தலபெருமை-
சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கு, இவளது அக்கா செல்லியம்மன் சன்னதியிலிருந்து இரண்டு குதிரைகளில் சக்தியை அழைத்து வருவார்கள். அதற்கு முன்பே யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் பூப்போட்டு விடும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவே திருவிழா ஆரம்பம் என்பதற்கு முக்கிய அறிவிப்பு. இதன்பிறகு காப்பு கட்டி எல்லா பிரிவினரும் வந்து கலந்து கொள்வர். திருவிழா ஆரம்பம் முதல் 15 நாட்கள் வரை நடைபெறும் ஒவ்வொரு நாளும் சக்தி அழைத்து வரும்போதே ஊர் எல்லைகளில், எல்லைக்கு ஒரு ஆட்டுக்கடா வீதம் பலிகொடுப்பார்கள். அப்படி பலி கொடுத்த ஆட்டு ரத்தத்தைப் பிடித்து துணியில் மூடி கட்டி வைத்திருப்பார்கள். 15 நாட்கள் கடந்த பிறகு அதை எடுத்து ஊர் எல்லையில் வைத்து சட்டியை உடைப்பார்கள். அப்போதும் அந்த ஆட்டு ரத்தம் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்திக் காட்டும் அம்மன் இவள்
தலவரலாறு-
முற்காலத்தில் கொல்லி மலையில் இந்த ஏழு சகோதரிகளும் துஷ்ட தெய்வங்களாக இருந்துள்ளனர். அப்பகுதி மக்கள் இரவானால் பயந்து நடுங்குவார்களாம். இரவில் கும்பலாக கும்மியடிப்பது, பாடுவது, ஆடுவது என இவர்கள் பல அமர்க்களமாக இருந்துள்ளனர். இவர்களால் நமக்கு நிம்மதி போச்சு; பயந்து பயந்து எத்தனை காலம்தான் இப்படி வாழ்வது என்று அப்பகுதி மக்கள் முடிவு செய்து, ஒருநாள் பகல் பொழுதில் இந்த ஏழு அம்மன்களையும் தனித்தனியே கூடைகளில் வைத்து, அப்போது மழைக்காலம் என்பதால் ஆற்றில் வந்த வெள்ளத்தில் அந்தக் கூடைகளை வைத்து அனுப்பிவிட்டனர். அப்படி மிதக்கவிடப்பட்ட இத்தெய்வங்கள் பெரம்பலூர் நடுவில் மூத்தவளான செல்லியம்மனும்,ஊருக்கு மேற்கில் அரணாரை பகுதியில் நீலியம்மனும், ஏரிக்கரையோரம் வெள்ளம் தாங்கியம்மனும், ஊருக்கு கிழக்கில் ஆலந்துறையம்மனும், வடக்கில் திருமங்கையம்மனும், லாடபுரத்தில் திரவுபதியம்மனும், நொச்சியத்தில் பூவாடையம்மனும் கரை ஒதுங்கி, அங்கேயே கோயில் கொண்டு, தங்கள் கோபதாபங்களை எல்லாம் விட்டுக் குளிர்ந்து, பக்தர்களின் மனதையும் குளிரவைத்து, அவர்களுக்கு எல்லையம்மன்களாக விளங்கி பலவிதமான நிகழ்வுகளை நடத்திக்காட்டி பெரும் புகழ் பெற்றுள்ளனர்.
இந்த ஏழுபேரில் வெள்ளம் தாங்கியம்மன் கோபக்கனல் கொண்டவள். இவள் இங்குள்ள ஏரியின் கீழ்ப்பகுதிக் கரையோரம் வந்து ஒதுங்கியதால், அதே இடத்தில் வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் பெரு மழை பெய்து ஊரெல்லாம் வெள்ளம். பெரம்பலூர் ஏரி நிரம்பி விட்டது. எப்போது வேண்டுமானாலும் கரை உடைந்து ஊரே நாசமாகும் அபாயம். மக்கள் அம்மனிடம் அருள் கேட்டனர். அப்போது அருள் வந்து சாமியாடிய பெண்ணோ, நிறைமாத கர்ப்பிணியைப் பலி கொடுக்க வேண்டும் என்று சொல்ல, மக்கள் மிரண்டு போனார்கள். ஆனாலும் என்ன செய்வது? ஊர் பெரியவர்களின் பார்வை கோயில் பூசாரிமீது விழுந்தது. பூசாரி மிரண்டு போனார். காரணம், பூசாரியின் மகள் முதல் பிரசவத்திற்கு வந்து தங்கியிருந்தாள். பூசாரிக்கும் அவரைச் சார்ந்த பங்காளிகளுக்கும் விஷயம் புரிந்தது. விபரீதம் நிகழாமல் எப்படி தடுப்பது என்று ஆலோசனை செய்தார்கள். மறுநாள் காலை பூசாரியும் அவரைச் சார்ந்த உறவுக் குடும்பங்கள் அத்தனை பேரும் தலைப்பிரசவ மகளோடு இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். விடிந்ததும் விஷயமறிந்த ஊர் மக்கள், வேறு வழியின்றி தாங்களும் ஊரைக் காலி செய்தனர். ஏரிக்கரை உடைந்து வெள்ளமாக ஓடியது. எப்படியோ உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. மூன்று ஆண்டுகள் கோயில் திறக்கப்படவில்லை. இதன்பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் கோயில் பூசாரி குடும்பங்களை மீண்டும் அழைத்து வருவதற்குத் தேடிப்போனார்கள். தஞ்சை மாவட்டம், வல்லம் பகுதியில் குடியேறியிருந்த அவர்களைக் கண்டு, தங்களுடன் வருமாறு அழைத்தனர். அவர்களோ, இந்த ஊரே எங்களுக்குப் பிடித்து விட்டது. இனிமேல் பூசாரிப் பணிக்கு வேறு நபர்களை நியமித்துக் கொள்ளுங்கள் என்றனர். வேறு வழியின்றி இவர்களும் திரும்பி வந்துவிட்டனர். ஆனாலும் அவ்வப்போது இந்த அம்மனை வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதன்பிறகு வெள்ளம் தாங்கியம்மன் அருள் வாக்குமூலம், என் கோபம் தணிய ஏரிக்கு நடுவிலே கோயில் கொள்கிறேன் என்று சொல்ல, அதன்படியே எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும் நிலையில் கோயில் அமைக்கப்பட்டு அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.
அதிசயத்தின் அடிப்படையில்:
இவ்வூரில் காப்பு கட்டி திருவிழா ஆரம்பிக்கும் முன்பே நள்ளிரவில் பூப்போட்டு விடும் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு
நேர்த்திக்கடன்-
வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பட்டு சார்த்தி, அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
பொதுதகவல்-
இங்குள்ள அம்மனுக்கு காவலாக இரண்டு குதிரைக்கு நடுவே புலி வாகனத்தில் அமர்ந்துள்ளார் புலிமுத்தையா.
நன்றி-http://temple.dinamalar.com/New.php?id=1904
0 comments:
Post a Comment