Wednesday, 8 January 2014


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் சென்று வரும் வகையில் தமிழகம் முழுவதும் 6,514 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை பிறப்பித்த உத்தரவின் விவரம்:
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்திலிருந்து 10.1.2014 (வெள்ளிக்கிழமை) அன்று 600 சிறப்பு பஸ்களும், 11.1.2014 (சனிக்கிழமை) அன்று 1,325 சிறப்பு பஸ்களும், 12.1.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1,175 பஸ்களும், 13.1.2014 (திங்கள்கிழமை) அன்று 339 சிறப்பு பஸ்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. 14.1.2014 (பொங்கல்) அன்று தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும்.
இதுபோல் சென்னையைத் தவிர்த்த மாநிலத்தின் பிற பகுதிகளில் 10.1.2014 அன்று 345 சிறப்பு பஸ்களும், 11.1.2014 அன்று 750 சிறப்புப் பஸ்களும், 12.1.2014 அன்று 760 சிறப்புப் பஸ்களும், 13.1.2014 அன்று 1220 சிறப்புப் பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
மொத்தத்தில் 10.1.2014 முதல் 13.1.2014 வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு 6,514 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படும்.
மேலும், பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இதே அளவிலான சிறப்பு பஸ்கள் 16.1.2014 முதல் 19.1.2014 வரை இயக்கப்பட உள்ளன.
சிறப்பு முன்பதிவு மையங்கள்:  பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
மாநகரிலும் கூடுதல் பஸ்கள்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகருக்குள்ளும் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை தீவுத் திடலில் அமைந்துள்ள சுற்றுலா பொருள்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், விஜிபி, முட்டுக்காடு, கோவளம், எம்ஜிஎம், மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
புகார் எண்: பொங்கல் பண்டிகை நெரிசலை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் குறித்து கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்தில் அமைந்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தை 044 - 24794709 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment