Friday, 3 October 2014





பிரிட்டிஷ் பிணைக்கைதி ஆலன் ஹென்னிங் தலையை துண்டித்து கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு சிரியா, ஈராக்கில், சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா அலறுகிறது. அந்த அளவுக்கு அந்த இயக்கம், கொடூர இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஈராக், சிரியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அரசுகளுக்கு எதிராக இஸ்லாமிய அரசு ஒன்றை பிரகடனம் செய்து, தன் ஆதிக்கக்கொடியை அந்த இயக்கம் நாட்டி வருகிறது. தனது சக சன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும், குர்து இன மக்களுக்கும் கூட இந்த இயக்கம் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.

ஈராக்கில் இந்த தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா மட்டும் வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது போரில் உலக நாடுகள் ஒன்று திரண்டு கை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, பிரான்சு, பிரிட்டன், இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி என 30க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகள் தாக்குதலில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்நாடுகள் தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் பிரிட்டிஷ் பிணையக்கைதியான ஆலன் ஹென்னிங் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஆலன் ஹென்னிங்கை தீவிரவாத குழு, பாறை முழங்காலில் நிற்கவைத்து தலையை துண்டித்து கொலை செய்துள்ளது. ஆலன் ஹென்னிங்கை கொலை செய்தவற்கு முன்னதாக பிரிட்டிஷ் நாட்டின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான அறிக்கையை வாசிக்க கூறியுள்ளனர். அடுத்ததாக அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் பீட்டர் காஸ்சிக்கை கொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் மிரட்டியுளனர்.

கொலை செய்யப்பட்டுள்ள ஆலன் ஹென்னிங் (வயது 47) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வடமேற்கு சிரியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருந்து எடுத்து சென்ற போது துப்பாக்கி ஏந்திய ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைய கைதிகளாக பிடிக்கபட்டார்.  ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகை நிருபர்களான ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தினர். பின்னர் டேவிட் ஹெய்ன்ஸ் (வயது  44) என்ற இங்கிலாந்து பிணைக்கைதியையும் கொன்றனர். தற்போது ஆலன் ஹென்னிங்கையும் தலை துண்டித்துக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா கொலையாளியை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று சபதம் தெரிவித்துள்ளது.

-தினத்தந்தி

0 comments:

Post a Comment