Sunday, 16 February 2014


பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டமாக அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் நகரில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் கடந்த 1994-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பின்னர், 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி. மணியால் புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 43 வணிக நிறுவனங்களும் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஒப்பந்தம் விடப்பட்டு, அதன்மூலம் நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது
இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பேருந்து நிலையம், இப்போதும் அதே நிலையில் காணப்படுகிறது.
இங்கு, தனியார் டயர் தொழிற்சாலை, அனைத்து வகையான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், பெரம்பலூர் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிலையம் உள்ளதால் திருச்சி - சென்னை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், சேலம் - அரியலூர் - கும்பகோணம்- தஞ்சாவூர் வழித்தடங்களில் செல்லும் அரசுப் பேருந்துகளும் புறநகர்ப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன. இதனால், புறநகர்ப் பேருந்து நிலையத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதால், ஓட்டுநர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும், ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதாலும், பேருந்து ஓட்டுநர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்களது வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், அவரவர் விருப்பம்போல பேருந்துகளை நிறுத்திச் செல்வதால் பயணிகளும், மற்ற வாகன ஓட்டுநர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, திருச்சி - சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, இடப்பற்றாக்குறையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பேருந்து நிலையம் பின்புறம் காலியாக உள்ள பகுதியை, திருச்சி- சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒதுக்கி, வாகன நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment