Wednesday, 9 April 2014

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்ற பாடலுக்கு பொருத்தமாய், நடந்து முடிந்திருக்கிறது, நீலகிரி தொகுதியில் பா.ஜ., வேட்புமனு விவகாரம். இதன் மூலம், '2ஜி' ஊழலை பற்றி முழங்கி வந்த பா.ஜ., ராஜாவுக்கு எதிராக பேட்டியிடும் வாய்ப்பை இழந்து உள்ளது. பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தி, வேட்புமனு உடனான 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை, கலெக்டரிடம் தாமதமாக கொடுத்ததால், நேற்று முன்தினம் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கூட்டணி கட்சிகளோடு குடுமிபிடி சண்டைபோட்டு பெற்ற ஒரு தொகுதியை, வாக்கெடுப்பிற்கு முன்பே பா.ஜ., எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து உள்ளதை பற்றி, பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.
1 கடந்த 1994ல் துவங்கப்பட்ட ம.தி.மு.க., 1996 சட்டசபை தேர்தலை சந்தித்த போது, 180 இடங்களில் போட்டியிட, அந்த கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒரு மனு கூட தள்ளுபடியாகவில்லை. அதேபோல், கடந்த 2005ல் துவங்கப்பட்ட தே.மு.தி.க., 2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில், ஒரு வேட்பாளரின் மனு கூட தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால், கடந்த 1980 முதல், நாடு முழுவதும் பல தேர்தல்களை சந்தித்து வந்துள்ள பா.ஜ.,வுக்கு வேட்பு மனு தாக்கலை கூட சரியாக நிர்வாகம் செய்ய தெரியாதா? இதற்கு கட்சியின் மாநில நிர்வாகம் தான் பொறுப்பா?
2 பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தியும் தேர்தலுக்கு புதியவர் அல்ல. 2009 லோக்சபா தேர்தலிலும், இவரே வேட்பாளர். தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோற்றவர். அதற்கு முன்பாக, குன்னூர் நகராட்சித் தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார். தேர்தல் நடைமுறைகளையும், விதிமுறைகளையும் நன்கு அறிந்த குருமூர்த்தி, 'கார் பழுதானதால் தகுந்த நேரத்தில் படிவங்களை கொடுக்க முடியவில்லை' என்று கூறுவதை கட்சி தலைமை ஏற்கிறதா?
3 கட்சி தலைமை ஏற்கிறதா இல்லையா என்பது குறித்து, இதுவரை எந்த தகவலும் இல்லை. கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுவரை வாய் திறக்காதது ஏன்? மாறாக இதுகுறித்து, கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் ஏன் பேட்டி அளிக்க வேண்டும்?
4 இதுகுறித்து, இல.கணேசன் கூறுகையில், 'இச்சம்பவம், துரதிர்ஷ்டவசமானது. நீலகிரி பா.ஜ., வேட்பாளர் தவறு செய்து விட்டார். ஆனால், மாற்று கட்சிக்காக அவர், இவ்வாறு செய்துவிட்டார் என, கூறுவதை ஏற்கமுடியாது. அவர், ஒருபோதும் கட்சிக்கு துரோகம் செய்யமாட்டார்' என்று கூறியுள்ளார். தவறு செய்வதற்கு இது பயிற்சி வகுப்பா? மாற்று கட்சிக்காக அவர் இவ்வாறு செய்தார் என, யார் கூறினர்? நேற்று வரை, இதுகுறித்து, எந்த அரசியல் தலைவரும், ஊடகமும் அவ்வாறு கூறவில்லையே. அப்படியானால், இவராக கிளப்பிவிடுகிறாரா? மேலதிகமாக, கட்சிக்கு அவர் துரோகம் செய்யமாட்டார் என, கூறுவதில் என்ன உட்பொருள் உள்ளது?
5 வேட்பாளர் தரப்பில், அதிகாரிகளிடத்தில் அளிக்கப்பட்ட அதே விளக்கம் தான், கட்சி தலைமையிடமும் அளிக்கப்பட்டுள்ளது.'கட்சியின் அங்கீகார சான்றிதழாக கருதப்படும், 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை எடுத்து வரும் வழியில், கார் பழுதாகி நின்று விட்டது. அதனால் காலதாமதம் ஏற்பட்டு, மனு தாக்கலுக்கான கடைசி நாளான, 5ம் தேதி, மாலை, 3:30 மணிக்கு, நீலகிரி கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்துள்ளனர். அந்த நேரத்தில், கலெக்டர் 'மீட்டிங்'கில் இருந்ததால், அவரை சந்தித்துக் கொடுக்க முடியவில்லை. மாலை, 6:00 மணிக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது' என, கூலாக, ஒரு விளக்கம் சொல்லப்பட்டு உள்ளது. இந்த கதையை, அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மட்டுமல்ல; கேட்கிற யாருமே ஏற்க மட்டார்கள் என்பது தான், உண்மை. வேட்பாளர் குருமூர்த்தி, 3ம் தேதியே மனு தாக்கல் செய்து விட்டார். அப்போதே, அவரிடத்தில் இந்த படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாக, கோவை கோட்ட பா.ஜ., பொறுப்பாளரான, செல்வக்குமார் சொல்கிறார். மாநில தலைவரால் கையொப்பமிடப்பட்ட இந்த படிவங்கள், மாநில அமைப்பு பொதுச் செயலர் மோகன்ராஜுலு மூலமாக, பா.ஜ., வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3ம் தேதி இரவே, இந்த படிவங்கள், குருமூர்த்தி கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்த நாளான, 4ம் தேதி இந்த படிவங்களை அவர், தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தால், இந்த சிக்கல் வந்திருக்காது. ஆனால், அவரோ, நீலகிரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறுகிறார். அவரிடம் இருந்து, அந்த படிவங்களை 5ம் தேதி பெற்றுக் கொண்டு, கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றபோது தான், கார் பழுதானதாக காரணம் சொல்லப்படுகிறது. இவ்வாறு படிவங்கள் ஏன் கைமாறின? 3ம் தேதி கிடைத்த படிவங்களை 5ம் தேதி வரை, குருமூர்த்தி ஏன் வைத்திருந்தார்?
6 மாநில தலைமையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவங்கள் போய்சேர்ந்துள்ளதா? அவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு? அதில் தவறிழைத்தவர் யார்?
7 தொகுதிக்கு ஒரு வழக்கறிஞரை, சட்ட ஆலோசகராக நியமித்திருப்பதாக மாநில தலைவர் சொல்கிறாரே? அந்த ஆலோசகர் எங்கே போனார்?
8 தெரிந்தே ஒருவர், படிவங்களை ஏன் அறையில் பூட்டி வைத்திருந்தார்? எதற்காக அவர் அப்படி நடந்து கொண்டார்? யார் சொல்லி அதை செய்தார்?
9 கோவை கோட்ட பா.ஜ., பொறுப்பாளர் செல்வகுமாருக்கும், குருமூர்த்திக்கும் 'ஆகாது' என, கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேறு ஒரு நபரை வேட்பாளராக்க கட்சியில் ஆதரவு இருந்ததாகவும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு, கண்ணன் என்பவர் 'பேக்ஸ்' அனுப்பி உள்ளார். எனில், கட்சியில் உள்குத்து வேலையால், குருமூர்த்தி வீழ்த்தப்பட்டாரா?
10 லோக்சபா தேர்தலுக்கு கூட முக்கியத் துவம் கொடுக்காமல் பா.ஜ., கட்சி, உள்குத்தில் மும்முரமாக உள்ளதா? இப்படி உள்ள கட்சி நிர்வாகத்தை, கூட்டணி கட்சிகளால் எப்படி நம்ப முடியும்?

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment