விஜய தசமி நாளில் பிரதமர் மோடி, முதன் முதலாக நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர், ‘‘நாம் ஒரு அடி முன்னேறினால் நாடு 125 கோடி அடி முன்னேறும்’’ என்றும், அனைவரும் கதர் துணி வாங்க வேண்டும் என்றும் கூறினார்.
வானொலியில் மோடி பேச்சு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதன் முதலாக அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
இன்று (நேற்று) விஜயதசமி. விஜயதசமி, தீமையை நன்மை வெற்றி கொண்ட நாள். இந்த நாளில் உங்கள் அனைவருடனும் என் மனதில் உதிக்கும் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய முதல் வானொலி உரையை உங்களிடையே தொடங்கி இருக்கிறேன்.
எதிர்காலத்திலும் நான் மாதத்தில் 2 அல்லது ஒரு நாளை ஒதுக்கி உங்களுடன் வானொலி மூலம் பேசுவேன். அது ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியாக இருக்கும்.
அழுக்கை, குப்பையை ஒழிப்போம் மும்பையில் இருந்து கணேஷ் என்பவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
அதில் அவர், இந்த நன்னாளில் நம்முடைய மனங்களில் உறையும் குறைந்தது பத்து வகையான அழுக்குகளை நீக்க நாம் உறுதி எடுத்துக்கொள்வோம் என்று எழுதி இருக்கிறார். இந்த விஜயதசமி நன்னாளில் அழுக்கையும், குப்பைகளையும் முற்றாக ஒழிப்பதில் நாம் வெற்றி காண்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.
‘தூய்மை இந்தியா’ திட்டம் மகாத்மா காந்தி பிறந்த நன்னாளில் 125 கோடி இந்திய மக்கள் இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் இதை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நேற்று இந்த திட்டத்தை தொடங்கியபோது ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். 9 முக்கிய பிரமுகர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதை வீடியோ படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்ற வேண்டும். அந்த 9 பேரும் மேலும் 9 பேரை இதே போல செய்வதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். நீங்களும் இதில் கலந்து கொள்ளுங்கள். நீங்களும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உங்களுக்கு பரிச்சயமான 9 பேரை இதே போன்ற பணியில் ஈடுபடுவதற்கு அழைப்புவிடுங்கள். அதிக தூரம் எல்லாம் போகவேண்டாம். உங்கள் அருகில் உள்ள நண்பர்களிடம் கூறுங்கள். அவர்கள் மேலும் 9 பேரிடம் எடுத்துச் சொல்லட்டும். அந்த 9 பேர் மேலும் 9 பேரிடம் எடுத்துச் சொல்லட்டும். இப்படி மெல்ல மெல்ல இத்தேசம் முழுதும் சுத்தமான ஒரு சூழல் உருவாகும். இந்த பணியை நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கதர் வாங்குங்கள் மகாத்மா காந்தியைப் பற்றி பேசும்போது கதர் பற்றி பேசவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். உங்கள் குடும்பங்களில் பலவிதமான ஆடைகளும், பலவிதமான துணி வகைகளும் பல்வேறு நிறுவனங்களின் துணிவகைகளும் இருக்கலாம். அவற்றில் ஒன்றாக கதர் ஏன் இருக்கக் கூடாது?
குறைந்தது ஒரு கைக்குட்டை அல்லது துண்டு, போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை உறை அல்லது திரைச்சீலை என்று ஏதாவது ஒன்றாவது கதர் துணியில் இருக்கட்டும். நீங்கள் கதர் துணியை வாங்கும்போது ஒரு ஏழையின் வீட்டில் தீபாவளி விளக்கு எரிகிறது. இதனை செய்து பாருங்கள்.
வலிமையே வரம் 125 கோடி இந்தியர்கள் அளவற்ற திறன் மற்றும் வலிமையை வரமாக பெற்றவர்கள்.
நம் விஞ்ஞானிகள் நம்முடைய வல்லமையை நிரூபித்து இருக்கிறார்கள். மிகவும் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறார்கள். மங்கள்யான் திட்டம் நம்முடைய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் திட்டமாகும். நமக்கு தேவையானது எல்லாம் நம்முடைய வலிமையை நாம் சரியான முறையில் புரிந்துகொள்வதுதான்.
மாற்றுத்திறனாளிகள் மின்னஞ்சல்கள் வழியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பலரும் என்னை தொடர்பு கொண்டு எழுதுகிறார்கள். கவுதம் பால் என்று ஒருவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி எனக்கு எழுதி இருக்கிறார்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் நாம் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர் எழுதியதை உண்மையாகவே நான் மிகவும் விரும்பினேன்.
முதல்–மந்திரியாக இருந்தபோது... நான் குஜராத் மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருந்தபோது ஏதென்ஸ் மாநகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் சென்றார்கள். வெற்றியுடன் திரும்பி வந்தார்கள். அந்த குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் 2 மணி நேரம் செலவழித்தேன். அது என் வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணமாகும்.
இந்த தேசம் அனைவருக்கும் சொந்தமானது. வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் மக்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.
நல்ல ஆலோசனை குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் அமைந்த பாடங்களை சிறு வயதிலேயே தொடங்க வேண்டும் என்று மக்கள் பலரும் எனக்கு மின்னஞ்சலில் எழுதி இருக்கிறார்கள். இது நல்ல ஆலோசனை.
நீங்கள் அனைவரும் இதுபோன்ற நல்ல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல சம்பவங்களை, உண்மையாக நடந்த சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் அதை நாட்டு மக்கள் அனைவருடனும் நான் பகிர்ந்துகொள்வேன்.
சேவை செய்வோம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்து நம்முடைய தாய்த் திருநாட்டுக்கு சேவை செய்வோம். நம்முடைய அற்புதமான நாட்டை மேலும் உயர்த்துவோம். புதிய சிகரங்களை நோக்கி நாட்டை அழைத்துச் செல்வோம்.
நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அடிகளை எடுத்து வைப்போம். நாம் அனைவரும் ஒரு அடி முன்னேறினால் இந்த நாடு 125 கோடி அடி முன்னேறும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
-தினத்தந்தி.
0 comments:
Post a Comment