Tuesday, 7 January 2014



செட்டிக்குளத்தில், ஜன. 12-ல் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூரில் பொங்கல் சுற்றுலா விழா நடத்துவது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற முன்னேற்பாட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது:
ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு அருகில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் கிராமிய முறையில் பொதுமக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, நாதஸ்வரம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் 700-க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், செய்தி- மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உறியடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், வாலிபால் மற்றும் 14 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான சாக்கு ஓட்டம் மற்றும் தேக்கரண்டியில் எலுமிச்சை பழத்துடன் ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
இதில் போட்டியில் வெற்றி பெறுபவரைத் தேர்வு செய்ய நடுவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஜன. 10-க்குள் தங்களது விண்ணப்பங்களை செட்டிக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.   ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெண்ணிலா ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பி. சைமன்ராஜ், செட்டிக்குளம் ஊராட்சித் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.     

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment