Wednesday, 19 March 2014

கீழ் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொதுமக்கள், மாணவர்கள் படிப்பதற்கு வசதிக்காக, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட, அம்பேத்கர் சட்ட பல்கலை முடிவெடுத்துள்ளது.

புதிய தீர்ப்புகள்:சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழகம் முழுவதும், ஏழு, அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட், தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை, சட்டக் கல்லுாரி மாணவர்கள் முதல், கீழ் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் என, அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
கோர்ட்களில், 'வீடியோ கான்பரன்சிங்' வசதி வந்துள்ள நிலையில், கல்லுாரிகளிலும், பல வசதிகளை ஏற்படுத்த, சட்ட பல்கலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர், வணங்காமுடி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் மாணவர்கள், சட்ட கல்லுாரி, சட்ட பல்கலையில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, பி.காம்., - பி.எல்., படிப்பிற்கு வரவேற்பு உள்ளது.பல்கலையில் படிக்கும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு, அவ்வபோது, சுப்ரீம் கோர்ட் மற்றும் பிற கோர்ட்களின் நீதிபதிகள், சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர்.
இதை, சட்ட கல்லுாரி மாணவர்களும் பார்க்க, வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட உள்ளது.
இணைய தள, 'டிவி'இது தவிர, இணைய தள, 'டிவி' வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலேயே, முதல் முறையாக, தமிழகத்தில், இவ்வசதி ஏற்படுத்தப்படுகிறது.திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள, தமிழ்நாடு சட்ட பள்ளியுடன் இணைந்து, தமிழகத்தில், சட்ட கல்வியின் தரம் உயர்த்தப்படும். சட்டம் படிக்கும் மாணவர்கள், யு.ஜி.சி., - நெட் - சிவில் நீதிபதி தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.பொதுமக்களுக்காக, முக்கியமான, 20 சட்டப் பிரிவுகள், ஆங்கிலத்தில் இருப்பதை, தமிழில் மொழிபெயர்த்து, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். சட்டம் படிக்கும் மாணவர்களுக்காக, 27 மிக முக்கிய சட்ட நுால்கள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

கீழ் கோர்ட் நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளின் ஆங்கில வரையறைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. முதல் கட்டமாக, 2,000ம் ஆண்டுக்கு பின் அளிக்கப்பட்ட, 30 ஆயிரம் தீர்ப்புகளில், 2,100 தீர்ப்புகளின் வரையறைகள், ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. மீதமுள்ளவை, மூன்றாண்டுகளுக்குள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சுப்ரீம் கோர்ட், டில்லியில் உள்ளது. நாட்டின் உயரிய நீதிமன்றமான, சுப்ரீம் கோர்ட்டின், தலைமை நீதிபதியாக, தமிழகத்தை சேர்ந்த, பி.சதாசிவம் உள்ளார். சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ் உள்ள அனைத்து கோர்ட்டுகளும், கீழ் கோர்ட்டுகள் என, அழைக்கப்படுகின்றன.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment