Friday, 11 April 2014

ஆசீர்வாதம் ஆச்சாரி
2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதிய ஜனதா கட்சியில் வியாழக்கிழமை சேர்ந்தார். இவர் ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர்.
அலைக்கற்றை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்கு தொடர்ந்தவரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, பொதுச் செயலர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் ஆசீர்வாதம் அக்கட்சியில் இணைந்தார்.
இதையொட்டி, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு முறைப்படி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலையொட்டி சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாஜக தேர்தல் உத்திகள் குழுவில் ஆசீர்வாதம் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கட்சியில் சேர்ந்தது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் ஆசீர்வாதம் கூறியதாவது:
"2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது மட்டுமின்றி, சிபிஐயிடமும் நீதிமன்றத்திலும் அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அளித்துள்ளேன். தேசிய அளவில் நல்லாட்சியை வழங்கும் கொள்கையுடன் செயல்படும் பாஜகவில் சேர்ந்து ஊழலுக்கு எதிரான எனது பணியைத் தொடர விரும்புகிறேன்' என்றார் ஆசீர்வாதம் ஆச்சாரி.

ஆசீர்வாதம் யார்?:
 தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி, அடிப்படையில் ரயில்வே துறையில் செக்ஷன் அதிகாரியாக இருந்தவர். மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது, அவரது கூடுதல் தனிச் செயலராக பணியாற்றினார். ராசாவுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியவராகக் கருதப்பட்டார். 2007-ஆம் ஆண்டு அலைக்கற்றை விவகாரத்தில் ராசாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிக் கொண்டே அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஆதாரங்களை சிபிஐக்கு அளித்தார். இதனால், அவரை அவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சிபிஐ சேர்த்துள்ளது.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment