பாஸ்போர்ட் வழங்குவதில் போலீசார் விசாரணை காரணமாக ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.பாஸ்போர்ட் வாங்க விரும்புவோர் விண்ணப்பித்த பிறகு அவர் மீது குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கிய பிறகே பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை காணப்பட்டு வருகிறது. தற்போது இந்த முறையை மாற்றி பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த புதிய நடைமுறையில் ஆதார் அட்டை மூலமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டு பார்த்து விண்ணப்பதாரரின் குற்ற வழக்குகளின் தன்மைகளை கண்டறிந்து விட முடியும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று வெளியுறவுத்துறை, உள்துறை, சட்டத்துறை, புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறைக்கு தேவையான ஆதார் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதமர் மோடிக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆதார் அட்டை இல்லாதவர்களின் ஆதார் எண்ணை வைத்து மட்டுமே இதனை ஏற்றுக் கொள்வது என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது.
பாஸ்போர்ட்டுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில், செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் உதவியின் மூலமாக விண்ணப்பதாரரின் குற்ற தன்மைகள் குறித்து உறுதி செய்வது இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தினகரன்.
0 comments:
Post a Comment