சென்னை;தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்ட, உடனடி, '104' மருத்துவ சேவைத் திட்டத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில், 27 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. மருத்துவமகளில், டாக்டர், நர்ஸ் இல்லாவிட்டாலும், '104' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும், உடனடி, '104' மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதன் தலைமையகம், சென்னை கஸ்துாரிபாய் மருத்துவமனையில் உள்ளது. '104' என்ற எண்ணுக்கு, 10 இணைப்புகள் உள்ளன.இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், முதலுதவி, பல்வேறு மருத்துவ ஆலோசனைகள், மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்படும். அருகே உள்ள மருத்துவமனை விவரம் தரப்படும். இத்திட்டம், செயல்பாட்டுக்கு வந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:
எதிர்பார்த்ததை விட, '104' திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில், ஆலோசனை கேட்டு, 27,276 அழைப்புகள் வந்துள்ளன. இது எப்படி செயல்படுகிறது என, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பலரும் போன் செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர் இல்லை; நர்ஸ் இல்லை என்றாலும், இந்த எண்ணில் தெரிவிக்கலாம். இதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
பணிக்கு வராத டாக்டர்கள், பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், வெளிப்படைத்தன்மை உருவாகும். சில மாதங்களில், தினமும், 10 ஆயிரம் அழைப்பு வரை வர வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
0 comments:
Post a Comment