Wednesday, 19 March 2014

தமிழகத்தில் உள்ள, நீர் நிலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, அந்த எண்களை, இணையத்தில் வெளியிட, தமிழக பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், விரைவில் முடிவடைய உள்ளன; அதற்கு பிறகு, நீர் நிலைகள் குறித்த, அனைத்து தகவல்களையும், எளிதில் பெற முடியும்.
தமிழக பொதுப்பணித் துறையின், நீர் வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில், 14 ஆயிரம் குளங்கள், 34 ஆறுகள், 17 பெரிய வடி நிலங்கள், 127 உப வடிநிலங்கள் உள்ளன. தமிழகத்தின், ஆண்டு சராசரி மழையளவு, 91.2 செ.மீ., மாநிலத்தின், மொத்த மேற்பரப்பு நீர் வள ஆதாரம், 853 டி.எம்.சி., என, கணக்கிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகள் மற்றும் மேற்பரப்பில் உள்ள நீரின் அளவை கண்காணிக்க, நீர் வள ஆதாரத் துறையினர் முடிவு செய்தனர். புவிசார் தகவல் அமைப்பின் மூலம், அனைத்து, பாரம்பரிய நீர் நிலைகளுக்கும், தனித்தன்மை கொண்ட, விசேஷ, குறியீட்டு எண் அளித்துள்ளனர்.
இதன்படி, குறிப்பிட்ட நீர் நிலையை பற்றிய தகவலை அறிய வேண்டுமானால், அந்த நீர்நிலையின், குறியீட்டு எண்களை, அதற்கான இணையத்தில், 'டைப்' செய்தால், நீர் நிலை குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

நீர் நிலையின் பரபரப்பளவு, கொள்ளளவு, நீர் மட்டம், சீரமைப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும், இந்த முறையில், எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டே, இதற்கான பணிகள் முடிந்தன. இத்துடன், நீர் நிலை குறியீட்டு எண் தகவலை, குறுந்தகட்டில் பதிவு செய்யவும், இணையதளத்தில் வெளியிடவும், பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது, லோக்சபா தேர்தலுக்கான, தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் இருப்பதால், தேர்தலுக்கு பிறகு, குறுந்தகடு வெளியிடப்படும் என, தெரிகிறது. 'தவுசண்ட் மில்லியன் கியூபிக் பீட்' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே, டி.எம்.சி., இதை, எளிதாக, 100 கோடி கன அடி என, கொள்ளலாம்.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment