Wednesday, 19 March 2014

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அந்த அமைப்பின் சார்பில் மகாராஷ்டிர நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிவாண்டி பகுதியில் உள்ள சோனாலியில் இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மகாராஷ்டிர மாநிலம், பிவாண்டி பகுதி செயலாளர் ராஜேஷ் குண்டே, அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது குற்றவியல் வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது உள்நோக்கத்துடன் பரப்பப்படும் கருத்தாகும்.
அதுமட்டுமின்றி நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. ராகுல் இந்தக் கருத்தினை தேர்தல் ஆதாயத்துக்காக வெளியிட்டுள்ளார். எனவே, ராகுல் காந்தி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment