மூலவர் | : | மாரியம்மன் |
உற்சவர் | : | - |
அம்மன்/தாயார் | : | - |
தல விருட்சம் | : | வேம்பு |
தீர்த்தம் | : | - |
ஆகமம்/பூஜை | : | - |
பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராண பெயர் | : | கண்ணபுரம் |
ஊர் | : | சமயபுரம் |
மாவட்டம் | : | திருச்சி |
மாநிலம் | : | தமிழ்நாடு |
திருவிழா:
சித்திரைத்தேர் திருவிழா - ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத்த தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வர். பூச்சொரிதல் - மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர். பஞ்சப்பிரகாரம் - வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.தைப்பூசம் - 11 நாள் திருவிழா : தமிழ், ஆங்கில வருடபிறப்பு, விஜய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். தினந்தோறும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருப்பதோடு வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.
தலசிறப்பு:
பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது
பொதுதகவல்:
இக்கோயிலில் விநாயகர், முருகன், நாககன்னி சன்னதியும் உள்ளது. நாககன்னி சன்னதி முன்புள்ள வேப்ப மரத்தில் குழந்தை இல்லாத பெண்கள் தாங்கள் கட்டி வரும் சேலையின் முந்தானையை கிழித்து மரத்தில் கட்டி ஒரு கல்லை வைத்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைபேறு ஏற்படும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்ததும் இங்கு வந்து தொட்டிலை அவிழ்த்துவிட்டு அம்பாளுக்கு பூஜை செய்து திரும்புகின்றனர்
பிரார்த்தனை:
இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள்.
குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயில் ஊழியம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம். உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர், வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்
நேரிதிக்கடன்:
மொட்டை அடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்தல், தங்கரதம் இழுத்தல், அலகு குத்தல் தீச்சட்டி எடுத்தல் அங்கபிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரார்த்தனை, காணிக்கை, தைப் பூசம் - 11 நாள் திருவிழா மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு மாடு கோழி தானியங்கள் செலுத்தல் இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்
தலபெருமை:
பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் கண்ணனூரில் உள்ள தன் தாய் ஆதிமாரியம்மனைக் காண வருகிறாள். அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். இவ்வூரிலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்துவிடுகின்றனர். சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர்.
பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை. ஆனால் கண்ணனூரில் உள்ள தாய் ஆதிமாரியம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சமயபுரத்து அம்னைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாரியம்மன் பிறந்த இடமாகவும் கருதப்படுகிறது. விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சிகயாக இருப்பது போலவும், திரும்பிச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் மாரியம்மன் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள். தாயைப்பிரிந்து செல்லவதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை.
தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில். தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது. கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம். (காரணம் இத்தலத்து மாரியம்மன் சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால்) ஸ்ரீராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது
தலவரலாறு:
இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை,கால் கழுவினர். திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.
இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர். சிலைக்கு பூஜை செய்து விளையாடினர். இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்ற போது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.
மக்கள் பூ கட்டி பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது. எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது. யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது. அந்த இடத்தல் சிலையை வைத்து பூஜை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள். சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாக கருதப்படுகிறாள். இப்போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண வருவதாக ஐதீகம். இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டு வரப்படுகிறாள்
சிறப்பு:
அதிசயத்தின் அடிப்படையில்: பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது
நன்றி-தினமலர்.
0 comments:
Post a Comment