Saturday, 8 February 2014



தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் அளிக்க வருபவர்களை பொதுமக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் பாமகவின் மகளிரணி அரசியல் எழுச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிரணி செயலர் செல்வி செல்வம் தலைமை வகித்தார். மாநாட்டில் ராமதாஸ் மேலும் பேசியது: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஒரு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள்.
பாமகவினர் மீது மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்கிறது. ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது, ஆவதும் பெண்ணாலே; ஆவதெல்லாம் பெண்ணாலே. அழிவது ஆண்களாலே. படைக்கும் ஆற்றல் பெண்களுக்குதான் உள்ளது.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதிவைத்து மதுபானங்களை விற்பனை செய்கிறார்கள். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.  பணக்காரர்களின் குழந்தைகளின் கிடைக்கும் கல்வி ஏழைகளின் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.  குன்னம் பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும் என்றார் அவர்.
மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் ஜே. குரு, மாநில துணைச் செயலர் பாலு, பெரம்பலூர் மாவட்டச் செயலர் செந்தில்குமார், அரியலூர் மாவட்டச் செயலர் வைத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment