Saturday, 4 January 2014


       வ.களத்தூரில், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டியுசன் சென்டர் விவேகானந்தர் பிறந்த தினத்தன்று துவக்கப்பட உள்ளது. தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப்படும் 12-01-2014 ல்  துவக்கப்படும் சிறப்பை இந்த சிறப்பு வகுப்பு பெறுகிறது.
      LKG முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்ற மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும்  பயிற்சி அளிக்கப்படும்.இருபாலரும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
         வாரம் ஒருமுறை, இன்று பள்ளிகளில் கற்றுகொடுக்க மறந்த பண்பாட்டு கல்வி கற்றுகொடுக்கப்படும். மாதம் ஒருமுறை ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நடத்தட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த ஆலோசனை செய்யப்படும்.
       வ.களத்தூர் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு- 99484 46709, 80152 55587, 97867 62199.

Friday, 3 January 2014

வேப்பந்தட்டை, : வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் நெறி குறவர் காலனியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
விழாவுக்கு நெறிகுறவர் சங்க மாநில பொறுப்பாளர் நம்பியார் தலைமை வகித்தார். ஹெல்ப்பிங் ஹேன் சொசைட்டி தலைவர் சிலம்பரசி, செயலாளர் சூரியசேகர், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய மக்கள் உரிமைகள் இயக்க கொள்கை பரப்பு செயலாளரான டாக்டர் கோசிபா, நெறி குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

நன்றி-தினகரன்.


ஆமதாபாத்: இணையதளத்தை தொடர்ந்து, ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை தொடங்கியுள்ளார் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. சமூக வலைதளங்களை சக்திவாய்ந்த ஊடகமாக கருதக்கூடியவர் நரேந்திர மோடி. இதனால், பேஸ்புக், டிவிட்டரிலும் பிரசாரம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை முழுமையாக பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் ‘இந்தியா 272.காம்‘ என்ற இணையதளத்தை தொடங்கி, தனது பிரசாரங்கள் இளைஞர் சமுதாயத்தையும் சென்றடையும் வகையில் மாற்றிக்காட்டினார்.
 இதன் தொடர்ச்சியாக தற்போது ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை தொடங்கியுள்ளார்.( பதிவிறக்கம் செய்ய  http://www.india272.com/  ). வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 272 இடங்களை பாஜ பிடிக்க வேண்டுமென இலக்கு வைத்துள்ள மோடி, அதையே தனது மந்திர எண்ணாக அப்ளிகேஷனுக்கும் வைத்துள்ளார். இந்த புதிய அப்ளிகேஷனில் தன்னார்வலர்கள் இணைந்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம், அடுத்த பிரசார கூட்டத்தில் மோடி எப்படி பேசலாம் என்பது பற்றி கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

மேலும், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் புதிய பதிவுகளை இந்த அப்ளிகேஷன் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து மோடி தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்த கருத்தில், ‘இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் கட்சிக்கு இன்னும் பல சக்திவாய்ந்த தன்னார்வலர்கள் கிடைப்பார்கள். அவர்கள் எளிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்‘ என கூறியுள்ளார்.

நன்றி-தினகரன்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர். ரம்யாவை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கிடையே, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில், 42 முதல் 44 வரை எடையுடைவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஆர். ரம்யா இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி ஆர். ரம்யாவை வெள்ளிக்கிழமை பாராட்டிய  மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைத்து, தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும், முறையான பயிற்சிகளையும் வழங்க வேண்டுமென விளையாட்டுத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதன்மை கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், மேலமாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச்  சேர்ந்தவர் சோலைமுத்து (42). அவரது உறவினர், கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் (55).
விவசாயிகளான இருவரும், வெள்ளிக்கிழமை மாலை வேப்பந்தட்டையிலிருந்து, நெய்க்குப்பை கிராமத்துக்கு தொண்டப்பாடி கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, வ. களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து
மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  காயமடைந்த வேலாயுதம், பெரம்பலூர் அரசுருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வ. களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

நன்றி-தினமணி.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                    எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்  பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2008க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.  மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.
மேலும் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு 50.000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ/மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.
மனுதாரர்கள் தங்களின்  அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வருகை தந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக  பூர்த்தி செய்து  படிவங்கள் 28.02.2014க்குள் அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கலாம்.   இந்த வாய்ப்பை தகுதியுடையோர் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Thursday, 2 January 2014


non-MRP பாஸ்போர்ட்

கையால் எழுதப்பட்ட / போட்டோ ஒட்டப்பட்ட  மற்றும் 2௦ வருட செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் வரும் நவம்பர் 25- 2௦14 முதல் செல்லாது என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சிவில் விமான அமைப்பு , வரும் நவம்பர் முதல் இத்தகைய பாஸ்போர்டுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறித்தி உள்ளதால் இனி வெளிநாடுகள், கையால் எழுதப்பட்ட non-MRP என அழைக்கப்படும் எந்திரத்தால் படிக்க முடியாத இத்தகைய பஸ்போர்டுகள் செல்லாது என அறிவிக்க உள்ளன. எனவே இத்தகைய பாஸ்போர்டுகள் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்டுகள் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவிக்கு தேசிய அழைப்பு எண் 18002581800 எண்ணுக்கோ அல்லது www.passportindia.gov.in என்ற இணையதள முகவரிக்கோ சென்று விபரம் அறியலாம். மேலும் பாஸ்போர்ட் விபரம் அறிய 9704100100 என்ற எண்ணுக்கு sms அனுப்பியும் விபரம் பெறலாம்.

தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் மன்றம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா பெரம்பலூரில் 31-01-2014 முதல் 09-02-2014  வரை, புதிய பேருந்துநிலையம் அருகில் நடை பெற உள்ளது.


24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள்,  தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும்  சந்தேகங்களைக்  கேட்டு தெளிவு பெற   1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள  24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

நன்றி-தினமணி.


 இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என அழைக்கப்படும் பகுதியும், அதில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், அந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும் எண்ணும் (அதாவது 100, 1000 என) உள்ளது.  அந்த இடத்தில் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘ அடிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அந்த ஓட்டை பெரிதாகி விடுகிறது. இது மட்டுமல்லாது இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே ‘ஆர்ட்டின் படம்‘ வரைகின்றனர். ஒருவர் பெயரை எழுதி கவிதைகள், காதல் வசனங்கள் கூட எழுதுகின்றனர்.

இந்திய ரிசர்வ¢ வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டில் இந்த வாசகங்கள் இடம் பெறுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. ‘வாட்டர் மார்க்‘ பகுதி மாசடைவதால் அந்த ரூபாய் நோட்டுகளை உண்மை தன்மையை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் எழுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் எழுத்துக்கள், எண்கள், பின் அடித்த ஓட்டைகள் இருந்தால் அந்த நோட்டுகளை வங்கிகள் மீண¢டும் புழக்கத்திற்கு அனுமதிக்கக் கூடாது.

அந்த நோட்டுகள் புழக்கத்திற்கு அனுமதிக்க தகுதி இல்லாதது. வங்கிகளும் ரூபாய் நோட்டுகளில் எண்ணால் எழுதக் கூடாது. இது ரிசர்வ் வங்கியின் ‘கிளீன் நோட்‘ கொள்கைக்கு எதிரானது. இவ்வாறு அனைத்து வங்கிகளின் தலைவர்கள், முதன்மை செயல் அலுவலர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2014 ஜன.1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியதாக தகவல்கள் வெளியானது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் இன்று தான் வங்கிகள் திறக்கப்படும். எனவே, இன்று முதல் கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போது அவை மீண்டும் புழக்கத்திற்கு அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஏற்கனவே ரிசர்வ் வங்கி இதுபோன்று அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் இந்த திட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என வங்கி கிளைகளுக்கு முறையான தகவல¢ இல்லை‘‘ என்றனர்.

நன்றி-தினகரன்.
மதுரை: எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். ஆனந்த முருகன் தாக்கல் செய்த மனுவில், ஆதார் அட்டை கேட்கும் எரிவாயு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி எரிவாயு நிறுவனங்கள் ஆதார் அட்டை கேட்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அமைச்சரவை செயலாளர் உட்பட 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பித்தனர்.

நன்றி-தினகரன்.


முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பொங்கல் பரிசு இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ஆகியன பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசுக்கான பொருட்கள் இருப்பு குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பொங்கல் பரிசு வழங்கும் தேதியை முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு பை வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே சமயத்தில் விநியோகிக்கப்படலாம் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Tuesday, 31 December 2013


பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜன. 7-ல் தொடங்குகிறது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட ஒன்றியங்களுக்குள்பட்ட தகுதியான நபர்கள் காலி பணியிட விவரங்களை அந்தந்த வட்டார வள மையத்தில் உள்ள தகவல் பலகையில் தெரிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிடவற்றுடன் காலை 10 மணிக்கு வட்டார வள மையத்தில் நடைபெறும் எழுத்து தேர்வில் பங்கேற்கலாம்.
காலியாக உள்ள 2 மாவட்ட ஒருங்கிணைப்பாளார் பணியிடத்திற்கு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ல் எழுதுத் தேர்வு நடைபெற உள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, ஏதேனும் பட்டப் படிப்பு, கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 6, 000.
பெரம்பலூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ம் தேதி நடைபெறும். கல்வித் தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி, மாத சம்பளம் ரூ. 2,000.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 17 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜன. 8-ம் தேதி, வேப்பந்தட்டை வட்டார வள மையத்தில் நடைபெறும். ஆலத்தூர் ஒன்றியத்தில் 19 மையப் பொறுப்பாளர்களுக்கு, ஜன. 9-ம் தேதி ஆலத்தூர் வட்டார வள மையத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். வேப்பூர் ஒன்றியத்தில் 10 மையப் பொறுப்பாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு, வேப்பூர் வட்டார வள மையத்தில் ஜன. 10ம் தேதி நடைபெறும். இந்த பணி நியமனம் முற்றிலும் தாற்காலிகமானது.

நன்றி- தினமணி.

Monday, 30 December 2013


பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜன. 2 முதல் நவீன செல்போன் பழுதுநீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தப் பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 40 வயதிற்குக் குறைவாக, 10-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 10 நாள்கள் அளிக்கப்படும் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
 பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவோர் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதியை குறிப்பிட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து பயிற்சி மையத்துக்கு அனுப்ப வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு ஐ.ஓ.பி சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர்-  621212 (போன் - 277869) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.

Saturday, 28 December 2013

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 04.01.2014 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் வாரிசுகளுக்கும், பெரும் காயம் மற்றும் சிறு காயம் அடைந்த நபர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாலைவிபத்து நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 04.01.2014 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது
                வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இம்முகாம் நடத்தப்படவுள்ளது. எனவே சாலைவிபத்தில் இறந்த நபரின் வாரிசுதாரர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது குடும்ப அட்டை நகல், வாரிசுச்சான்று, இறந்த நபருக்கான இறப்புச்சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் தவறாது இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

தொழில்பயிற்சி(ITI) , வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயபடிப்பு முடித்துள்ள பதிவுதாரர்கள்   இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தகவல்
பட்டயபடிப்பு முடித்துள்ள பதிவுதாரர்கள்   இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                                தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் விவரங்கள் யாவும் இணையதளத்தின் வழி ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்துள்ள நபர்களின் பதிவு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் முழுமைப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின்  பதிவு விவரங்களையும் சீரான கால இடைவெளிகளில் குறிப்பிட்ட தகுதி பதிவுதாரர்களின் வகைபாடுகள் வாரியாக இணையதளத்தில் சரிபார்த்து முழுமைப்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
                                எனவே பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து வகையான தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ) முடித்துள்ள பதிவுதாரர்களுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயப்படிப்பு முடித்துள்ள (Dip. In Agri/Hortculture) பதிவுதாரர்களுக்கும்  தங்களது பதிவு அடையாள அட்டையின் இணையதள கணினிப் பிரதி ஒன்றினை   www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களின் பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டையில் பதியப்பட்டுள்ள கல்வித்தகுதிகள்  மற்றும் இதர குறிப்புகள் யாவும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா  என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்கள் விடுபாடுள்ள பதிவுதாரர்கள் மட்டும் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் நகல் பிரதிகளுடன்  11.01.2014ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு  நேரில் வந்து  தங்களது பதிவு விவரங்களை இணையதளத்தில் விடுபாடின்றி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். விபரங்கள் விடுபாடுள்ள பதிவுதாரர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
 இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Friday, 27 December 2013



நரேந்திர மோடி – இந்தியாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு எதிராக பத்தாண்டுகள் பெரும் ஊடக முதலாளிகளும் அரசாங்கமும் சேர்ந்து மிகப் பெரிய பிரச்சார தாக்குதல் நடத்தியது நரேந்திர மோடிக்கு எதிராகத்தான். தொடர்ந்து மோடி கலவரங்களுக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டார். கலவரம் முடிந்து ஒவ்வொரு நாளும் இந்த குற்றச்சாட்டுகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன.புது புது சாட்சிகள் உருவாக்கப்பட்டனர்.28 பிப்ரவரி 2002 இல் இஷான் ஜாஃப்ரி எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலவரம் செய்த ஒரு ஹிந்து கும்பலால் கொல்லப்பட்டார். அவர் இருக்கும் இடம் பாதுகாப்பானது என புகலிடம் தேடி வந்த முஸ்லீம்களில் 68 பேர் கொல்லப்பட்டனர். குல்பர்கா படுகொலை என அழைக்கப்படும் இந்த படுகொலையில் மோடியை தொடர்பு படுத்துவதற்குதான் நம் போலி மதச்சார்பற்ற ஊடகங்களூம் அதிகார வர்க்கமும் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றன. மே 2002 இல் இந்த படுகொலை குறித்த முதல் பொய்யை பரப்பியவர் அருந்ததி ராய் ஆவார்.
அருந்ததி ராய்
இந்து கும்பலால் ஜாஃப்ரியின் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர் என விரிவாக விளக்கமாக ஒரு கட்டுரைடை அவுட்லுக் பத்திரிகையில் வெளியிட்டார். கூடவே மோடி இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக ஜாஃப்ரி கடுமையாக பிரச்சாரம் செய்தார் என்றும் சொல்லி கோடி காட்டினார். ஆனால் ஜாஃப்ரியின் மகன் ஏற்கனவே ஆசியன் ஏஜ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்போது இந்தியாவில் வாழ்ந்த அவரது வாரிசு தான் மட்டுமே அவரது இதர சகோதர சகோதரிகள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்தனர் என்றும் கூறினார்.பகிரங்கமாக அசிங்கப்பட்ட அருந்ததி ராய் இப்படி பச்சையாக பொய் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது.ஆனால் பொய்க்கு மன்னிப்பு கேட்பதில்கூட அருந்ததிராயால் பொய் சொல்ல முடியும்.
நச்சல்களுடன் அருந்ததி ராய்
‘அன்று சமன்புராவில் பலாத்காரம் செய்யப்பட்ட பத்து பெண்களில் ஜாஃப்ரியின் மகள்கள் இல்லை.’ ஆனால் மார்ச் 2002 முதல் வாரம் வரை இந்த பலாத்காரம் குறித்த செய்திகள் சமன்புராவிலிருந்து கலவரங்களை ரிப்போர்ட் செய்த பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. மார்ச் இரண்டாவது வாரம் முதலே வர ஆரம்பித்தன. பிப்ரவரி 28 கலவரங்கள் குறித்த செய்திகள் மார்ச் 1 ஆம் தேதி வந்த ரிப்போர்ட்கள் எதிலும் அவை இல்லை. ஒரு கட்டத்தில் இந்த போலி மதச்சார்பின்மை சக்திகளின் பிரச்சார பொய்கள் எந்த அளவு இருந்தது என்றால், ஏப்ரல் 2002 இல் நஃபீஸா ஹுசைன் எனும் (மோடிக்கு எதிரான) தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் பல அமைப்புகளையும் ஊடகங்களையும் சிறுபான்மை சமுதாய பெண்கள் கலவரங்களில் சந்தித்த வன்முறைகளை பல மடங்கு அதிகரித்து செய்திகள் வெளியிடுவதாக குற்றம் சாட்டினார். உண்மையில் நடந்தது என்ன? காவல்துறை விரைந்து வந்தது. தீயணைக்கும் படையும் வந்தது. ஆனால் காவல்துறை ஒரு பெரிய கலவரக் கும்பலை எதிர்க்க வேண்டி இருந்தது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. கலவரக் கும்பலில் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டனர். கலவரக் கும்பலால் தீயணைப்பு படை வேன் நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் மேல் காவல்துறை குல்பர்காவில் வாழ்ந்த 250க்கும் அதிகமான இஸ்லாமியரில் 200 பேரை காப்பாற்றினார். அவர்களால் காப்பாற்றப்பட முடியாமல் போன ஐம்பதுக்கும்அதிகமான இஸ்லாமியரில் ஜாஃப்ரியும் ஒருவர்.இந்த படுகொலை குறித்து போலி மதச்சார்பின்மைவாதிகள் செய்ய ஆரம்பித்த புனைவுகளில் 2006 க்கு பிறகுதான் ஜாஃப்ரியின் மனைவி தனது கணவர் முதலமைச்சர் மோடிக்கு தொலைபேசி உதவி கேட்டதாகவும் ஆனால் அதை முதலமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டார்.2002 இல் இருந்து 2006 க்குள் நானாவதி கமிஷன் முன்னால் சாட்சியமளித்த போது ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் ஸாக்கியா ஜாஃப்ரி, மோடிக்கு எதிராக இயங்கும் போலீஸ் அதிகாரி சஞ்சய் பட், தீஸ்டா செதால்வத் ஆகியோர் இணைந்து மோடிக்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்கினார்கள். குல்பர்கா கலவர படுகொலையில் மோடிக்கு பங்கு உண்டு என்பதாக ஒரு பிரச்சார மாயையை அவர்கள் உருவாக்கினார்கள். இது நீதித்துறைக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் ஒரு தனி சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தியது.
சஞ்சய் பட்

சிறப்பு புலனாய்வு பிரிவு மோடியை பல மணி நேரங்கள் விசாரித்தது. இது போலி மதச்சார்பின்மை ஊடகங்களில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்பட செய்தது. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவின் அறிக்கை வந்த போது அவை அதிர்ச்சிக்கு உள்ளாகின. எப்படி சஞ்சய் பட் பொய்கள் சொல்லியிருந்தார், போலி ஆதாரங்களை உருவாக்கியிருந்தார், எப்படி சில ஊடகங்கள், சில தனிமனிதர்கள் மோடிக்கு எதிராக எந்த அளவுக்கும் சென்று பொய் சொல்ல துணிந்திருந்தனர் என்பதையெல்லாம் சிறப்பு புலனாய்வுத் துறை தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. சஞ்சய் பட்டின் மின்னஞ்சல்களை ஆராய்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அறிக்கை கூறியது:
சஞ்சய் பட், பல்வேறு என்ஜிஓக்களி சில அரசியல் தலைவர்கள் என உள்நோக்கம் கொண்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள். திரு சஞ்சய் பட் இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்களுடன் ஒத்துழைப்பதன் காரணமே எப்படியாவது நரேந்திர மோடியின் மீது ஒரு குற்றப்பத்திரிகை பதிவாகிவிட வேண்டும் என்பதுதான்.
இதே சக்திகளால் மீண்டும் ஸாக்கியா ஜாஃப்ரி தூண்டிவிடப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்கு எதிராக மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் மோடி விசாரணை செய்யப்படவேண்டும். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வருவதாக இருந்தது. ஏறக்குறைய இத்துடன் மோடியின் அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்கிற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் எழுதின. மோடியை பிரதமமந்திரியாக முன்வைத்து பாஜக இயங்கும் போது இந்த தீர்ப்பு வருகிறது. இது மிக முக்கியமான தீர்ப்பு. ஆனால் தீர்ப்பு வந்தது. நரேந்திர மோடிக்கு 2002 கலவரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை ஏற்புடையது என்கிறது நீதி மன்றம்.
மோடி 2002 குஜராத் கலவரம் குறித்து என்ன சொல்கிறார்?
எனக்கு இந்த கலவரத்துடன் தொடர்பு உண்டு என்றால் இந்த கலவரத்தை நான் அரசு உதவியுடன் அனுமதித்தேன் என்றால் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம். தூக்கில் போடுங்கள். எத்தகைய கொடுமையான தண்டனை இந்த குற்றத்துக்கு பொருத்தமானதோ அந்த தண்டனையை அளியுங்கள்.
இதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இதற்காகவே சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல ஒன்பது மணி நேரம் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார்.ஆனால் போலி மதச்சார்பின்மை ஊடகங்களோ மீண்டும் மீண்டும் பொய்களையே அவருக்கு எதிராக பரப்பி வருகின்றனர். இந்த தீர்ப்பு மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க மட்டும் செய்யவில்லை. மேலும் மோடி மிகுந்த வேகத்துடன் கலவரத்தை அடக்க ராணுவத்தை அழைத்ததும் பாராட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், போலி மதச்சார்பின்மை சக்திகள், காங்கிரஸினால் வளர்த்துவிடப்பட்ட செல்லபிராணிகளான் ஊடகங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிடுகின்றன. மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. அவர் சவால்களை மீறி வளர்கிறார். வெறுப்பு பிரச்சாரங்கள வளர்ச்சியின் சாதனைகளால் சந்திக்கிறார். மதச்சார்பின்மை பேசும் சக்திகள் மத அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்களை ஆயுதங்களாக வீச, இந்துத்துவரான நரேந்திர மோடியோ மதம் கடந்த மனித நேய சமூக பொருளாதார வளர்ச்சியை தன் ஒரே ஆயுதமாக முன்னிறுத்துகிறார். அவரது ஒரே கவசம் அவரது நேர்மை. ஆனால் போலி மதச்சார்பற்ற சக்திகளோ தங்கள் பாடத்தை படித்ததாக தெரியவில்லை. 

நன்றி-http://www.tamilhindu.com
அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம்  - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: 



லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பணியாற்றுவது அரசு அலுவலர்களின் கடமையாகும். பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் கேட்போர் மீது எவ்வித அச்சமின்றி புகார் அளிக்கலாம். அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியரின் அலைபேசி எண்ணும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரின் அலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருக்க வேண்டும்
லஞ்சம் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என்று நினைப்பது முறையான செயல் அல்ல. எனவே பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம் 94441-75000 என்ற எண்ணிலோ, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரிடம் 94450-48952, 94450-48862 என்ற எண்களிலோ அல்லது அரியலூரில் கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்ட எண்கள் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Thursday, 26 December 2013

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில்  இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவத்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
                விவசாயிகளுடனான வேளாண் உற்பத்திக்குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.12.2013) நடைபெற்றது.
                இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
வேளாண் விளைபொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் ஈட்டும் இடைத்தரகர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியர் தலைமையில் விரைவில் குழு அமைக்கப்படும். விவசாயிகளும் இடைதரகர்களை நம்பாமல் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் விளைபொருட்களை இடைதரகர்கள் யாருமின்றி நேரடியாக பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக அதிக விலைக்கு  விற்பனை செய்திடலாம்.  ஒழுங்குமுறை கூடத்தில் மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம்.
பருத்தி பயிர்கள் நோய்தாக்குதலுக்கு உள்ளானதற்கு வழங்கப்பட்ட விதைகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விவசாயிகள் கருதுவதால் அந்த விதைகளை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டில் தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் 5,000 ஹெக்டேரில்  தோட்டக்கலை பயிர்களை பயிரிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு விவசாயிகள் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.ஏ. சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு. திரு. வே. அழகிரிசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கி.கண்ணதாசன், மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள், விவசாய சங்ககங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
      செய்தி வெயீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 22.12.2013 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதன்படி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான நிலம் வாங்கும் திட்டம்,  இருபாலருக்குமான நிலம் மேம்பாடு திட்டம்,  தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பெட்ரோல் டீசல் கேஸ் மற்றும் சில்லரை விற்பனை நிலையம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம்  மருத்துவமனை, மருந்துக்கடை, கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாரா கடனுதவி விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க நிதியுதவி. உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 இலட்சமாக இருக்க வேண்டும். சிறப்புத் திட்டமான பெட்ரோல் டீசல் கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்.
இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கும் , தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கும் குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை. பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க மனுதாரரின் வயதுவரம்பு 25லிருந்து 45க்குள் இருக்க வேண்டும்.
                இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள்  http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும். மனுதாரரின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தில் ரூ.20/- செலுத்தி மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த அரியவாய்ப்பை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.