Monday, 8 September 2014


ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 68,435 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியகரகத்தில் தனிநபர் கழிப்பறைகளை அனைத்து இல்லங்களிலும் கட்டப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக, ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டு முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு அரசால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சுகாதார வளாகங்கள் அனைத்தும் புதுப்பித்து பராமரிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் திறந்தவெளிகளை கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்தி, அனைத்து மக்களும் கழிப்பறைகளை உபயோகப்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிளும் முழுமையான சுகாதார வசதி பெற தனிநபர் கழிப்பறை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 68,435 வீடுகளில் கழிப்பறைகள் இல்லாதது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த வீடுகளில் 18,092 வீடுகளில் நிர்மல் பாரத் அபியான் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் நிதி வழங்கப்பட்டு கழிப்பறை கட்டப்படும். மீதமுள்ள 50,343 வீடுகளில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் அனைத்து ஊராட்சித் தலைவர்களும் தங்களை ஈடுபடுத்தி, முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சிகளாக மாற்ற வேண்டும்.
மேலும், தங்களது பகுதி குழந்தைகளுக்கு கைகழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தால், நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
மழைக்காலம் தொடங்கவுள்ளதால் நீர் தேங்காத வகையில், ஊராட்சிப் பகுதிகளைக் கண்காணித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ. அய்யம்பெருமாள், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

-தினமணி.

0 comments:

Post a Comment