Sunday, 9 February 2014



சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளையும், நாளை மறுதினமும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உடன்பாடு நிலுவையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊழியர்கள் நலனுக்கு எதிரான வங்கி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த கூடாது, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், வெளிநாட்டு வங்கிகளை இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தன.

இதையடுத்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 18ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வங்கிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் அமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஊதிய உயர்வை 5 சதவீதம் அதிகரித்து 9.5 சதவீதம் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், ஜனவரி மாதம் 0.5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. 30 சதவீதம் ஊதிய உயர்வு வலியுறுத்தி வரும் வங்கிகள் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளையும், நாளை மறுதினமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 2 நாள் வேலை நிறுத்தத்தில் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். வேலை நிறுத்தம் குறித்து இந்திய வங்கி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த வங்கி யூனியன்களில் அங்கம் வகிக்கும் ஊழியர்களின் ஏஐபிஇஏ, என்சிபிஇ, ஐஎன்பிஇஎப், என்ஓபி டபிள்யு.

பிஇஎப்ஐ ஆகிய 5 யூனியன்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் ஏஐபிஓசி, ஐஎன்பிஓசி, எஐபிஒஏ, என்ஒபிசி ஆகிய நான்கு கூட்டமைப்புகள் ஆகியவை ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்து நாளை மற்றும் 11ம் தேதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கான அழைப்பை விடுத்துள்ளது. வங்கிகள் குழுமம் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. ஒரு வேளை வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால் மேற்கூறிய 2 தினங்களில் வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக ஏடிஎம்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment