Monday, 1 September 2014


இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது.
இந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர்.
இந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்று கூறப்பட்டது. இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து இயக்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–
இந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது.
இதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:–
எந்த ஒரு இனம், மொழி, மதத்தை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது நாகரீக சமுதாயத்தில் ஆரோக்கியமான சிறப்பான விசயம்.
விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்ட வாழ்த்தை திரும்பப் பெற்றதன் மூலம் தி.மு.க. இந்து எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்தனை தலைவர்களின் வீடுகளிலும் பூஜை அறையும் உள்ளது. சாமி படங்களும் உள்ளது. கோவில்களில் அன்னதானம் முதல் அத்தனை திருப்பணிகளையும் செய்கிறார்கள். அப்படி இருந்தும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்ப பெற்றது, ‘இத்தனை நாட்களாக மக்களிடம் காட்டி வந்த இந்து வெறுப்பு உணர்வை தொடர்ந்து கடைபிடிப்பதாக வெளிக்காட்டும் முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment