Monday, 6 January 2014

பெரம்பலூரில் ஜன. 31 முதல் பிப். 9 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கலை,  இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் நகராட்சி மையானத்தில் ஜன. 31 முதல் பிப். 9 வரை புத்தக திருவிழா - 2014 நடைபெற உள்ளது. அதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜன. 6 காலை பேச்சுப்போட்டி, மாலை கவிதைப் போட்டி, 7-ம் தேதி காலை வினாடி- வினா போட்டி,  மாலை பாட்டுப்போட்டி, 8-ம் தேதி காலை ஓவியப் போட்டி, மாலை கதை சொல்லும் போட்டி, 9-ம் தேதி காலை தமிழ்சொல் கூறுதல் போட்டி, மாலை தமிழில் உரையாடுதல் போட்டி, 10-ம் தேதி காலை பழமொழிப் போட்டி, மாலை தனித்திறன் போட்டிகள் நடைபெறும்.
காலையில் 10.30-க்கும், மாலையில் 2.30-க்கும் வட்டார அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூர் வட்டத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இறுதிப்போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 1,000, ரூ. 500, ரூ. 300க்கான பரிசுக் கூப்பன்கள், சான்றிதழ்கள் புத்தகக் கண்காட்சிமேடையில் சிறப்பு விருந்தினர்களால் அளிக்கப்படும். பரிசுக் கூப்பன்களை அரங்கத்தில் உள்ள புத்தகக் கடைகளில் அளித்து, தேவையான புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment