ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சோதனை அடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேலாக முடிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தேசிய வாக்காளர் பதிவேட்டில் பொதுமக்களின் பெயர்களைப் பதிவு செய்யும் பணியைத் தீவிரப்படுத்தி ஆதார் எண்ணை வழங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு வட்டத்திலும் நிரந்தர முகாம்களை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1.98 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் போலி அட்டைகளைக் களையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இப்போதுள்ள தாள்களை அடக்கிய குடும்ப அட்டைக்குப் பதிலாக, பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்ட ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டையை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டு மாவட்டங்கள் தேர்வு: ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகளைச் சோதனை அடிப்படையில் வழங்க அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இந்தப் பதிவேட்டின்படி, விரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகியன படம் எடுக்கப்பட்டு, பொதுமக்களின் அடிப்படைத் தகவல்களும் (பெயர்-முகவரி) சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை மையமாகக் கொண்டு ஆதார் எண் வழங்கப்படுகிறது. மக்கள் தொகை பதிவேட்டில் பதிவாகியுள்ள அனைத்துத் தகவல்களையும் அப்படியே பெற்று அதன் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளைத் தயாரிக்கும் பணியில் உணவுத் துறை ஈடுபட்டுள்ளது.
நிரந்தர முகாம்கள்: தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் சிறப்பு முகாம்களின்போது மட்டுமே தேசிய வாக்காளர் பதிவேட்டில் பெயரைப் பதிவு செய்து, ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் அனைத்துத் தரப்புக்கும் ஆதார் எண்ணை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 73 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், தேசிய வாக்காளர் பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட தகவல்களையும், கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவற்றையும் பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நிரந்தர முகாமை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முகாம்களை அமைப்பதன் மூலம், பொதுமக்கள் எந்த நேரமும் அங்கு சென்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்து ஆதார் எண் பெறுவதற்கு வழி ஏற்படும். பிறந்த குழந்தைகளுக்கும்கூட சிரமமின்றி தகவல்களைப் பதிவு செய்ய இந்த நிரந்தர முகாம்கள் வாய்ப்பாக அமையும் என்று வருவாய்த் துறை வட்டாரங்கள் கூறினர்.
தினகரன்.
0 comments:
Post a Comment