Saturday, 12 April 2014

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் மூலம் வாக்களிக்கலாம் என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன் வாக்குச் சாவடியில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்த கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட "ஸ்மார்ட் கார்டு', தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் மற்றும் தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் உறுதிப்படுத்தும் போது, வாக்களர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருள்படுத்த தேவையில்லை.
மற்றொரு சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வாக்காளர் அளித்தால், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இருந்தால் அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம். புகைப்படம் பொருந்தாமல் வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த இயலாதபோது மேற்கண்ட மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்கலாம் என்றார் அவர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment