Wednesday, 23 July 2014


திருத்தணிக்கு காவடி எடுத்த பக்தர்கள் மீது காவல் ஆய்வாளர் காட்டுமிராண்டித் தாக்குதல்: காது ஜவ்வு கிழிந்த நிலையில் தினமணி நிருபர் மருத்துவமனையில்!
திருத்தணிக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் மீது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தினமணி திருவண்ணாமலை நிருபர், காது ஜவ்வு கிழிந்து, இடது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப் பட்டது.
இதனிடையே இந்தப் புகார் குறித்து விசாரித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி., சத்தியமூர்த்தி,
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளரின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சரவணப் பெருமாள், தனது புகார் மனுவில் தெரிவித்துள்ள விவரம்:
நான் திருவண்ணாமலையில் தினமணி நாளிதழ் மாவட்ட தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன். 21.7.2014ம் தேதி காலை 9.45க்கு திருத்தணி முருகன் கோயிலில் காவடி சாத்துபடி செய்வதற்காக எங்கள் ஊர் பொதுமக்களுடன் வந்தேன். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், உற்ஸவர் முருகர் வைக்கப்பட்டுள்ள கோயில் முதல் தளத்தின் படியேறும் பகுதிக்கு அருகே காவடியை கீழே வைத்து சாத்துபடி செய்ய முடியவில்லை. பக்தர்கள் தள்ளிக்கொண்டே வந்துவிட்டனர்.
எனவே, உற்ஸவர் முருகர் சந்நிதிக்கு எதிரில் இருந்து வரிசையாக 3வது உண்டியல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான் கொண்டு வந்த மயில் காவடியை கீழே வைத்தேன். உடனே காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் என்பவர் வந்து காவடியை எடுடா நாயே என்றார்.
நான், சார் ஒரு நிமிடம் சார். சாமி கும்பிட்டு விட்டு எடுத்துக் கொள்கிறேன் என்றேன். இதற்கு, என்னடா சொன்னா.. எடுக்க மாட்டியா என்று கூறிக் கொண்டே, இந்த ஆண்டு புதிதாக செய்து எடுத்து வந்த என்னுடைய மயில் காவடியை லத்தியால் கீழே தள்ளி உடைத்தார். மயில் இறகுகள் உடைவதைப் பார்த்து, சார். சார்.. வேண்டாம் சார். காவடியை எடுத்துக் கொள்கிறேன் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்ணிமைக்கும் நேரத்தில் லத்தியால் எனது வயிற்றில் குத்தினார்.
வலி தாங்காமல் அலறிய நான், லத்தியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, சார், நான் தினமணி நிருபர் என்றேன்.
இதற்கு, நிருபர் என்றால் பெரிய மயிரா, போடா (....) என்று திட்டி கொண்டே, ஆய்வாளர் அய்யானரப்பன் அவரது வலது கையால் குற்றவாளிகளைத் தாக்குவது போல் என்னுடைய இடது கன்னத்தில் ஓங்கி அடித்தார்.
தொடர்ந்து, எனது இடது நெஞ்சிலும் ஓங்கிக் குத்தினார். நான் நிலை குலைந்து கண் கலங்கியதைப் பார்த்துத் தடுக்க வந்த என் அம்மாவை, போடி நாயே.. என்று சொல்லி அடித்தார். மேலும், உன்னை ஜெயிலில் போட்டு விடுவேன்.. போடா.. (....) பையா என்று சொல்லி என் தம்பியை அடித்தார்.
என் அப்பாவையும், தடுக்க வந்த ஊர்க்காரர்களையும் தள்ளி விட்டதுடன், லத்தியால் குத்தினார். மேலும், உங்களை எல்லாம் கூண்டோடு ஜெயிலில் போட்டு விடுவேன். மரியாதையாக இங்கிருந்து போய் விடுங்கள் என்று எங்கள் ஊர்க்காரர்களை கடுமையாக மிரட்டினார்.
உங்களைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று நான் சொன்னதற்கு, நீ, எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐஜி என எவனிடம் வேண்டுமானாலும் போய் சொல். என் மயிரை ஒன்றும் புடுங்க முடியாது. என்னை போட்டோ எடுத்து எந்த பேப்பரில் வேண்டுமானாலும் போடு என்று வலிய வந்து என்னிடம் மல்லுக்கு நின்றார்.
ஆய்வாளர் அய்யனாரப்பன் அடித்ததில் என்னுடைய காது கேட்கவில்லை. கொய்ன் என்று சத்தம் வருகிறது. நெஞ்சு வலி அதிகமாக உள்ளது. எனவே ஆய்வாளர் அய்யனாரப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பாக, கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐயாவிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் திரண்டு சென்றோம். அவர் அங்கிருந்த காவலர்களிடம் போய்ச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
என்னிடமும், எங்கள் ஊர் பொதுமக்களிடமும் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் சிகாமணி என்பவர், உங்கள் பிரச்னை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. எனவே, எழுத்துபூர்வமாக புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கையை நான் எடுக்கிறேன் என்றார்.
இதன்பிறகு, மேற்கண்டவாறு நான் புகார் கொடுத்தேன். பின்னர் காவல் ஆய்வாளர்கள் சிலரும், திருத்தணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சு.மணியழகன் ஐயா அவர்களும் என்னிடம் பேசினர். என்னை அடித்த காவல் ஆய்வாளர் அய்யனாரப்பனை அழைத்து வந்தனர். அப்போது, நடந்த சம்பவத்துக்கு ஆய்வாளர் அய்யனாரப்பன் வருத்தம் தெரிவிக்கவே இல்லை.
காவடி எடுப்பதற்காகவே கடந்த 10 நாட்களாக முருகர் பக்திப் பாடல்களைப் பாடிப் பழகி, அசைவ உணவுகளைத் தவிர்த்து, பக்தி சிரத்தையுடன் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் (ஜூலை 20,21) உண்ணாநோன்பு விரதம் இருந்து, இந்த வருடம் ரூ.3 ஆயிரம் செலவில் புதிதாக செய்த மயில் காவடியை அந்த முருகப் பெருமானையே தோளில் சுமந்து செல்வதாகக் கருதி பல கிலோ மீட்டர் தூரம் காவடியை தோளில் சுமந்து வந்த என்னையும், எங்கள் ஊர் பொதுமக்களையும் முருகன் சந்நிதியில் பேசக்கூடாத வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்திய காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்....
- என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கும் சரவணப் பெருமாள், “என்னை அடித்த காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன், யாரிடமும் சொல்.. என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று என்னை மிரட்டியபடியே தகாத வார்த்தைகளால் திட்டியபடி முன்னே வந்த போது, உடன் இருந்தவர் எடுத்த படம் இது” என்று அவரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

நன்றி- https://www.facebook.com/tamilseythikal?fref=photo

1 comment:

  1. ஆய்வாளர் அய்யனார் ஒரு இந்து ஆகையால் பெரிய பிரச்சினை இல்லை இது வோ ஒரு இஸ்லாமிய சமுதாய ஆய்வாளர் என்றால் அய் அய் அய் அய்யா. ...............

    ReplyDelete