ. 10-க்குள் குறைக்க முடியும்.
.
அம்மா உப்பு:
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. இதனை உணர்ந்தோ என்னவோ, மலிவுவிலை உப்பை தமிழக அரசே தயாரித்து விற்பனையைத் துவக்கி உள்ளது. குடிநீர் விற்பனை போலவே இதிலும் மாநில அரசு வர்த்தக லாபநோக்குடன் செயல்பட்டுள்ளது. அதேசமயம் வெளிச்சந்தையில் டாடா, ஐடிசி போன்ற பெருநிறுவனங்கள் விற்பனை செய்யும் உப்பின் விலையில் சரிபாதியாக இருப்பதால், இந்த உப்பு மக்களிடையே பிரபலமாகும் வாய்ப்புள்ளது.
மூன்று வகையில் அம்மா உப்பு
மூன்று வகையில் அம்மா உப்பு

ஏற்கனவே, பொதுவிநியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் சாதாரண உப்பு ரூ. 2.50-க்கும் தூள் உப்பு ரூ. 4.50-க்கும் விற்பனையாகி வருகிறது. புதிய வடிவிலான அம்மா உப்பின் வருகையால் அவை காலாவதியாகலாம்.
இத்திட்டத்தின்படி, இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு,  குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் வகை உப்பு கிலோ ரூ. 14-க்கும், இரண்டாம் வகை உப்பு ரூ. 10-க்கும், 3-வது வகை உப்பு ரூ. 21-க்கும் விற்கப்படுகின்றன. கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த உப்பு மாநில அரசுக்கு வருவாயுடன் நல்ல பெயரையும் ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1974-இல் தமிழ்நாடு உப்புக் கழகம் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இது உப்பினைப் பிரித்தெடுத்தல், வணிகம் செய்தல் என லாபமீட்டும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமே அம்மா உப்பைத் தயாரிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஏற்றுமதியாகும் சாதாரண உப்பின் விலை கிலோ ஒரு ரூபாய் கூட இல்லை. அதுவே சுத்திகரிக்கப்பட்டது என்ற நாமகரணம் பெறும்போது மதிப்பு கூடிவிடுகிறது.
கூட்டுறவு அங்காடிகள் மட்டுமல்லாது, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்கள் முதல் தெருமுனை மளிகைக் கடைகள் வரை தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள விற்பனை முகவர்கள் மூலம் ஜூன் 18 வரை வரை 86 டன் அம்மா உப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது. மொத்தத்தில் அம்மா உப்பு திட்டம் மக்களுக்கு சிறு சேமிப்பை அளிப்பதுடன், அரசு கருவூலத்திற்கு வருவாய் ஏற்படுத்துவதாக உள்ளது.
.
அம்மா மருந்தகங்கள்:
தமிழகத்தில் பெருகியுள்ள  ‘அம்மா ஜூரத்தின்’ அடுத்த வெளிப்பாடே அம்மா மருந்தகம். ஏற்கனவே கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மருந்தகங்களில் 10 சதவீத தள்ளுபடி விலையில் அத்தியாவசிய மருந்துகள் விற்கப்படுகின்றன. இதையே  ‘அம்மா மருந்தகம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் கடந்த 26.06.2014-இல் துவக்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விரைவில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அம்மா மருந்தகங்கள் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அம்மா மருந்தகம்
அம்மா மருந்தகம்

‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டிய மருந்துகள் இங்கே கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளும் உள்ளன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உடனுக்குடன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் மக்களின் தேவை அறிந்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வரவழைக்கப்படும். இதற்காக அவர்கள் கேட்கும் மருந்துகள் இல்லையென்றாலும், கணினியில் பதிவு செய்து பின்னர் அந்த மருந்தை வரவழைத்து வழங்குவோம்’ என்று கூறியுள்ளார் அம்மா மருந்தக நிர்வாகி ஒருவர். இதற்கென நடப்பாண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருந்துகளுடன் சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதால் அம்மா மருந்தகங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ரூ. 500-க்கு மேல் மருந்து வாங்குவோருக்கு வீடுகளிலேயே மருந்துகளை வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
எனினும், சில தனியார் மருந்தகங்களில் 20 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி அளிக்கப்படும்போது அரசு மருந்தகங்களில் தள்ளுபடியை அதைவிட அதிகமாகவே தர முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அம்மா மருந்தகங்கள் மக்களிடம் பெறும் செல்வாக்கின் அடிப்படையில், அரசு மேலும் விலையைக் குறைக்கக் கூடும்.
.
வர்த்தக முத்திரை நல்லதா?
மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து செயல்படுவதில் ‘அம்மா’ ஆட்சி முன்னிலையில் உள்ளதை மேற்படித் திட்டங்கள் காட்டுகின்றன.
எங்கும், எதிலும்...  ‘அம்மா’ முத்திரை
எங்கும், எதிலும்… ‘அம்மா’ முத்திரை

அடுத்ததாக, அம்மா தேயிலை விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக எங்கும் எதிலும் ‘அம்மா’ என்ற தனித்துவ முத்திரையைப் பதிப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
வர்த்தகத்தில் ‘பிராண்ட்’ எனப்படும்  வர்த்தக முத்திரையை உருவாக்குவது முக்கியமானதாகும். அரசியலும் வர்த்தகமாகிவிட்ட தற்போதைய சூழலில், தமிழகத்தில் நலத்திட்டங்களும், மலிவுவிலை திட்டங்களும் ‘அம்மா’ என்ற பிராண்ட் பெறுவதை காலத்தின் கோலமாகவே காண வேண்டும்.
தமிழக அரசியலில் அம்மா புகழ் பாடுவதே  பிழைக்கும் வழியாக மாறிவிட்டதை, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சில் தூக்கலாகத் தென்படும் அம்மா புராணத்தில் இருந்தே அறியலாம்.  இதை  ‘அம்மா’ விரும்புகிறார்களோ இல்லையோ, தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள  ‘அம்மா பாராயணம்’ செய்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி அதிமுக-வில் உருவாகிவிட்டது.
இது உண்மையில் மக்களிடையே அம்மா எனப்படும் ஜெயலலிதாவுக்கு அவப்பெயரையே உண்டாக்கும். 1991- 1996 காலகட்டத்தில் இப்படி அம்மா புகழ் பாடியபடி ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜகமே இன்னமும் பல வழக்குகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.  அளவுக்கதிகமான புகழ்ச்சி  யாரையும் நிலைகுலையச் செய்து தடம்புரள வைத்துவிடும் அபாயம் உள்ளது.
‘அம்மா முத்திரை’யும்  ‘அம்மா பாராயணமும்’ அதிமுகவினருக்கு நல்லதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த கலாச்சாரம் தமிழகத்திற்கு நல்லதா? கெட்டதா?
மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் கதாநாயகன் வேலு நாயக்கர் கூறுவதுபோல “தெரியலையே” என்றுதான் கூற வேண்டியுள்ளது.
(நிறைவு)

நன்றி-தமிழ் இந்து.

0 comments:

Post a Comment