Sunday, 31 August 2014

பெருமை மிக்க கலாச்சாரப் பாரம்பரியம்
hrce temple Security
நமது ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவை நமது பழம்பெருமை வாய்ந்த வேத நாகரீகத்தையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும், கலச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் சின்னங்களாக நெடுதுயர்ந்து நிற்பவை. அவை கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்து வருபவை. பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு மற்றும் வளர்க்கப்பட்டு வரும் வேத ஆகமங்கள், இலக்கியம், கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, இயல், இசை, நாடகம், கால்நடைப் பாதுகாப்பு, என அனைத்துமே ஆலயங்களைச் சார்ந்த கலாச்சாரப் பாரம்பரியம்தான்.
ஆலயங்களில் குடியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது போலவே, அவற்றைச் சார்ந்துள்ள விருக்ஷங்கள், தீர்த்தங்கள் ஆகியவற்றையும் வழிபடுகின்றோம். அத்தெய்வங்களின் வாகனங்களையும் வழிபடுகின்றோம். இருப்பினும், ஆலயத்துள் இருந்துகொண்டு நமக்கு அருள்பாலிக்கும் தெய்வத்திற்குச் சமானமாக நாம் வழிபாட்டு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பிராணி உண்டென்றால் அது பசுத்தாய் மட்டுமே. வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையை நமது சனாதன தர்மம் பசுவுக்கு மட்டும் அளிக்கின்றது.
அன்றைய முடியாட்சி காலத்தில், அரசர்கள் ஒவ்வொரு ஆலயத்தையும் இணைத்து நந்தவனங்களும் பசுமடங்களும் அமைத்திருந்தார்கள். ஆலயவத்திற்கு வந்து இறைவனத் தரிசிப்பவர்கள், பசுமடங்களுக்கும் வந்து ஆவினங்களுக்குப் பூஜைகள் செய்வதும், உணவுகள் வழங்குவதும் வழக்காமக இருந்து வந்தது. ஆலயத்தினுள் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் யாகங்கள் செய்வதற்கான பால், தயிர், வெண்ணை, கோமியம், சாணம், போன்ற பொருட்களைப் பெறுவதற்கும், பஞ்சகவ்யம், விபூதி போன்ற பொருட்களைத் தயாரிப்பதற்கும் பசுமடங்கள் பயன்பட்டு வந்தன.
அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட சீரழிவு
அன்னியர் படையெடுப்பினால் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் அவர்கள் வசம் அடிமைப்பட்டிருந்த போதும், நமது ஆன்மீகப் பாரம்பரியம் மற்றும் பண்பாடு மாற்றம் பெறவில்லை. அவை தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. நமது ஆலயங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், நமது வழிபாட்டு முறையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆவினங்களைப் போற்றும் நமது பண்பாடும் அழியவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியிலேயே அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டு ஆலயங்கள் பல அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், சுதந்திரம் பெற்ற பிறகு திராவிட அரசுகள் ஏற்பட்ட பிறகுதான் நமது ஆலயங்கள் பெரிதும் சீரழிக்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லப்போனால், 1967க்குப் பிறகு தொடர்ந்து வரும் திராவிட ஆட்சியாளர்களின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தில் ஆலயங்கள் சீரழிந்தன; ஆலயங்களை இணைந்து இருந்த நீர்நிலைகளும், பசுமடங்களும் சரியான பராமரிப்பின்றி அழிந்தன; தொடர்ந்து அழிந்து வருகின்றன.
உயர்நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில்தான், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, கோயில்களில் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
radharajan
பிராணிகள் நலவிரும்பியும் சமூக ஆர்வலருமான திருமதி ராதா ராஜன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் (WP 28793 & 28794 of 2013) மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். ராதா ராஜன் தன்னுடைய மனுவில், “தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல கோயில்கள் உள்ளன. அங்கு பசுக்கள், கன்றுகளைப் பராமரிப்பதற்கு கோசாலைகள் (பசு மடங்கள்) உள்ளன. மத ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கோயில்களிலேயே நிர்வாகத்தினரால் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோசாலையில் சரியான பராமரிப்பில்லாமல் பசுக்கள் இறந்தது தெரிய வந்தது. கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படும் பசுக்கள் நிர்வாக முறைகேடு, போதிய பராமரிப்பின்மை காரணமாக இது போன்று பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் கோசாலைகளின் பராமரிப்பைக் கண்காணிப்புக் குழு அமைத்து மேற்பார்வையிட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சதீஷ் பராசரன் ஆஜரானார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு வழக்குரைஞர் எஸ்.கந்தசாமி ஆஜராகி அரசாணையைத் தாக்கல் செய்தார். அதில், பசு மடங்களை ஆய்வு செய்ய கால்நடைத் துறை இணை இயக்குநர் எல்.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவருடன் சேர்த்து, விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் சுமதி, மனுதாரர் ராதா ராஜன் ஆகியோரையும் உடன் நியமிக்கப் பரிந்துரை செய்தனர்.
இந்தக் குழு தமிழகத்தில் உள்ள கோயில்களின் பசு மடங்களை ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அக்டோபர் 27-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி
hrce gow issue1
சென்ற 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் தருவாயில் புகழ் மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் பசுமடத்தில் பல பசுக்கள் திடீரென்று இறந்து போனதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அக்டோபர் மாதம் 15-ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலா பிராணிகள் காப்பகம் மற்றும் மீட்கும் மையத்திலிருந்து, மருத்துவர்கள் கோவிலின் பசுமடத்திற்குச் சென்று அங்குள்ள பசுக்களைப் பரிசோதனை செய்தனர். அந்தச் சமயத்தில் 105 பசுக்கள் இருந்தன. அவை பக்தர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டன. பெரும்பான்மையான பக்தர்கள் பசுக்களை நன்கொடையாகக் கொடுத்ததுடன் அவற்றைப் பராமரிக்க ரூபாய் 10,000 பணமும் கொடுத்திருக்கின்றனர். கோவிலில் உள்ள பசுக்களும் கன்றுகளும் சரியாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று பல புகார்கள் எழுந்ததால், சுமார் 50 பிராணிகள் நல ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பசுமடத்தின் சோதனைக்கு உத்தரவிட்டார். அவ்வுத்தரவின் படிதான் மேற்கண்ட பரிசோதனை நடந்தது. பரிசோதனையின் முடிவில் கீழ்காணும் கண்டுபிடிப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டன:
பராமரிப்பு போதவில்லை. அத்தனை பசுக்களையும் கன்றுகளையும் பராமரிக்க ஒரே ஒரு நபரும் அவருக்கு ஒரேயொரு உதவியாளருமாக இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு அளிக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 105 பசுக்கள் கன்றுகளுக்கும் சேர்த்து. ஒரு நாளைக்கு வெறும் 25 கிலோ புண்ணாக்கும், 25 கிலோ உளுந்தும், 25 கிலோ தவிடும் கொஞ்சம் வைக்கோலும் கொடுக்கப்படுகின்றன. அவ்வளவுதான். பச்சைப் புல் கொடுக்கப்படுவதில்லை. இந்த உணவானது 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமானது.
பசு மடத்தில் தேவைப்படுகின்ற அளவுக்கு இடமிருந்தாலும், மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பசுக்களைக் காப்பாற்ற பாதுகாப்பு ஏற்படுத்தப்படவில்லை.
பசும்புல் கூட இல்லாமல், வெறும் 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமான உணவை 105 பசுக்களுக்குக் கொடுத்தால், அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாகக் கொடுத்தால், அவை எப்படி உயிர் வாழும்? 105 பசுக்களுக்கு வெறும் இரண்டு பணியாளர் மட்டுமே இருந்தால் அவர்களால் எப்படி நூறு பசுக்களையும் கவனித்துப் பராமரிக்க முடியும்? கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உள்ள கோவிலின் பசுமடமே இந்த லக்ஷணத்தில் இருந்தால், மற்ற கோவில்களில் உள்ள பசுமடங்களைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இந்தப் பின்னணியில்தான் திருமதி ராதாராஜன் அவர்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கோசாலைகளின் நிலை என்ன, கால்நடைகள் அக்கோசாலைகளில் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, மாட்டுத் தீவனங்கள் எப்படி கொள்முதல் செய்யப்படுகின்றன, அவைகள் முறையாகக் கோசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு மாடுகளுக்கு உணவளிக்கப்படுகிறதா, என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை அளித்து உத்தரவிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகுதான் உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய, மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகமெங்கும் உள்ள அவலம்
இந்த அவலமான நிலை திருவண்ணாமலையில் மட்டுமல்ல. இது தமிழகமெங்கும் உள்ள பல ஆலயங்களிலும் தொடர்ந்து நிலவி வருவதுதான். பக்தர்கள் இறைவனிடம் பலவிதமான வேண்டுதல்களை சமர்ப்பித்து, ஆலயங்களுக்கு அளிக்கும் பசுக்களைப் பராமரிக்க இந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். மற்ற சில முக்கியமான கோவில்களில் நடந்த சில அராஜகங்களையும் பார்க்கலாம்.
5000 பசுக்கள் மாயமான திருச்செந்தூர் கோவில் கோசாலை
கடந்த 2012-ம் வருடம் நவம்பர் மாதம் தணிக்கைத்துறை ஆய்வு செய்யப்பட்டதில், திருச்செந்தூர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய 5000க்கும் மேற்பட்ட பசுக்கள் மாயமானது தெரிய வந்தது. பக்தர்கள் வழங்கிய பசுக்களின் நிலை குறித்து, தணிக்கை செய்யப்பட்டபோது, தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 மாடுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவை என்னவாயின என்பது குறித்து, எவ்வித ஆவணங்களும் இல்லை. சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதற்கான பதில் இல்லை. பக்தர்கள் கொடுக்கும் பசுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி உயரும்போது அவற்றைப் பராமரிக்க தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டு அவை அங்கே பராமரிக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறு செய்வதில் பல விதிமுறை மீறல்கள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் தனியார் கோசாலைகளுக்குக் கொடுக்கப்பட்ட பசுக்கள் பற்றிய முறையான ஆவணங்கள் இல்லை. எனவே, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பசுக்கள், விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. (ஆதாரம்: - தினமலர் – 30 நவம்பர் 2012)
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான மேற்கண்ட கோசாலை, கீழ நாழுமூலைகிணற்றில் உள்ளது. இங்கே 22-10-2010 அன்று புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்துள்ளது. இங்கு பராமரிக்கபட்டு வரும் பசுக்கள் நோய் கண்டால் அதை கவனித்துக்கொள்ள கால்நடை மருத்துவர்களும் இருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த இடங்களை எல்லாம் அடிக்கடி சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் பொலிரோ ஜீப் ஒன்றையும் வாங்கியுள்ளனர். ஆனால் தற்போது அங்கு ஓரு பசுமாடு கூட கிடையாது கோசாலை இருந்த இடம் சீமைக்கருவேலி மரங்கள் உள்ள சோலையாகவும் சமூக விரோதிகள் புழங்கும் இடமாகவும் மாறியுள்ளது. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டும் அந்த பொலிரோ ஜீப்பில் ஜாலியாக சுற்றி வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காகச் செலவான திருக்கோவில் பணம் ஓரு கோடி ரூபாய்கு மேல்! (ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தகவல்)

நூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமான ஸ்ரீரங்கம் கோவில் கோசாலை
மற்றொரு புகழ் மிக்க கோவிலான ஸ்ரீரங்கம் கோவிலிலும் நூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமாகியுள்ளன. பக்தர்களால் கொடுக்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, புதியதாக வந்த பசுக்களுக்கு உணவளிக்காமல் அவற்றை உடல்நலன் குன்றிப்போய் இறக்கச்செய்து, அவை நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டி, அவற்றை சுடுகாட்டிற்கு அனுப்பி, அங்கிருந்து வெட்டப்பட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் உள்ள பல இறைச்சிக்கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு நாளைக்கு இவ்வாறு இரண்டு அல்லது மூன்று பசுக்கள் அனுப்பப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. சில பசுக்கள் நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், பல பசுக்கள் அந்தக் கணக்கில் கூட இல்லை. (குமுதம் ரிப்போர்ட்டர் – 27-12-2007)
இந்தக் கோவிலிலும் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரே ஆண்டில் 105 பசுக்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
பழனி ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலை மர்மங்கள்
hrce palani
பழனியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீமனாம்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது பழனி கோவிலிற்குச் சொந்தமான கோசாலை. இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலையாகும். அதாவது, பல்வேறு கோவில்களில் இடமில்லாத காரணத்தால் எண்ணிக்கை அதிகமாக உள்ள பசுக்களை இங்கே கொண்டுவந்து பராமரிப்பு செய்யப்படுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கோசாலை. கோசாலை இருக்கும் கோவிலுக்குச் சொந்தமான நிலம் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த மார்ச்சு மாதம் அங்கே ஒன்பதே ஒன்பது (9) மாடுகள் தான் இருந்தன. அந்த 9 பாடுகளில் 3 காளைகள் 6 பசுக்கன்றுகள். 3 காளை மாடுகளில் ஒரு காளை (காங்கேயம் காளை) மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்தக் கோசாலையைப் பராமரிக்க மட்டும் 20 பேர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் கடந்த 4-ம் தேதி சென்ற போது ஒரே ஒருவர் மட்டும்தான் இருந்தார். கால்நடை அலுவலர் (Cattle Officer) திரு.திருப்பதி அவர்கள் வெளியே சென்றிருந்தார். நமது குழுவினர் கிட்டத்தட்ட 3 மணிநேரங்களுக்கு மேல் அங்கே இருந்த போதும் அவர் வரவில்லை.

அந்த இடம் தண்ணீர் கஷ்டம் மிகுந்த வறட்சியான இடமாக இருக்கிறது. கோசாலையில் நமது குழுவினர் பார்த்தபோது இரண்டு தொட்டிகளில் மட்டும் தண்ணீர் இருந்தது. ஒரு இடத்தில் வைக்கோல் மட்டும் குவிக்கப்பட்டிருந்தது. மற்ற மாட்டு தீவனங்கள் எதுவும் காணோம். பணியில் இருந்தவரிடம் கேட்ட பொழுது, பஞ்சாமிர்தத்திற்குப் பயன்படுத்தும் பழங்களின் தோல்களும், புற்கட்டுகளும் பழனியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன என்றார். ஆனால் அந்த மாதிரி எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தானமாகப் பசுக்களை கொடுப்பது வழக்கம். அந்தப் பசுக்களைப் பெற்றுக்கொள்ளும் கோவில் நிர்வாகம் அவற்றைப் பராமரிக்க பக்தர்களிடம் ஒவ்வொரு பசுவிற்கும் ரூ.1000/- கட்டணம் வசூலிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து விட்டன என்று பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்னால் 300 பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அளித்ததாகவும் தெரிய வந்தது.
இது விதி முறைகளுக்குப் புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல், இவ்வாறு சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால் முறையான அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி தானமாக வருகின்ற பசுக்களை சுய உதவிக்குழுவினரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட பக்ஷத்தில் பக்தர்களிடம் ஏன் ரூ.1000/- பராமரிப்புக் கட்டணம் வாங்க வேண்டும்? அவ்வாறு வாங்கியுள்ள கட்டணப் பணத்திற்கு முறையான கணக்குகள் உண்டா? அந்தப் பணம் வேறு எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது? சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்த பிறகு அவர்கள் அப்பசுக்களை என்ன செய்கிறார்கள்? விற்கிறார்களா அல்லது பராமரிக்கிறார்களா? விற்கிறார்கள் என்றால் ஏன்? அவ்வாறு விற்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? அப்படி விற்பவர்களுக்கு ஏன் வழங்க வேண்டும்? இல்லை பராமரிக்கிறார்கள் என்றால் எப்படிப் பராமரிக்கின்றனர்? அவர்கள் பராமரிப்பதைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்கு என்ன விதமான வழிமுறைகள் உள்ளன? போன்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த லக்ஷணத்தில், 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கோசாலையில், 2011 வரை கோசாலைக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு கோடியே நாற்பது லக்ஷம் (ரூ. 1, 39, 27, 176/-) ரூபாய்கள்! கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உடைய கோவில்களில் பக்தர்கள் தானமாகக் கொடுக்கும் பசுக்களையும் கால்நடைகளையும் பராமரிக்க முறையாக கோசாலைகள் அமைத்து நடத்த முடியாத அறநிலையத்துறை ஒன்று இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன?
மீறப்படும் விதிமுறைகள்
அதிக அளவில் பசுக்கள் பக்தர்களால் தானம் செய்யப்படும்போது, அவற்றைப் பராமரிக்க தனியார் நடத்தும் கோசாலைகளுக்கு வழங்கப்படும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இவ்விஷயத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அறநிலையத்துறை பசுக்களை அனுப்பும் தனியார் கோசாலைகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பதிவு பெற்ற அமைப்புகளாக இருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் பெற்ற பசுக்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பசுவும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், செயல் அலுவலர் பெயரில், காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பசுக்கள் இறக்குமானால், கிடைக்கும் காப்பீட்டுத் தொகையில், 70 சதவீதம் கோசாலைகளுக்கும், 30 சதவீதம் கோவிலுக்கும் தரப்பட வேண்டும்.
தனியார் கோசாலைகள், மாடுகள் இறப்பு குறித்து, இணை ஆணையருக்கும், செயல் அலுவலருக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியாருக்கு வழங்கப்பட்ட பசுக்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அறநிலையத்துறை அதிகாரிகள் களஆய்வு செய்ய வேண்டும்.
அறநிலையத்துறை அதிகாரிகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலைகளுக்கு மட்டுமே பசுக்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, அங்கீகரிக்கப்படாத கோசாலைகளுக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களை வழங்கியுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது. மேலும், தனியார் பசுச்சாலைகளுக்கு, வழங்கப்பட்ட பசுக்களை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ள போதும், கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொள்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்திய விலங்குகள் நலவாரியத்தால் அங்கீகரிக்கப்படாத தனியார் கோசாலைகளுக்கு, தெரிந்தெ பசுக்களை அனுப்பும் அறநிலையத்துறை அதிகாரிகள், அவற்றின் பராமரிப்பை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நமது தவறாகத்தான் இருக்க முடியும்.
அழிக்கப்படும் ஆவினங்கள்
hrce gow
ஒரு பக்கம் அறநிலையத்துறையினரின் அலக்ஷியத்தால் ஆவினங்கள் அழிந்துகொண்டிருக்க, மறுபக்கம் இறைச்சிக்காகவும் தோல் பொருட்களைத் தயாரிப்பதற்காகவும் அவை லக்ஷக்கணக்கில் கடத்தி அழிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப்பசுக்களையும், கன்றுக்குட்டிகளையும் கூட கடத்தல்காரர்கள் இறைச்சிக்காகக் கடத்துகின்றனர்.
பழம்பெருமை வாய்ந்த நமது நாகரீகத்தில் கால்நடைகளுக்கென்று ஒரு சிறப்பிடம் உண்டு. அவை நம்முடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. பசுவைப் பால் கொடுக்கும் தாயாகப் பாவித்தும், எருதுகளையும் காளைகளையும் உழவுக்குக் கைகொடுக்கும் குடும்ப அங்கத்தினராகவும் கருதி வந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் கால மற்றத்தினாலும், அன்னிய கலாச்சார மோகத்தினாலும், அவற்றை நாம் அன்னியப்படுத்தத் தொடங்கிவிட்டோம். எப்போது டிராக்டர் கண்டுபிடிக்கப்பட்டு பயனுக்கு வரத்தொடங்கியதோ அப்போதே எருதுகளையும் காளைகளையும் நாம் மறக்கத்தொடங்கி விட்டோம். ஆண் கன்றுகளைப் பயனில்லை என்று விற்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம். வாழ்நாளெல்லாம் நமக்குப் பால் கொடுத்துத் தாய்க்குச் சமமாக இருந்த பசுக்களையும், அவைகளின் பால்தரும் சக்தி குறைந்து போனவுடன் நன்றி மறந்து அவற்றையும் அடிமாடுகளாக விற்கத்தொடங்கி விட்டோம். நமது புறக்கணிப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் நம்மாலேயே வேறு பல பிரச்சனைகளையும் கால்நடைகள் சந்திக்கின்றன.
ஆவினங்களை முழுவதுமாகப் புறக்கணிக்கும் அரசு
லக்ஷக்கணக்கான கால்நடைகள் இறைச்சிக்காகவும் தோல் பயன்பாட்டிற்காகவும் கடத்தி அழிக்கப்படுவதை எப்படி கண்டுகொள்வதில்லையோ, அதே போல் அறநிலையத்துறையின் அலக்ஷியத்தால் துன்புற்று அழியும் பசுக்களையும் அரசு கண்டுகொள்வதில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தொடரில், இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின்போது சமர்ப்பிக்கப்பட்ட, 2014-15 ஆண்டுக்கான கொள்கை அறிவிப்பில், “பசு” என்கிற வார்த்தை ஒரு முறை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயல்லிதா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் “பசு” என்கிற வார்த்தை ஒருமுறை கூட இடம் பெறவில்லை.
நம்பிக்கை தரும் உயர் நீதிமன்ற உத்தரவு
அறநிலையத்துறையாலும் அலட்சியப்படுத்தப்பட்டு, அரசாலும் புறக்கணிக்கப்பட்டு துன்பத்தில் உழன்று கிடக்கும் ஆவினங்களக்கு மறுவாழ்வு பெற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது மூவர் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு. அம்மூவர் குழு இரண்டு மாதங்கள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை அரசு அலக்ஷியம் செய்யாமல், அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பக்ஷத்தில் பொது மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நன்றி- vsrc

0 comments:

Post a Comment