பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 104 மருத்துவ சேவைத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலர்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 24 மணிநேர 104 தொலைபேசி மருத்துவ உதவி மைய சேவைத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலர்களுக்கு செல்போன்களை வழங்கிய ஆட்சியர் மேலும் பேசியது:
அனைத்து தரப்பு மக்களும் 24 மணிநேரமும் இலவச மருத்துவ உதவி மற்றும் சேவையை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 104 தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் கடந்த 30.12.2013 முதல் செயல்படுத்தப்படுகிறது. 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால், சென்னையில் உள்ள தலைமைக் கட்டுபாட்டு அறையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மூலமாக சுகாதாரம் சார்ந்த தகவல் அளிக்கப்படுகிறது.
24 மணிநேர அவசர கால சேவைத் திட்டத்தில், குறிப்பாக ஆபத்தான நிலையிலுள்ள நபர்களுக்கும், பேறு கால சிரமங்களை எதிர்க்கொள்ளும் தாய்மார்களுக்கும் உரிய சுகாதார வசதிகள் குறித்து தகவல் அளிக்கப்படும். மேலும், 108 அவசர கால ஊர்தியுடன் இணைப்பு ஏற்படுத்தி தரப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்களில் சுகாதார சேவைகள் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய 24 மணி நேரமும் உடனடி உதவி செய்யபடுகிறது. சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக குடிமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டு, தரமான சேவை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து எச்.ஐ.வி, எயிட்ஸ், குடும்ப நலம், தற்கொலை எண்ணம் உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளுக்கும் உரிய ஆலோசனைகள் அளிக்கப்படும்.
அழைப்பாளரின் சேவைக்கேற்ப பதிவு அலுவலரால் அழைப்புகள் முறையே மருத்துவ ஆலோசனை அலுவலர், மனநல ஆலோசகர், சேவை மேம்பாட்டு அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு இணைப்பு கொடுக்கப்படும். மருத்துவ ஆலோசனை அலுவலர் பெறப்பட்ட தகவல்கள், நோயின் அறிகுறிகள் அடிப்படையில் உரிய ஆலோசனை வழங்குவார். மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ அதிகாரிக்கு அழைப்பு மாற்றப்படும். பொதுமக்களிடமிருந்து வரும் சுகாதாரத்துறை தொடர்பான அனைத்து புகார்களையும், கருத்துகளையும் பதிவு செய்து, உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவ மனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியர்களும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மருத்துவர்களும், 24 மணி நேரமும் செவிலியர்களும் பணியில் உள்ளனர் தொலைதூர கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் அளிக்கப்படும்.
எனவே, இந்தச் சேவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளை வட்டார மருத்துவ அலுவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சிவக்குமார், 108 சேவைக்கான மாவட்ட மேலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர் v.kalathur seithi .
-தினமணி.
0 comments:
Post a Comment