Friday, 3 October 2014


நாக்பூர்: ''தமிழகத்தில், ஜிஹாதி பயங்கரவாத செயல்கள் அதிகரித்து விட்டன; அதை தடுக்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், விஜயதசமியை ஒட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், மோகன் பாகவத் ஆற்றிய உரை: 'மங்கள்யான்' செயற்கைக்கோளை, செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு கவுரவம் ஏற்படுத்தும் விதத்தில் பதக்கங்கள் குவித்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்த ஆண்டு. ராஜேந்திர சோழன் ஆட்சியின் ஆயிரமாவது ஆண்டு இது.
மேற்கத்திய நாடுகளின் சுய நலக் கொள்கைகளால், ஐ.எஸ்.ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகள், மேற்காசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பயங்கரவாதத்தை வேருடனும், வேரடி மண்ணுடனும் அகற்றாத வரை, ஆங்காங்கே இதுபோன்ற பயங்கரவாதிகளும், இயக்கங்களும் தோன்றத் தான் செய்யும். இவற்றை அழிக்க ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த முயற்சி அவசியம். நாட்டின் உள்ளேயும், வெளியிலும், சில சக்திகள், இந்த நாட்டை சீர்குலைக்க வேண்டும் என திட்டமிட்டு செயலாற்றுகின்றன; மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதை ஆட்சியாளர்கள் விழிப்புடன் கண்காணித்து தடுக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் கேரளாவில், ஜிஹாதி என்ற பெயரில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. அந்த நடவடிக்கைகளை தடுக்க, அங்கு பெரிய அளவில் எந்த முயற்சியும் இல்லை. அந்த மாநிலங்களின் கடற்கரை கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. மேற்கு வங்கம் மற்றும் அசாமில், அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து குறிப்பிட்ட மதத்தினர் அதிகமாக ஊடுருவி, இந்த மாநிலங்களில் உள்ள மக்கள்தொகையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நக்சல் தீவிரவாதம் மற்றும் ஜிஹாதி பய ங்கரவாதத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து தடுக்க வேண்டும். இவ்வாறு, மோகன் பாகவத் பேசினார்.

அவரின் உரையை, தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது. இதற்கு, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தூர்தர்ஷன் தலைமை இயக்குனர், அர்ச்சனா தத்தா கூறும் போது, ''இது எங்களைப் பொறுத்த மட்டில் ஒரு செய்தி தான். இதற்காக நாங்கள் எவ்வித சிறப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை,'' என்றார்

0 comments:

Post a Comment