Saturday, 20 September 2014


பெரம்பலூர்,: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 12ஆண்டுகளுக்குப்பிறகு கோயில் புனரமைப்புப் பணிகள் ரூ.2.50 கோடியில் நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது  விரைவில் பணிகள் தொடங்கப்படுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றது.  சிலப்பதிகாரக்காவிய நாயகியான கண்ணகி, தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக்கண்டு கோபமடைந்து மதுரையை எரித்தபின் அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில், சிறுவாச்சூர் தலத்தில் அமைதி அடைந்தாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுர காளியம்மனே இந்தத் தலத்திற்கு விரும்பி வந்து அமர்ந்தாள் எனவும் கூறப்படுகிறது.
அத்தகைய சிறப்புமிக்க பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாகத் திகழும் சிறுவாச்சூர் கோயிலில் தங்கத்தேர் உள்ளது. திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், முக்கிய நாட்களிலும் கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு கோயில் பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மற்றும் திருப்பணிகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 12ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கோயில் புனரமைப்புப்பணிகள் மற்றும் திருப்பணிகள் நடைபெற இந்துசமய அறநிலையத்துறை சார்பாக  அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் கூறுகையில்,சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 12ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்புப் பணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி கோயில் உட்புறத்தில் கிரானைட்  தலம்அமைக்கப்பட்டு, ராஜகோபுரத்திற்கு வர்ணங்கள் பூசப்பட உள்ளது. கோயில் பிரகாரத்தின் வெளிப்பகுதியிலுள்ள கொடுங்கைள் எனப்படும் மதில்கள் மராமத்து செய்யப்பட உள்ளது. குறிப்பாக இதுவரை ஒருவழிப்பாதையாக உள்ள சிறுவாச்சூர் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயிலின் கிழக்குப்பகுதியில் புதிதாக ஒருவாயில் அமைக்கப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ரூ2.50 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மற்றும் திருப்பணிகள் நடத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், பூர்வாங்க அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை திருச்சி உதவிஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நிர்வாகஅலுவலர் சந்திரசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் என்றார்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment