10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 12-ம் தேதி வழங்கப்படுகிறது. அந்தந்தப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவு செய்துகொள்ள வேலைவாய்ப்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப். 9 வரை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 பள்ளிகளைச் சேர்ந்த 4,909 மாணவர்களும், 4,252 மாணவிகளும் என மொத்தம் 9,161 பேர் தேர்வெழுதினர். இதில் 4,457 மாணவர்களும், 4,001 மாணவிகளும் என மொத்தம் 8,458 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேரடியாக மற்றும் தட்கல் முறையில் பணம் செலுத்தி விண்ணப்பித்து தேர்வெழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நாளிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகள் மூலம் நேரடியாகத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 12ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இதை முன்னிட்டு தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிய வேலைவாய்ப்புத் துறை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடும்ப அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். இதர ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவை பள்ளியிலேயே உள்ளதால், கணினிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அலுவலர்களால் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதியலாம்.
பதிவு விவரங்களை முழுமையாகச் செயல்படுத்த வசதியாக வேலைவாய்ப்புத் துறை சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, அனைத்துப் பள்ளி கணினி ஆசிரியர்கள், கணினி இயக்குநர்களுக்கு பதிவு விவரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்ற பிறகு, அவற்றை பதிவு செய்யும் மாணவர்கள் தங்களது குடும்ப அட்டையிலுள்ள முகவரிப்படி பதியலாம்.
15 நாள்களுக்கு செய்யப்படும் பதிவு 12-ம் தேதி கணக்கிலேயே வைக்கப்படும் என்பதால் ஜூன் 27-க்குள் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பதிவு செய்துகொள்ளலாம் v.kalathur seithi .
0 comments:
Post a Comment