Thursday, 24 July 2014


பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை திரும்ப வழங்கிட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டையில்லாமல் பட்டை, நாமம் போட்டு ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள கண்ணாப்பாடி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்(40). விவசாயி. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் டிராக்டர் வாங்குவதற்காக பெரம்பலூர் ஸ்டேட் வங்கியில் விவசாய தவணை கடனாக ரூ.6 லட்சம் பெற்றுள்ளார்.
அதில் ரூ.1.5 லட்சத்தை திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செந்திலின் டிராக்டரை பறிமுதல் செய்து ரூ..1.70 லட்சத்துக்கு ஏலம் விட் டனர். எவ்வித அறிவிப்பும் இன்றி டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், டிராக்டரை திரும்ப வழங் கிட வலியுறுத்தியும் செந்தில் கடந்த 14ம் தேதி கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ராமசுப்பிரமணியனிடம் மேல் முறையீடு செய்துள்ளார். செந்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திட ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். இது வரை பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாரதீய கிசான் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அய்யாகண்ணு தலைமை யில் சட்டை அணியாமல், பட்டை நாமம் போட்டு பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி, தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி அமைந்துள்ள வெங்கடேசபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது. அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நீண்ட நேரம் தொடர்ந்ததால் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொ டர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஒரு பைசா கூட செலுத்தவில்லை!


ஸ்டேட் வங்கி மேலாளர் கூறுகையில், கண்ணாப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில் கடந்த 2009ல் டிராக்டர் வாங்குவதற்காக சேவை கட்டணம் ரூ.7500யை செலுத்தி விட்டு, பெரம்பலூர் ஸ்டேட் வங்கியில் ரூ.6 லட்சம் விவசாய கடன் பெற்றார். கடனை திரும்ப செலுத்தாததால் கடனாக பெற்ற அசல் ரூ.6 லட்சம், வட்டியும் சேர்த்து சுமார் ரூ.13 லட்சத்து 29 ஆயிரம் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.தவணை தொகை செலுத்த கோரி என செந்திலுக்கு கடந்த 18.10.12 மற்றும் 31.7.13 ஆகிய தேதிகளில் நோட்டீசும், 10.2.14ல் டிராக்டரை பறிமுதல் செய்வதற்கான நோட்டீசும் அனுப்பியும் இதுவரை ஒரு பைசா கூட செலுத்தவில்லை. இதனால் சட்ட ரீதியாக கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி டிராக்டரை பறிமுதல் செய்தோம். மீதமுள்ள கடனை செலுத்திட கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை செந்தில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார்.


-தினகரன்.

0 comments:

Post a Comment