Monday, 1 December 2014


தமிழ்நாட்டில் தற்போது 1,50,000 பேர் ஹெச்ஐவி தொற்றுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மீரா பவுண்ட்டேஷன் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம். ராஜாமுகமது ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஹெச்ஐவி என்னும் வைரஸ் பரிசோதிக்கப்படாத ரத்தம், போதை ஊசி பழக்கம், தொற்று உள்ளவர்களிடம் பாது காப்பற்ற உடலுறவு மூலம் பரவுகிறது.
தொற்றுள்ள கர்ப்பிணிகளிடம் இருந்து வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஹெச்ஐவி பரவும் அபாயம் 2007-ல் ஒரு சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற் போது அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் தொடர் விழிப் புணர்வு பிரச்சாரத்தால், இது 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் வெற்றியடைந்துள்ளதைத்தான் இவை காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு பெற்றோரும் பிரசவத்துக்கு முன்னர் ஹெச்ஐவி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஹெச்ஐவி மனிதனின் உடலில் புகுந்துவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைப்பொருத்து 6 முதல் 8 ஆண்டுகள் கழித்தே அவர் எய்ட்ஸ் நோயாளி என்ற நிலைக்கு வருகிறார். எதிர்ப்பு சக்தி குறையும்போது, எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காச நோய், காலரா ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கும். முடிவில் உயிருக்கு உலை வைத்துவிடும்.
தன்னம்பிக்கை, உடற்பயிற்சி, மன உறுதியோடு சத்தான உணவும், மருந்துகளும் சாப்பிடும் ஹெச்ஐவி தொற்றுள்ளவர்கள், இன்று வரை தொடர்ந்து 30 ஆண்டாக சாதாரண மனிதர்களை காட்டிலும் உடல் ஆரோக்கியமுடன் வாழ்கின்றனர். நிறைய துறைகளில் சத்தமில் லாமல் சாதித்துக் கொண்டிருக் கின்றனர். மற்ற தொற்றுநோய்களை போல இதுவும் ஒரு சராசரி நோய்தான்.
அரசு மருத்துவமனைகளில் ஹெச்ஐவி தொற்றுகளை பரிசோ தனை செய்யவும், தேவையான மருந்து, ஆலோசனைகளை வழங்கி தன்னம்பிக்கை தரவும் ஆற்றுப்படுத்தும் மையங்கள் உள்ளன. வாழ்க்கையே இருண்டு விட்டதாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேசிய அளவில் கடந்த 30 ஆண்டில் ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு விழிப்புணர்வு செய்த பின்னரும் இப் போதும் பலர் ஹெச்ஐவி தொற் றுக்கு ஆளாவது தொடர்கிறது. இருப்பினும் தொடர் திட்டங்கள், விழிப்புணர்வால் 2000ல் இருந்த ஹெச்ஐவி தொற்று சதவீதம் 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


-தி இந்து.

0 comments:

Post a Comment