Friday, 4 April 2014

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அரசுத் துறைகளில் கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரையில் உள்ளவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் ரூ.6 ஆயிரம் வரை பணப்பயன் கிடைக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், இந்த உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 16 லட்சம் பேர் பயன் அடைவர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பெற்று இப்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
முன்தேதியிட்டு கிடைக்கும்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு அதாவது ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தனது உத்தரவில் சண்முகம் கூறியுள்ளார்.
ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வுத் தொகை ரொக்கப் பணமாக உடனடியாக வழங்கப்படும். அரசுத் துறைகளில் முழு நேரமாகப் பணியாற்றி, அகவிலைப்படி உயர்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
யார் யாருக்கு பொருந்தும்? உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வானது, ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல
அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை எழுத்தர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சதம் அடித்த அகவிலைப்படி

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி சதம் அடித்துள்ள நிலையில், இதற்கடுத்து எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது:
அகவிலைப்படி உயர்வானது நூறு சதவீதத்தை எட்டும்போது, அதில் 50 சதவீத அகவிலைப்படியானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படுவது வழக்கம். அவ்வாறு சேர்க்கப்பட்ட பிறகு அகவிலைப்படியானது 50 சதவீதமாகக் குறையும். இதன்பின்னர், அந்த 50 சதவீதத்தில் இருந்து சிறிது சிறிதாக அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இப்போது அகவிலைப்படி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்ப்பதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் எதையும் வழங்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு இதற்கான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் முடிவை ஒட்டியே, தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment