Wednesday, 5 February 2014

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏ.சி.யில் இருந்து விஷவாயு கசிந்ததினால் அதை சுவாசித்த தொழிலதிபர் இறந்தார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் தாயார் சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையறிந்த அவர் உறவினரும், தொழிலதிபருமான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் காந்திலால் (55) துக்கம் விசாரிக்க இரண்டு நாள்களுக்கு முன்பு இங்கு வந்தார். ஏற்கனவே காந்திலால் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததினால், சென்னையில் அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார்.
 மோகன்லால் வீட்டில் உள்ள ஒரு ஏ.சி.அறையில் காந்திலால் செவ்வாய்க்கிழமை தூங்கினார். இந்நிலையில் புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அவர் அறை கதவு திறக்காததால், மோகன்லால் குடும்பத்தினர் அந்த கதவு பூட்டை உடைத்து திறந்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காந்திலாலை மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு காந்திலாலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
 இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
 விசாரணையில் ஏ.சி. யில் மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டதினால் ஏற்பட்ட சிறிய தீ விபத்தின் விளைவாக, அதில் இருந்து வந்த விஷவாயுவை காந்திலால் சுவாசித்திருப்பதும், இதில் மூச்சுத் திணறலில் காரணமாக காந்திலால் இறந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment