Tuesday, 1 April 2014

தற்போதைய நிலையில், கூட்டணியில், தே.மு.தி.க., மட்டும் தான் களத்தில் இறங்கி, வேகமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த், தன்னுடைய முதல்கட்ட பிரசாரத்தை முடித்து, இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவங்க உள்ளார். இதேபோல், அவரது மனைவி பிரேமலதாவும், தமிழகத்தில் பாதி தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டார். பா.ஜ., கூட்டணி உறுதியாகி, கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், பரபரப்பான பிரசாரத்திற்கான அறிகுறிகளை காணோம், பா.ஜ., சைகையில் பிரசாரம் செய்து வருகிறதா, என்றெல்லாம் கடந்த 30ம் தேதி "தேர்தல் களம்' பகுதியில் கேள்விகளை எழுப்பி இருந்தோம். ஆனால், கூட்டணி கட்சிகள் மீண்டும் அடிபிடிகளில் இறங்கி உள்ளதால், ஒன்றுகூடி தேர்தல் பணியாற்றும் நிலையில் கூட அந்த கூட்டணி இல்லை என, கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் மூலம் தெரியவந்து உள்ளது. இருவரும், பா.ஜ., கூட்டணிக்காக வேறுபாடு பார்க்காமல் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களை கடந்து, கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., போன்ற கட்சிகள், ஏன் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் கூட, அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை தாண்டி, சிறு துரும்பையும் எடுத்துப்போட மறுக்கின்றனர். இதனால் வருத்தமடைந்து இருக்கும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "நாமும், கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வோம்' என்ற முடிவுக்கு, வந்துவிட்டதாக தெரிகிறது. அவருடைய இரண்டாம் கட்ட பிரசார திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தே.மு.தி.க., போட்டியிடும் இடங்கள் தவிர மற்ற இடங்களை தவிர்த்து விட்டார்.

இதுகுறித்து, தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியில் நாங்கள் சேருவதற்கு முன்பாக பேச்சுவார்த்தை நடந்த போது; நாங்கள், எங்களுக்கு உரிய மரியாதையை கூட்டணியில் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று, ஆரம்பத்திலேயே சொன்னோம். நாங்கள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இறங்கி விட்டோம். ஆனால், கூட்டணி கட்சியில் இடம் பெற்று இருப்பவர்கள் அப்படி அல்ல. குறிப்பாக, பா.ம.க.,வினர், தமிழகம் முழுவதும், எங்களோடு மட்டுமல்ல, யாரோடும் ஒத்துப் போகாமல் இருந்து வருகின்றனர். புதுச்சேரியில் ஆரம்பித்த பிரச்னை, நாகப்பட்டினம் வரையில் தொடருகிறது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று, துடிக்கின்றனர். அது தவறில்லை. அதற்காக, காங்கிரஸ் கட்சியில் சீட் இல்லை என்று, பா.ம.க., பக்கம் வரும் மணிரத்தினம் என்பவரை, வேட்பாளராக்க துடிக்கின்றனர். ஏற்கனவே, அங்கே போட்டியிட அறிவிக்கப்பட்டு இருக்கும் வேட்பாளர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இதை எதிர்க்கின்றனர். இதனால், இன்னும் அங்கு குழப்பம் நீடிக்கிறது. அந்த குழப்பத்தால் தான், எங்கள் தலைவர், அந்த பக்கம் போனபோது, அங்கு பிரசாரம் செய்யாமல் ஒதுங்கி கொண்டார். அதேபோல தான், புதுச்சேரியிலும். அங்கே, என்.ஆர். காங்கிரசுக்கு, பா.ஜ., கூட்டணியில் தொகுதியை ஒதுக்கி விட்டனர். புதுச்சேரி முதல்வரும் தன் கட்சி சார்பில், ராதாகிருஷ்ணன் என்பவரை வேட்பாளராகவும் அறிவித்து விட்டார். அவர்கள் தனியாக பிரசாரம் செய்து கொண்டிருக்க, பா.ம.க., தரப்பிலும் அனந்தராமன் என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றனர். இதே நிலைமை நீடித்தால், அந்த தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர், கட்டாயம் தோற்பார். அதேநேரம், பா.ம.க.,வும் தோற்கும். அதுமட்டும் அல்லாமல், கடலூர் தொகுதியை எங்கள் கட்சிக்கு ஒதுக்கிய பின், பா.ம.க.,வினர் மீண்டும் அந்த தொகுதிக்காக போராடிக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் நெருங்கி விட்டது.

வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்தே, மூன்று நாட்கள் ஓடிவிட்டன. இன்னும், அந்த தொகுதிக்காக போராடலாமா? சேலத்தில், சுதீஷ் வேட்பாளராகி விட்டார். ஆனால், ஏற்கனவே பா.ம.க., வேட்பாளராக ராமதாசால், தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட அருள், தொடர்ந்து கூட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார். பல இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கான பஞ்சாயத்திலேயே சுதீஷுக்கு பாதி பொழுது போய்விடு கிறது. ஜெயிக்க வேண்டிய சேலமும் கண்டிப்பாக கை நழுவி விடுமோ என, அஞ்சுகிறோம்.
நாகப்பட்டினம் தொகுதியில், பா.ம.க., தரப்பு, இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், ம.தி.மு.க.,வும் அதே நிலையில் தான் இருக்கிறது. அவர்கள் இப்படி தொகுதிக்காக எங்களோடு முட்டல் மோதலில் ஈடுபடவில்லை என்றாலும், ம.தி.மு.க., போட்டியிடும் ஏழு தொகுதிகளில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்கள் தொகுதிகளுக்கு நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டுமாம். பிறகு எதற்கு கூட்டணி? இவ்வாறு அந்த தே.மு.தி.க., நிர்வாகி கூறினார்.

தே.மு.தி.க.,வின் புகார்கள் பற்றி பா.ம.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: தே.மு.தி.க., குறிப்பிடும் பிரச்னைகள் நிஜம்தான். ராமதாசுக்கு கூட்டணியில் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. அதை சரி பண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது சரியாகி அவர், பிரசாரத்துக்கு கிளம்பி விட்டால், எல்லாம் சரியாகி விடும். இந்நிலையில், அவருடைய உடல்நிலையும் சரியில்லாமல் இருப்பதால், விரைந்து எதிலும் முடிவெடுக்க முடியவில்லை. மற்றபடி, எல்லா கூட்டணியிலும் இருக்கும் பிரச்னைகள்தான். சரி பண்ணக்கூடியதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி கட்சிகளிடையே உள்ள பிரச்னைகளை சரி செய்து, அரவணைத்து, வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் பா.ஜ., மவுனம் காத்து வருகிறது. பா.ஜ.,விற்கு வேலூர் மற்றும் தஞ்சை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காததால், அதன் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.
பா.ஜ.,வில் இருக்கும் நாலு தலைவர்களும், ஆளுக்கு ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதனால், அவர்களும், தங்கள் தொகுதியை விட்டுவிட்டு அடுத்த தொகுதிக்கு வர மறுக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஆளுக்கு ஒரு மூலையாக, தனித்து செயல்படும் முறை கூட்டணியில் இப்படியே தொடர்ந்தால், கூட்டணி அமைத்ததற்கான பலனே இருக்காது என, கூறப்படுகிறது.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment